என் மலர்
நீங்கள் தேடியது "அபராதம்"
- குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
- குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அட்சய திருதியை போன்ற விழா காலங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணம் நடப்பது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வருவதால் அதை தடுக்குமாறு அறிவுறுத்துகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்து குழந்தை திருமணத்தை ஒப்பந்தம் செய்வது, எந்தவொரு குழந்தை திருமணத்தையும் நடத்துபவர், இயக்குபவர் அல்லது தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்டப் பூர்வமாக தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்ட விரோதமான வேறு எந்த நபரும், திருமணத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் செய்பவர் அல்லது அதை நடத்த அனுமதிப்பவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வது அல்லது பங்கேற்பது குற்றமாகும்.
குழந்தை திருமணம் நடத்துவதை தடுக்க தவறினால் 2 ஆண்டுகள் வரை கடுமையான ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர்.
- ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கனூத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்-காவேரி தம்பதியின் மகள் நந்தினி (வயது 14). இவர் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு காதில் கட்டி ஏற்பட்டு வலி இருந்து வந்தது.
இதனால் கடந்த 9.10.2021 அன்று நந்தினியை ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மல்டி லெவல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதில் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், முன் பணமாக ரூ.20 ஆயிரம் கட்டுமாறும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு காதில் இருந்து தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது. இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டதும் பெற்றோர்கள் கதறி அழுதனர். தங்கள் மகளுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால்தான் அவர் உயிரிழந்து விட்டதாக ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. மாணவியின் தரப்பில் வக்கீல்கள் ஆரோக்கிய செல்வரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர் வாதாடினர். விசாரணை நிறைவடைந்த நிலையில் குறைதீர் ஆணைய தலைவர் சித்ரா, உறுப்பினர் பாக்கியலெட்சுமி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்தது உறுதியானதால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம், டாக்டர் நாச்சிமுத்து ரூ.4 லட்சம், டாக்டர்கள் சுதாகர், தீபக் ஆகியோர் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் செலுத்திய ரூ.20 ஆயிரம் பணத்துடன் சேர்த்து 2 மாதத்துக்குள் வழங்காவிட்டால் 12 சதவீத வட்டியுடன் வழங்க நேரிடும் என்று உத்தரவிட்டனர்.
- காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார்.
- பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் எழம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. பள்ளி ஆசிரியையான இவர், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந்தேதி தனது காரில் காசர்கோட்டில் இருந்து எழம்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் கோழிக்கோடு பய்யோலி தேனாங்கல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.
காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார். ஆனால் அவரை கழிப்பறையை பயன்படுத்த பங்க் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டது.
வாடிக்கையாளரை கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்காததால் பெட்ரோல் பங்கின் உரிமையாளரான பாத்திமா ஹன்னாவுக்கு ரூ1.65 லட்சம் அபராதம் விதித்து ஆணைய தலைவர் பேபிச்சன் வெச்சச்சிரா, உறுப்பினர் நிஷாத் தங்கப்பன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில் ரூ1.50 லட்சத்தை இழப்பீடாகவும், ரூ.15 ஆயிரத்தை கோர்ட்டு செலவுக்காகவும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர்.
- வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பேச்சிப்பறை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் தாஸ். இவருக்கு களியல் வனச்சரகம் தொடலிக்காடு வனப்பகுதியை ஒட்டி கடையல் கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்திற்கு அரசு உரிமை கோரியதால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுடன் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர். இதனால் வனத்துறையினரை சிவில் சிறையில் அடைக்க வேண்டும் அல்லது வனத்துறைக்கு சொந்தமான வாகனம், களியல் வனச்சரக அலுவலகத்தின் கம்ப்யூட்டர், அலமாரி, மேசை உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என குழித்துறை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டேவிட் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் அதனை எதிர்த்து வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை அமர்வு நீதிபதி விஜயகுமார், வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், அந்த பணத்தை 12 வாரங்களுக்குள் டேவிட்தாஸிடம் வழங்கவும் உத்தரவிட்டார்.
- 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
- தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
- கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2.16 கோடி பயணிகள் பிடிபட்டுள்ளனர்.
- அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரெயில்வே ரூ.562 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் இன்றி பிடிபட்ட பயணிகள் எண்ணிக்கை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மக்களவையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
கடந்த 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த சுமார் 2.16 கோடி பயணிகளை இந்திய ரெயில்வே கண்டறிந்தது. அந்தப் பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.562.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கேமராக்கள், ஏ.ஐ. அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம் டிக்கெட் இல்லாத பயணிகளைக் கண்டறியும் விகிதம் உயர்ந்துள்ளது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அபராத வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் எடுக்காத பயணிகள் பதிவாகியுள்ளனர். டிக்கெட் இல்லாத பயணம் ரெயில்வேக்கு ஏராளமான நிதி இழப்பை ஏற்படுத்துகிறது.
உள்ளூர் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அல்லது ரெயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, மண்டல ரயில்வேக்களால் அவ்வப்போது சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
டிக்கெட் சரிபார்ப்பு செயல்பாடு மற்றும் சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்களை நடத்துவது இந்திய ரெயில்வேயில் தொடர்ச்சியான பயிற்சியாகும். இந்த நடவடிக்கைகள் முறைகேடுகளைக் குறைக்கவும், ரெயில்வே வருவாயை மேம்படுத்தவும் உதவுகின்றன என தெரிவித்தார்.
- தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டினார்.
