search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "well down"

    மத்திய பிரதேசத்தில் 70 அடி ஆழ்குழாய் கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் 12 மணி நேரம் போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டான்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள கேர்கர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆதித்யா பிரதாப். இவரது மகன் தேஜ்பிரதாப்.

    2 வயதான அவன் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள வயல் பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அன்று இரவு 10.30 மணி அளவில் அவன் மீண்டும் வயல் ஓரத்தில் சென்று தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தான்.

    அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறுக்காக தோண்டிய இடம் மூடப்படாமல் இருந்தது. அதை கவனிக்காமல் ஓடிய தேஜ்பிரதாப் கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து விட்டான். அவனது தந்தை ஆதித்ய பிரதாப் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவர் சிங் ராங்கி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து உதவி கோரினார். போலீசார் அந்த வயல் பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறு அருகே குழி தோண்டப்பட்டது. இதற்கிடையே குழாய் மூலம் அந்த சிறுவனுக்கு ஆக்சிசன் செலுத்தப்பட்டது. மேலும் தொலைத் தொடர்பு கருவி மூலம் அந்த சிறுவனுக்கு தைரியம் அளிக்கும் வகையில் உறவினர்கள் பேசிக் கொண்டே இருந்தனர்.

    நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் அந்த சிறுவன் ஆழ்குழாய் கிணற்றுக்குள் சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 70 அடி ஆழத்துக்கு அருகில் பள்ளம் தோண்டப்பட்டு அந்த குழாய் துண்டிக்கப்பட்டது. 12 மணி நேரம் இந்த மீட்பு பணி நடந்தது.

    நேற்று பகல் 11 மணிக்கு அந்த சிறுவன் சிக்கியிருந்த குழாய் ஓட்டை போடப்பட்டு அதிலிருந்து தேஜ்பிரதாப்பை மீட்டனர். அவன் மயங்கிய நிலையில் இருந்தான்.

    உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் கழித்து அவன் சகஜ நிலைக்கு திரும்பினார். 70 அடி ஆழம் வரை சென்று உயிர் தப்பிய அந்த சிறுவனை மாவட்ட அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ×