என் மலர்
நீங்கள் தேடியது "டிரைவர்"
- தனது முதல் நாள் வேலையை, ஸ்விப்ட் பஸ்சில் கண்டக்டராக பணி புரியும் தன்னுடைய தாயுடன் இணைந்து பார்க்க ஸ்ரீராக் விரும்பினார்.
- யமுனா கண்டக்டராகவும், அவரது மகன் ஸ்ரீராக் டிரைவராகவும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி யமுனா. இவர்களது மகன்கள் சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக். யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் 2009-ம் ஆண்டில் இருந்து தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
அவருக்கு தனது மகன் ஸ்ரீராக்கை அரசு போக்குவரத்து கழகத்தில் பணிக்கு சேர்த்து விட வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்தது. இதற்காக அவர் தனது மகனை டிரைவராக பயிற்சி பெற செய்தார். பயிற்சி முடிந்ததும் வனத்துறையில் தற்காலிக டிரைவராக ஸ்ரீராக் பணிக்கு சேர்ந்தார்.
அதில் இருந்து கொண்டே அவர் அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அதன் பலனாக கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் ஸ்ரீராக்கிற்கு டிரைவர் வேலை கிடைத்தது. அவருக்கு திருவனந்தபுரம் நகரில் ஓடக்கூடிய அரசு போக்குவரத்து கழக மின்சார ஸ்விப்ட் பேருந்தில் டிரைவர் வேலை கிடைத்தது.
தனது முதல் நாள் வேலையை, ஸ்விப்ட் பஸ்சில் கண்டக்டராக பணி புரியும் தன்னுடைய தாயுடன் இணைந்து பார்க்க ஸ்ரீராக் விரும்பினார். தன்னுடைய இந்த விருப்பத்தை போக்குவரத்து கழக அதிகாரியிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார்.
இதையடுத்து திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு செல்லும் மின்சார பேருந்தை முதன்முதலாக ஸ்ரீராக் இயக்கினார். அவரின் விருப்பப்படி அவரது தாய் யமுனா அதே பஸ்ஸில் கண்டக்டராக இருந்தார்.
தாய் கண்டக்டராகவும், மகன் டிரைவராகவும் இருந்து இயக்கிய பஸ்சை பலரும் ஆர்வமாக பார்த்தனர். தாயும் மகனும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்த அந்த நிகழ்வை காண யமுனாவின் மற்ற மகன்கள், ஸ்ரீராக்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கிழக்கு கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அவர்கள் முன்னிலையில் யமுனா கண்டக்டராகவும், அவரது மகன் ஸ்ரீராக் டிரைவராகவும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்தனர். மேலும் வேலை இடைவேளையின்போது தாய்-மகன் இருவரும் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை ஒரே இடத்தில் அமர்ந்து பகிர்ந்து சாப்பிட்டனர். தன்னுடைய மகனுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் வேலை கிடைத்தது மட்டுமின்றி, அவர் ஓட்டிய பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய நிகழ்வு யமுனாவுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.
மகன் ஓட்டிய அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய யமுனா 2022-ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் ஸ்விப்ட் பஸ்சின் முதல் பெண் ஊழியர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- துர்க்கையாவிடம் போதிய பண வசதி இல்லை.
- டெப்போவில் இருந்து அரசு பஸ் காணாமல் போயுள்ளது என அதிகாரிகளிடம் அதன் ஓட்டுநர் புகாராக தெரிவித்து இருக்கிறார்.
ஆந்திர பிரதேசத்தில் ஆத்மகுரு மண்டலத்திற்கு உட்பட்ட வேங்கடாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் துர்க்கையா. வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார்.
இவர், நந்தியால் மாவட்டத்தில் முச்சுமர்ரி பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மனைவி சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அவரை காண ஊருக்கு செல்லலாம் என துர்க்கையா முடிவு செய்துள்ளார்.
