search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Art college"

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மரக்காணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • மிகவும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து எஸ்.டி பிரிவிற்கு மாற்றி அதற்கான சாதிசான்றும் வழங்கியுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு தினத்தை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மரக்காணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்தரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணைச் சேர்மன் பழனி, பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி ஆளவந்தார், தாசில்தார் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை மற்றும் ரவி, வேளாண் துறை உதவி இயக்குனர் சரவணன், மரக்காணம் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் உள்பட வருவாய்த்துறை தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ரூ 1.33 கோடி மதிப்பில் 317 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை தையல் எந்திரம் வேளாண் உபகரண கருவிகள் முதியோர் உதவித்தொகை மற்றும் இந்த பகுதியில் உள்ள நரிக்குறவர்களுக்கு எஸ்.டி பிரிவுக்கான வகுப்பு சான்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:-

    தமிழகத்தில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை பார்த்து திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கின்றனர். எல்லோருக்கும் எல்லா உதவிகளும் கிடைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி கோடீஸ்வரர்களுக்கு நிகரான உதவி கூட சாதாரண கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொள்கையாக உள்ளது. மரக்காணம் பகுதியில் தற்போது பறவைகள் சரணாலயம், பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை, மீனவர்கள் நலம் கருதி மீன்பிடி துறைமுகம் மற்றும் மீனவர் கிராமங்களில் மீன் தளம் போன்றவை பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நரிக்குறவர் மக்கள் தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கை நிறைவேறவில்லை. இந்நிலையில் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மிகவும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து எஸ்.டி பிரிவிற்கு மாற்றி அதற்கான சாதிசான்றும் வழங்கியுள்ளார். இதேபோல் மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையை நவீன முறையில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பகுதியில் பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரியை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×