search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yemens peace talks"

    ஜெனிவா நகரில் நடைபெற்ற ஏமன் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் மறுத்து விட்டதால் ஐ.நா.சபையின் இந்த முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது. #YemenPeaceTalks #HouthiPeaceTalks
    ஜெனிவா:

    ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

    இந்நிலையில், ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க ஐ.நா. சபை சிறப்பு பிரதிநிதியாக மார்ட்டின் கிரிஃபித்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    சுவிட்ஸர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கடந்த 3 நாட்களாக ஏமன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தையில் ஏமன் வெளியுறவுத்துறை மந்திரி காலேத் அல்-யாமனி பங்கேற்றார்.

    போர் கைதிகளாக பிடிபட்டுள்ள ஹவுத்தி போராளிகளை விடுதலை செய்வது, மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை அனுமதிப்பது. குறிப்பாக, டாயிஸ் நகரில் அரசு படைகளால் சுற்றிவளைத்து சிறைபிடிக்கப்பட்டுள்ள ஹவுத்தி போராளிகளை விடுவிப்பது, சனா நகரில் உள்ள விமான நிலையத்தை மீண்டும் திறப்பது ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஏமன் அரசு அதிகாரிகளிடம் கிரிஃபித்ஸ் வலியுறுத்தினார். 

    இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் சில நிபந்தனைகளை விதித்தனர்.

    பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஜெனிவாவுவுக்கு வரும் எங்கள் விமானத்தை சவுதி தலைமையிலான பன்னாட்டு படைகள் வழிமறித்து சோதனையிட கூடாது. 

    உள்நாட்டு போரில் படுகாயமடைந்த எங்களது இயக்கத்தை சேர்ந்தவர்களை அந்த விமானத்தில் மேல்சிகிச்சைக்காக ஓமன் நாட்டுக்கு அழைத்து செல்வதை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், அரசு தரப்பினர் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஹவுத்தி போராளிகள் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சி தற்போதைய நிலவரப்படி தோல்வியில் முடிந்துள்ளது.

    எனினும், ஏமன் தலைநகர் சனா அல்லது ஓமன் நாட்டு தலைநகரான மஸ்கட் நகரில் ஹவுத்தி தலைவர்களை விரைவில் சந்தித்துப் பேச முயற்சி செய்து வருவதாக ஐ.நா. சிறப்பு தூதர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். #YemenPeaceTalks  #HouthiPeaceTalks
    ×