ஆனால் அவரிடம், போதிய பண வசதி இல்லை. அப்போது அதிர்ஷ்டம் வேறு வடிவில் வந்துள்ளது. ஆத்மகுரு பஸ் நிலையத்தில் யாரும் கேட்பாரின்றி அரசு பஸ் ஒன்று தனியாக நின்றிருக்கிறது. அதன் சாவிகளும் பஸ்சிலேயே இருந்துள்ளன.
இதனைப் பார்த்த ஓட்டுநரான துர்க்கையாவுக்கு உடனடியாக யோசனை ஒன்று வந்துள்ளது. ஊரிலுள்ள மனைவியை காண அந்த பஸ்சை ஓட்டி செல்வது என முடிவு செய்திருக்கிறார். அரசு பஸ்சில் ஏறி அதனை இயக்கி, மாமியார் வீட்டுக்கு சென்றார்.
ஆனால், சந்தேகத்திற்குரிய வகையில், ஆட்கள் யாருமில்லாமல் தனியாக சென்ற அரசு பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், அரசு பஸ்சை அங்கீகாரமின்றி பயன்படுத்தியதற்காக, துர்க்கையாவை போலீசார் கைது செய்தனர்.
எனினும், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் கூறுகின்றனர். டெப்போவில் இருந்து அரசு பஸ் காணாமல் போயுள்ளது என அதிகாரிகளிடம் அதன் ஓட்டுநர் புகாராக தெரிவித்து இருக்கிறார்.
இதன் அடிப்படையிலும், சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து துர்க்கையாவிடம் இருந்த அரசு பஸ்சை போலீசார் பறிமுதல் செய்தனர். அரசு பஸ் பின்னர், ஆத்மகுரு டெப்போ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
துர்க்கையா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்காக அவருக்கு எதிராக போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
- சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.
- சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும்.
சென்னை:
டிரைவர்-கண்டக்டர் கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது சம்பந்தமாக அனைத்து கிளை மேலாளர்கள்-மண்டல மேலாளர்களுக்கு மாநகர போக்கு வரத்து கழக மேலாண் இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை வருமாறு:-
மாநகரப் போக்குவரத்து கழகத்தை சார்ந்த அனைத்து பணிமனைகளிலும் பணி புரியும் டிரைவர்கள் கண்டக்டர்கள் கட்டாயம் சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும். சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.
எனவே டிரைவர்-கண்டக்டர்கள் சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிகிறார்களா என்பதை கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
- தலையாமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் உள்ள முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியுள்ளது. தர்ஷன் தனது காதலி பவித்ரா கௌடாவுடன் மேலும் 11 பேரை இணைத்துக்கொண்டு இந்த கொலையை அரேங்கேற்றியுள்ளதாக கூறபடுகிறது. கொலை செய்யப்பட்ட ரேணுகா சுவாமியின் உடல் பெங்களூரு காமாட்சிபாளையா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது முந்தைய நாள் இரவில் இரண்டு கார்கள் அங்கிருந்து சென்றது பதிவாகியிருந்தது. பின்னர் அதில் இரண்டாவது கார் நடிகர் தர்ஷனுடையது என்று கண்டறியற்பட்டது. முதலாவதாக சென்றது ஒரு டாக்ஸி ஆகும். அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அந்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த டாக்ஸியை ஓட்டி வந்த டிரைவர் ரவி தற்போது போலீசில் சரணடைந்துள்ளார். தர்சன் கைது செய்யப்படும் தலைமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.
டாக்ஸி டிரைவர் ரவியின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகர் தர்ஷன் கொலைப் பழியை ஏற்கும் படி வேறு ஒருவருக்கு அதிக பணம் அளிக்க முயன்றுள்ளார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர அரசு பஸ்(எண்101)சென்றது. பூந்தமல்லி அருகே கல்லறை தோட்டம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ் கடந்து சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமூக ஆர்வலர் ஒருவர் உடனடியாக அந்த மாற்றுதிறனாளியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்த மாநகர பஸ்சை விரட்டி வந்தார். சிறிது தூரத்தில் அந்த பஸ்சை மடக்க நிறுத்தி மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்து வந்தது தொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ்சில் இருந்த கண்டக்டர் ஆவேசமாக சமூக ஆர்வலரை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். மேலும் எதுவும் செய்யமுடியாது என்று மிரட்டும் வகையில் கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மாற்றுத்திறனாளி பின்னர் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.
