search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women polling booths"

    மராட்டியத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. #WomenPollingBooth
    மும்பை:

    மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு 8.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 4.16 கோடி பேர்.

    பெண் வாக்காளர்கள் மத்தியில் வாக்குரிமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முழுக்க முழுக்க பெண்களே பணியாற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டு வந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் 288 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றுவார்கள் என்று நேற்று மாநில தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த தேர்தலில் மராட்டியத்தில் பெண்கள் ஓட்டு 57 சதவீதம் மட்டுமே பதிவானது. சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட 80 சதவீதம் பெண்கள் ஓட்டு பதிவான நிலையில் மராட்டியம் அந்த பட்டியலில் மிகவும் பின்தங்கி இருந்தது.

    இதையடுத்து மராட்டியத்தில் பெண் வாக்காளர்களை ஊக்குவிக்க இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மராட்டியத்தில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதன்படி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்படுகிறது.

    இந்த வாக்குப்பதிவு மையத்தில் தலைமை அதிகாரி, வாக்குப்பதிவு பணியாளர்கள் மட்டும் அல்லாமல் போலீசாரும் பெண்களாகவே இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களே பணியாற்றினாலும் ஆண் வாக்காளர்களும் அங்கு ஓட்டுபோட முடியும்.

    பெண் பணியாளர்கள் வழிநடத்தும் வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாக்குப்பதிவு மையங்கள் பெரும்பாலும் தாசில்தார் அலுவலகம் அல்லது போலீஸ் நிலையங்கள் அருகிலேயே அமைக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 
    ×