search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weightlifter"

    ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு திடீரென விலகி இருக்கிறார். #WeightLifter #MirabaiChanu
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டியில் 48 கிலோ உடல் எடைப் பிரிவில் மொத்தம் 194 கிலோ எடை தூக்கி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

    மணிப்பூரை சேர்ந்த 23 வயதான மீராபாய் சானு, இந்தோனேஷியாவில் வருகிற 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடைபெறும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய பளுதூக்குதல் அணியில் இடம் பிடித்து இருந்தார். இந்த போட்டிக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது முதுகுவலி பிரச்சினை ஏற்பட்டது. இந்த காயத்துக்காக அவர் பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றாலும், காயத்தின் தன்மை குறித்து துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் மீராபாய் சானு இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘காயத்தில் இருந்து மீண்டு வரவும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு தயாராகவும் தனக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய பளுதூக்குதல் அணியின் தலைமை பயிற்சியாளர் விஜய் சர்மாவும், மீராபாய் சானுவின் காயம் குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு அறிக்கை அளித்துள்ளார்.

    அதில் முக்கியமான ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு முன்பாக காயத்தில் இருந்து மீண்டு வர மீராபாய் சானுவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

    இது குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளன பொதுச்செயலாளர் செக்தேவ் யாதவிடம் கேட்ட போது, ‘ஆசிய விளையாட்டு போட்டியில் மீராபாய் கலந்து கொள்ளப்போவதில்லை என்பது உண்மை தான். இது குறித்து மத்திய விளையாட்டு துறைக்கு அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்படும்’ என்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மீராபாய் சானு போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி துர்க்மெனிஸ்தானில் வருகிற நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  #WeightLifter #MirabaiChanu #tamilnews

    ×