கண்டக்டரும், டிரைவரும் வாக்குவாதம் செய்யும் காட்சியை சமூகஆர்வலர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை பணிநீக்கம் செய்து வடக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கினார். தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.
சுமார் 80 கி.மீ. தூரம் வரை ஓடிய அந்த சரக்கு ரெயில் பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் தொடர்பாக என்ஜின் டிரைவர் உள்பட 6 பேரை வடக்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இதுகுறித்த நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட என்ஜின் டிரைவர் அலட்சியமாக செயல்பட்டதே இச்சம்பவத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதனால் என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை சஸ்பெண்ட் செய்து வடக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
- ஜம்மு காஷ்மீரின் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
- தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடியது
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
அப்போது ரெயில் தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் ரெயில் டிரைவர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.
78 கி.மீ. தூரம் வரை அந்த சரக்கு ரெயில் டிரைவர் இல்லாமல் ஓடிய நிலையில், பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.
டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஜம்மு கோட்ட ரெயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.
#WATCH | Hoshiarpur, Punjab: The freight train, which was at a halt at Kathua Station, was stopped near Ucchi Bassi in Mukerian Punjab. The train had suddenly started running without the driver, due to a slope https://t.co/ll2PSrjY1I pic.twitter.com/9SlPyPBjqr
— ANI (@ANI) February 25, 2024
- சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.
சென்னை:
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தினரும் ஒன்று சேர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.
சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.
இதையொட்டி சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (16-ந் தேதி) அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.
எனவே போக்குவரத்து டிரைவர் கண்டக்டர்கள், தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.
அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த சுற்றறிக்கை அனைத்து பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.
- சாலையோரம் கைக்குழந்தையுடன் நின்றிருந்த இளம்பெண் ஒருவர் அந்த பஸ்சை நிறுத்துமாறு டிரைவரை நோக்கி கை காட்டினார்.
- இளம்பெண் அதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக தெரிகிறது.
பந்தலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களான நாடுகாணி, தேவாலா, பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, முக்கட்டி, பிதிர்காடு, பாட்டவயல், முள்ளன்வயல், அம்பலமூலா, அய்யன்கொல்லிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து அய்யன்கொல்லிக்கு நேற்று முன்தினம் மாலையில் அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பன்னீர் செல்வம் என்பவர் ஓட்டினார்.
அய்யன்கொல்லி அருகே சாலையோரம் கைக்குழந்தையுடன் நின்றிருந்த இளம்பெண் ஒருவர் அந்த பஸ்சை நிறுத்துமாறு டிரைவரை நோக்கி கை காட்டினார். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் அய்யன்கொல்லிக்கு ஓட்டி சென்றார்.
உடனே வாடகை வாகனத்தில் ஏறி அய்யன்கொல்லிக்கு கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண், அங்கு நின்ற அந்த பஸ்சின் டிரைவரிடம், 'கைக்குழந்தையுடன் நின்று கை காட்டியும், ஏன் பஸ்சை நிறுத்தவில்லை' என்று கேட்டார். அதற்கு அவர், நான் கவனிக்கவில்லை என்று கூறியதோடு மீண்டும் அந்த இளம்பெண் அதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக தெரிகிறது.
இதை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை அறிந்த கூடலூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் அருள்கண்ணன், ஊட்டி போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விசாரணை நடத்தி, டிரைவர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
- அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் சத்யா நகரில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் மாநகரப் பேருந்து பஸ் கண்டக்டராக கே.கே. நகர் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் 24- ந் தேதி அசோக் நகர் பகுதியில் இருந்து கே.கே. நகர் பணிமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக அதே பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வரும் அலெக்சாண்டர் ராஜா என்பவர் ஏழுமலையின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி உள்ளார். அப்போது கே.கே. நகர் பணிமனையின் அருகில் ஏழுமலையின் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானது.