- இதை எதிர்த்தே அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொல்வதை விட மோசமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டிய சிவசங்கர் அகர்வால் என்பவரின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு ஆணையம் (CEC) சிவசங்கர் அகர்வால் வெட்டிய ஒவ்வொரு மரத்துக்கும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரைத்திருந்தது. இதை எதிர்த்தே அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் மனு மீதான விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், சுற்றுச்சூழல் விஷயத்தில் கருணை காட்டக்கூடாது. அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது ஒரு மனிதனைக் கொல்வதை விட மோசமானது.
அனுமதியின்றி வெட்டப்பட்ட 454 மரங்கள் வழங்கி வந்த பசுமையை மீண்டும் உருவாக்க குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும் என்று கூறி, வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் CEC பரிந்துரையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.
- இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
- இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் '804' என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் அவருக்குச் சுமார் 1.4 மில்லியன் அபராதம் விதித்திருக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, அமீர் ஜமால் 804 என்ற நம்பர் எழுதியிருந்த தொப்பியை அணிந்திருந்தார். இந்த 804 என்ற எண்ணானது, சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானுக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானின் கைதி நம்பரைக் குறிக்கிறது.
இதனால், கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவந்து இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்கள் மீது இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தாமதமாக வந்ததற்காக சைம் அயூப், சல்மான் அலி அகா, அப்துல்லா ஷஃபிக் உட்படப் பல பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, தாமதமாக வந்ததற்காக சுபியான் முகீம், அப்பாஸ் அஃப்ரிடி, உஸ்மான் கான் ஆகியோருக்குத் தலா 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
- பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் தான் பொறுப்பு.
- அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் பணம் தர முன்வரவில்லை.
திருவனந்தபுரம்:
கர்நாடக மாநிலம் பெங்களூரூவை சேர்ந்தவர் ஜெம்ஷீத். தொழில்நுட்ப வல்லுனரான இவர், கேரள மாநிலம் கோட்டக்கல் அருகே உள்ள திருரூருக்கு செல்ல யஷவந்த்பூர்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தட்கல் முறையில் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றுள்ளார்.
பயணநாளில் பெங்களூரூ ரெயில் நிலையம் வந்த அவர் தான் செல்ல வேண்டிய ரெயிலில் இரவு ஏறி, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்ற போது அங்கு முன்பதிவு செய்யாத 5 பயணிகள் இருப்பதை பார்த்துள்ளார். அவர்களிடம் இது தனது இருக்கை என்று ஜெம்ஷீத் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் நகரவில்லை.
இதனை தொடர்ந்து 10 மணி நேர பயணத்தை ஜெம்ஷீத் இரவில் நின்று கொண்டே சென்றுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.4 லட்சம் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு பல மாதங்கள் நடைபெற்ற நிலையில், ஜெம்ஷீத்துக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.5 ஆயிரமும் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி ஜெம்ஷீத் கூறும் போது, நான் பாதிக்கப்பட்ட போது ரெயில்வே போலீசாரிடம், தெரிவித்தேன். அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்.
அவரிடம் கூறியும் பலன் கிடைக்காததால் ரெயில்வே உதவி எண் 139-க்கு தொடர்பு கொண்டேன். ஆனால் அது பயனற்றதாக இருந்தது. ரெயில்வே செயலியும் கை கொடுக்காததால் திருரூரை அடைந்ததும் ரெயில் நிலைய மேலாளரிடம் புகார் அளித்தேன்.
ஐ.ஆர்.சி.டி.சியின் பாலக்காடு மற்றும் பெங்களூரூ ரெயில்வே பிரிவுகளுக்கு புகார் கொடுத்தும் பலன் கிடைக்காததால் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன் என ஜெம்ஷீத் தெரிவித்தார்.
பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்கும், டிக்கெட் பெற்ற பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட படுக்கைகளை வழங்குவதற்கும் இந்திய ரெயில்வே தான் பொறுப்பு என்று நுகர்வோர் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
ரெயில் பயணிகள் தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு ரெயில்வே துறையை பொறுப்பேற்க வைக்க வேண்டும். ரெயில்களில் கொசுக்கள் கடித்தால் கூட ரெயில்வே நிர்வாகம் மீது நாம் வழக்கு தொடர முடியும் என்றும் ஜெம்ஷீத் கூறியுள்ளார்.
தற்போது இந்த வழக்கில் ரெயில்வேக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் பணம் தர முன்வரவில்லை. எனவே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ. 10 ஆயிரம் அபராதம்.
- புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவருக்கும், அவருடன் பயணிப்பவருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் என்பன உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தஞ்சையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு போலீசார் உடனுக்குடன் அபராதம் விதித்து வருகின்றனர்.
தொடர்ந்து வாகன சோதனை நடந்து வருகிறது.
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியோடு நிறைவடைகிறது.
- சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
சென்னை :
வருமான வரி சட்டம் பிரிவு 139, துணை பிரிவு (1)-ன்படி 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதியோடு நிறைவடைகிறது. இந்த கால கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.
- நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
- மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.
நாகர்கோவில், அக்.27-
புதிய சட்டத்திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் செட்டிகுளம் கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார், வடசேரி பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். நாகர்கோவில் நகரில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 64 பேருக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் அபராதம் விதித்துள்ளனர் .இதன் மூலமாகரூ. 64 ஆயிரம் வசூல் ஆகியுள்ளது. இதே போல் கோட்டார், வடசேரி போலீசாரும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் பலரும் சிக்கினார்கள் . பெண்களும் சிக்கி தவித்தனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இன்று காலையிலும் ஹெல்மெட் சோதனை நடந்தது. ஹெல்மெட் அணியாமல் பின்னால் இருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.