search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Windmills"

    தென்மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால், காற்றாலைகள் மூலம் தினமும் 10 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. #Windmill #ElectricityPower
    சென்னை:

    இந்தியாவில் உள்ள மின் உற்பத்தியில் காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் காற்றாலைகள் மூலமே சுற்றுசூழலுக்கு எந்தவகையிலும் மாசு இல்லாமல் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றலைகள் தமிழகத்தில் தான் செயல்படுகின்றன.

    தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் மொத்தம் 8 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. காற்றின் வேகமும், தாக்கமும் அதிகரிக்கும் சமயங்களில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார அளவும் அதிகரிக்கிறது. அந்த சமயங்களில் அனல், நீர், அணு மற்றும் சூரிய சக்தி மின்சார உற்பத்தி அளவு சற்று குறைக்கப்படுகின்றன.

    இந்தநிலையில் கேரளாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதேசமயம் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்திருக்கிறது. முக்கியமாக நெல்லை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழையும் பெய்திருக்கிறது. இதனால் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கிறது.

    அந்தவகையில் கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் தினமும் 10 கோடி யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இது காற்றாலை மின் உற்பத்தியின் முக்கிய சாதனையாகவும் பதிவாகி இருக்கிறது.

    இதுகுறித்து இந்திய காற்றாலைகள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    எத்தனை வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரமே மாசு இல்லாத மின்சாரம் ஆகும். காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதன் உற்பத்தி மடங்கும் அதிகரிக்கும். வழக்கமாக மே முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும்.

    தற்போது மிக அதிக அளவில் காற்று வீசுவதால், அதிக மின்சாரம் உற்பத்தியாகி இருக்கிறது. அந்தவகையில் கடந்த 3 நாட்களாக தினமும் 100 மில்லியன் யூனிட் அதாவது 10 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் ஒட்டுமொத்த மின் பயன்பாட்டில் 35 சதவீதத்தை காற்றலைகள் பூர்த்தி செய்திருக்கின்றன. கடந்த ஆண்டும் ஆகஸ்டு மாதம் இதேபோல 2 நாட்கள் மின் உற்பத்தி 10 கோடி யூனிட்டை தாண்டியது. தற்போது இந்த ஆண்டும் அச்சாதனை நடந்திருக்கிறது.

    பொதுவாகவே காற்றின் வேகம், காற்றின் தன்மை உள்ளிட்டவை குறித்து முன்கூட்டியே தேசிய காற்றாலை மின் உற்பத்தி ஆணையத்துக்கும், தமிழக மின் வாரியத்துக்கும் அறிக்கை தெரிவித்து வருகிறோம்.

    காற்றாலைகளின் அதீத மின் உற்பத்தி காரணமாக தமிழகத்தின் மின்தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், பிற மாநிலங்களுக்கும் நாம் விற்பனை செய்யும் நிலைக்கு இருக்கிறோம். இதனால் மின்வாரியத்துக்கும் நல்ல பெயர் கிடைப்பதுடன், வருவாயும் பெருகுகிறது.

    ஆனால் இந்தமுறை நாங்கள் ஆய்வு செய்ததில் பெரும்பாலான காற்றாலைகள் 6 முதல் 8 மணி நேரம் வரை இயங்கவில்லை என்பதை அறிந்தோம். இதுகுறித்து மின்வாரியத்துக்கும் தகவல் தெரிவித்திருக்கிறோம். ஆனால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிக மின்சாரம் கிடைத்தால் பிற மாநிலங்களுக்கு அதை விற்பனை செய்யலாம். மேலும் சில ஒப்பந்தங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்ட மின்சாரத்தை, தேவைப்படும்போது நாம் பெற்றுக்கொள்ளவும் முடியும். குறிப்பாக தமிழகத்தின் மின் பற்றாக்குறை காலம் எனப்படும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்த ஒப்பந்தம் நமக்கு பெரிதும் கைகொடுக்கும்.

    எனவே காற்றாலைகளை முறையாக இயங்க செய்தால், கிடைக்கும் உபரி மின்சாரம் நமக்கு நல்ல வருவாயை ஈட்டும். அதேநேரம் முக்கியமான நேரங்களில் மின்சாரத்துக்காக பிறமாநிலங்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படாது.

    தற்போது தென்மாநிலங்களில் மழை பெய்துகொண்டிருப்பதால், மின் தேவை சற்று குறைவு தான். ஆனால் வடமாநிலங்களில் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அதேவேளையில் இன்னும் ஒரு வார காலத்துக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. எனவே காற்றாலைகளை முழுமையாக பயன்படுத்தினால் தற்போது கிடைப்பதை விட 15 சதவீதம் கூடுதல் மின்சாரத்தைப் நாம் பெற முடியும். இதனால் நமக்கு மேலும் 2 கோடி யூனிட் மின்சாரம் தினமும் உபரியாகவே கிடைக்கும். எனவே காற்றாலைகளை முழுமையாக இயங்க செய்து, கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×