ஏழுமலைக்கு அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த 13-ந் தேதி வங்கி கணக்கில் இருந்து 800 ரூபாய் எடுக்கப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தி தனது செல்போனுக்கு வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் விசாரித்தார்.
அப்போது வேறு ஒரு நபர் ஆதார் எண் மற்றும் ஏ.டி.எம். கார்டை காண்பித்து தனது பாஸ்புக் காணவில்லை என்றும் இதனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து 800 ரூபாயை எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. ஏழுமலையின் கை யெழுத்தை அலெக்சாண்டர் ராஜாவே போலியாக போட்டு பணம் கேட்டு உள்ளார். கையெழுத்தில் சந்தேகம் ஏற்படவே வங்கி அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர். நீண்ட காலமாக தனது கையெழுத்து மாறி உள்ளதாகவும் தற்போது தான் நேரடியாக வங்கிக்கு வந்து பணம் எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த ஏழுமலை சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டார். அப்போதுதான் டிரைவர் அலெக்சாண்டர் ராஜா தனது பெயரில் போலியாக ஆதார் அட்டையில் புகைப் படத்தை மார்பிங் செய்து வங்கியில் கொடுத்ததும் அதேபோல் தனக்கு பாஸ்புக் இல்லை என்றும் புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ஏழுமலையின் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் தனக்கு கடன் வேண்டுமென இந்தியன் வங்கிக் கிளையில் கேட்டு அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்து உள்ளார்.
நேற்று மீண்டும் ஏழுமலைக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியன் வங்கி மூலம் பத்து லட்ச ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம் என வந்து உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.
அதன் பிறகு ஏழுமலை நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக வங்கிக்கு வந்த அலெக்சாண்டர் ராஜாவை பிடித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லிப்ட் கேட்டபோது கீழே விழுந்த ஏழுமலையின் மணிபர்சில் இருந்து ஆவணங்களை எடுத்து அலெக்சாண்டர் ராஜா கைவரிசை காட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8.30 மணி அளவில் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்தநிலையில் அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வரும் தாராபுரம் தெற்கு தெருவை சேர்ந்த தாஸ் (வயது 35) என்பவர் கடைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சின் டிரைவர் பாபு சாப்பிட்டு விட்டு பஸ்சின் ஜன்னல் வழியாக கை கழுவிய தண்ணீரை ஊற்றியுள்ளார். அந்த தண்ணீர் தாஸ் மீது பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தாஸ், தண்ணீரை பார்த்து ஊற்ற முடியாதா? என்று டிரைவர் பாபுவிடம் கேட்டுள்ளார். மேலும் டீ கடையில் உள்ள ஜக்கில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து பாபு மீது ஊற்றியுள்ளார். இதனால் 2 பேருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி அடிக்க தொடங்கினர்.
இதையறிந்து அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மோதலில் காயமடைந்த தாஸ் மற்றும் பாபு ஆகிய 2 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஸ்சை எடுக்காமல் அப்படியே நிறுத்தினர். சுமார் அரை மணி நேரம் பஸ்சை எடுக்காமல் போராட்டம் நடத்தியதால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர். வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு டிரைவர்கள் பஸ்சை இயக்கினர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாராபுரம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
- சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
- கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 7 மணி அளவில் ஒரு மினி ஆட்டோ வந்து கொண்டிருந்தது. மினி ஆட்டோவை விழுப்புரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சுதர்சன் மற்றும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரகாசம் ஆகியோரும் வந்தனர்.
சேலம்-சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மினி ஆட்டோ வந்தபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மினி ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டிரைவர் பிரவீன்குமார், சுதர்சன் மற்றும் பிரகாசம் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அங்கிருந்த சுங்கச்சாவடி பணியாளர்களுடன் சேர்ந்து கிரேன் எந்திரத்தை பயன்படுத்தி 3 பேர் உடலையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மினி ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.