search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth Pravasi Bharatiya Diwas"

    வாரணாசியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டை இன்று துவக்கி வைத்தனர். #YogiAdityanath #SushmaSwaraj #YouthPravasiBharatiyaDiwas
    வாரணாசி:

    மத்திய அரசின் சார்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் பங்குவகிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பிரவசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 15வது பிரவசி பாரதிய திவாஸ் மாநாடு, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கியது. வாரணாசில் இந்த மாநாடு முதல் முறையாக நடக்கிறது. இந்த ஆண்டுக்கான பிரவேச பாரதி திவாஸின் கருப்பொருள் "புதிய இந்தியாவை உருவாக்க இந்திய புலம்பெயர்ந்தோர்களின் பங்கு" ஆகும்.

    மாநாட்டின் முதல் அங்கமாக, இளைஞர்களுக்கான பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



    இன்று முதல் 23 வரையிலான மூன்று நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், பல்வேறு துறைகளின் நிபுணர்கள், தங்கள் துறை சார்ந்த கருத்துக்களை பதிவு செய்ய உள்ளனர். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காஷ்மீர், சாரநாத் மற்றும் கங்கா காட்ஸ் போன்ற புகழ்பெற்ற இடங்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    அடுத்த மூன்று நாட்களில் கலந்துரையாடல்களின் போது, ​​இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல உலகத் தலைவர்கள்,  புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கினைக் குறித்து கலந்துரையாடுவார்கள்.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்:

    இன்று நடைபெறும் நிகழ்வில் அடுத்த தலைமுறை மீது, குறிப்பாக உத்திரபிரதேச இளைஞர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான இளம் புலம்பெயர்ந்தோர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். துவக்க விழாவில் உ.பி முதல்வருடன் மத்திய மந்திரிகள் சுஷ்மா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கன்வல் ஜீத் சிங் பக்ஷி, நார்வே எம்.பி.  ஹிமான்ஷு குலதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    நாளை நடைபெற உள்ள நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைமை விருந்தினரான மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் ஜுக்நாத் ஆகியோர் ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டை துவக்கி வைக்க உள்ளனர். சவால்கள் மற்றும் வாய்ப்புகள் முதல்,  நிலையான வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் திறன் வரை பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரவசி பாரதிய பிரதிநிதிகளுக்கும், மாநில தலைவர்களுக்கும் பிரதமர் மோடி மதிய விருந்தினை வழங்க உள்ளார்.

    புதன்கிழமை  நடைபெற உள்ள விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.ஐ., பி.ஐ.ஓ.க்கள் மற்றும் என்ஆர்ஐக்களால் நடத்தப்படும் அமைப்புகளுக்கு பிரவசி பாரதிய சம்மான் விருது (பிபிபிஏ), வழங்கப்படும். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு துறைகளில் கணிசமான பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார்.

    மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும் பிரதிநிதிகளை உற்சாகமூட்டவும், ஓர் அற்புத அனுபவத்தை வழங்கவும் கங்கை மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட்டு கண்கவர் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. #YogiAdityanath  #SushmaSwaraj  #YouthPravasiBharatiyaDiwas

    ×