search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொருக்குப்பேட்டை திருவொற்றியூர்"

    கொருக்குப்பேட்டை- திருவொற்றியூர் 4-வது வழித்தடம் இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை சென்டிரல் மற்றும் மூர்மார்க்கெட் புறநகர் ரெயில் சேவையில் தினமும் ஏற்படும் காலதாமதத்தால் பல்வேறு சிரமங்கள் வருகின்றன.

    வட மாநிலங்களில் இருந்து வரும் ஒருசில ரெயில்களை மூர்மார்கெட்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சரியான நேரத்தில் இயக்க முடிவதில்லை. இதற்கு காரணம் கூடுதல் ரெயில் பாதை இல்லாததே ஆகும்.

    நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொருக்குப்பேட்டை- திருவொற்றியூர் இடையே உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    அதே போல சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையேயும் 4-வது வழித்தடம் நிறுவப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    கூடுதல் வழித்தடங்கள் அமைக்கப்படுவதன் மூலம் வெளியில் இருந்து வரும் ரெயில்கள் கொருக்குப்பேட்டை வழியாக வந்து எழும்பூர் மற்றும் கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு செல்ல உதவும். மேலும் பேசின்பிரிட்ஜ் வழியாக ரெயில்களை நெரிசல் ஏற்படாமல் இயக்கவும் உதவும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை-அத்திப்பட்டு- கும்மிடிப்பூண்டி- கூடூர் மார்க்கம் அதிக ரெயில் சேவை கொண்டதாகும். தெற்கு ரெயில்வேயில் மிகவும் பிசியான வழித்தடமாக இது அமைந்துள்ளது. புறநகர் மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்கள் ஆகியவை நாள் முழுவதும் இதில் இயக்கப்படுகின்றன.

    அதிக பயன்பாடு உள்ள வழித் தடமாக இது இருப்பதால் கூடுதலாக ரெயில் பாதை அமைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தெற்கு ரெயில்வேயில் முக்கிய வழித்தடமாக கருதப்படும் இந்த மார்க்கத்தில் சென்னை கடற்கரை- அத்திப்பட்டு இடையே 3-வது மற்றும் 4-வது வழித்தடம் ரூ.150 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

    இதற்கிடையில் கொருக்குப்பேட்டை- அத்திப்பட்டு இடையே 3-வது பாதை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அத்திப்பட்டு - எண்ணூர்- திருவொற்றியூர் வரை 4-வது பாதை அமைக்கும் பணி 2016-ல் தொடங்கப்பட்டது.

    தற்போது பணிகள் நடைப்பெற்று வரும் கொருக்குப்பேட்டை- திருவொற்றியூர் 4-வது வழித்தடம் இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    4-வது வழித்தடம் தயாராகி விட்டதால் இனி கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்தை தாமதமின்றி கையாள முடியும். குறிப்பிட்ட நேரத்திற்கு அனைத்து ரெயில்களும் வந்து செல்ல இது உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×