என் மலர்
நீங்கள் தேடியது "பஸ்"
- பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் இன்று காலை காயல்பட்டினத்தை கடந்து ஆறுமுகநேரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேயன்விளை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது. அப்போது அங்கு தாயுடன் நின்றிருந்த ஒரு சிறுமி பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்லை வீசி எறிந்துள்ளார்.
இதில் கண்ணாடி முழுவதுமாக உடைந்து சிதறியது. இதுபற்றி அந்த பஸ் கண்டக்டர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மூலக்கரைப்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பழைய பஸ்களாக மாறிவிட்டதால் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மூலக்கரைப்பட்டிக்கு சென்ற அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டுகள் ஏதும் இல்லாமல் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.
அந்த வழியாக பயணிகள், மாணவ-மாணவிகள் ஏறி உள்ளே செல்லும் நிலையில் அதே வழியாக இறங்கவேண்டிய நிலை இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் மக்கள் பயணம் செய்யும் நிலையை தவிர்க்கும் விதமாக உடனடியாக பஸ் படிக்கட்டுகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஓட்டுநர், நடத்துனர் ஆகிய இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
- வெளியூர் பேருந்துகளை இயக்கி விட்டு நள்ளிரவில் எங்கள் பணியை முடித்துச் செல்கிறோம்.
ஈரோடு:
ஈரோடு காசிபாளையத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையைச் சேர்ந்த கோவை-சேலம் வழித்தட பேருந்தில் ஈரோட்டைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் வடிவேல் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் பணியை முடித்து கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாரான நிலையில் இருவரையும் மீண்டும் ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு பேருந்தை இயக்குமாறு கிளை மேலாளர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதற்கு அவர்கள் உடல் நிலை மற்றும் வேலை நேரத்தை குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்ததையடுத்து கிளை மேலாளார் அவர்களை அவதூறாக பேசியதுடன், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஓட்டுநர் செந்தில்குமார், நடத்துனர் வடிவேல் ஆகிய இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து கிளை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட இருவரிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இருவரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது அதிகாலை முதல் வெளியூர் பேருந்துகளை இயக்கி விட்டு நள்ளிரவில் எங்கள் பணியை முடித்துச் செல்கிறோம். எங்களின் தூக்கம் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் எங்கள் மீது அதிக பணிச் சுமையை சுமத்துவது விபத்துக்கே வழிவகுக்கும்.
இது நாங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. எங்களை நம்பி பேருந்தில் ஏறும் நூற்றுக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். எனவே, இத்தகைய போக்கை மாற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
- பிடிப்பட்டவர்களில் சிலர் கூறும்போது இரவில் மது சாப்பிட்டதாக கூறியுள்ளனர்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகரில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 3,414 வாகனங்களை சோதனை நடத்தினர்.
அப்போது பள்ளி வளாகத்திற்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற 16 பள்ளி பேருந்து டிரைவர்கள் குடிபோதையில் இருப்பது கண்டிறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது நண்பரின் பெயர் சூட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு இரவு வெகுநேரம் வரை இருந்து மது சாப்பிட்டேன் என்று ஒருவர் தெரிவித்தார். மேலும் மற்றொரு டிரைவர் கூறும்போது பள்ளி முடிந்ததும் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி சோர்வடைந்தேன். இதனால் தூக்கத்திற்காக மது குடித்துவிட்டு தூங்கினேன் என்று கூறினார்.
பெங்களூர் நகரில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி வளாகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள இடங்கள் மற்றும் சந்திப்புகளில் பள்ளி வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் டிரைவர்களை குழந்தைகளுக்கு தெரியாமல் தனியாக அழைத்து வந்து குடிபோதையில் இருக்கிறார்களா என்று அல்கோ மீட்டர் மூலம் சோதனை செய்யப்பட்டது. இதில் 16 பள்ளி டிரைவர்கள் போதையில் இருப்பது கண்டறியப்பட்டது.
பிடிப்பட்டவர்களில் சிலர் கூறும்போது இரவில் மது சாப்பிட்டதாக கூறியுள்ளனர். பொதுவாக அல்கோ மீட்டரில் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்திற்கு முன்பு மது அருந்தியிருந்தால் மட்டுமே தெரியும் எனவே பிடிப்பட்ட 16 பேரும் காலையில் தான் மது குடித்துள்ளனர். ஆனால் அவர்கள் இரவில் மது குடித்ததாக கூறுகிறார்கள். இரவில் மது குடித்தால் காலையில் அல்கோ மீட்டர் மூலம் அதை உறுதி செய்ய முடியாது, எனவே பள்ளி பேருந்து டிரைவர்கள் கூறுவது தவறனாது.
குடித்துவிட்டு பள்ளி குழந்தைகளை பேருந்தில் ஏற்றிச் செல்வது ஆபத்தானதாகும் எனவே குடிபோதையில் பிடிபட்ட 16 டிரைவர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 279 (கவனக்குறைவாக வண்டி ஓட்டுதல்) மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவு 185 (போதைப் பொருள் அல்லது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்டு செய்ய வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.
- மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது.
திருவனந்தபுரம்:
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே, சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
மண்டல பூஜை காலத்தில் இருந்ததைப்போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.
இருந்தபோதிலும் பக்தர்கள் அதிகளவில் வருவதால் சாமி தரிசனத்துக்கு 10மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது. பம்பை, மரக்கூட்டம், பதினெட்டாம்படி, நடைப்பந்தல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
இதனால் வயதான பக்தர்களும், சிறுவர்-சிறுமிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.
பூஜைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதாலும், 10-ந்தேதிக்கு பிறகு உடனடி முன்பதிவு நிறுத்தம் மற்றும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருப்பதால் சபரிமலைக்கு தற்போது அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள்.
இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்கள் பல இடங்களில் வெகுநேரம் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கெட்டுகளை தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்குகின்றனர்.
மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது. பம்பையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு நடைபயணத்தை மேற்கொள்ளும் நிலையில், பெருவழிப்பாதை வழியாகவும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இதன் காரணமாக பம்பையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் அதிகளவில் மலையிறங்கிய போதிலும், சன்னிதான பகுதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருக்கிறது.
சன்னிதான பகுதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. அரவணை உள்ளிட்ட பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் எப்போது பார்த்தாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கிச் செல்கிறார்கள். எங்கும் கூட்ட நெரிசல ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மண்டல பூஜை காலத்தின் போது நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதுகூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வருவதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மகரவிளக்கு பூஜைக்காக மாநிலம் முழுவதும் 800 பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட இடங்களுககு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
- படிக்கட்டு பயணத்தின் போது மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
- பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் படிக் கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிப் போய்விட்டது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் மாணவர்களின் படிக்கட்டு பயணம் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே மாறிப்போய் இருக்கிறது. இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுப்ப தற்கு போலீசாரும் போக்கு வரத்து அதிகாரிகளும் எவ்வளவோ முயற்சி செய் தும் படிக்கட்டு பயணத்தை மாணவர்கள் கை விடுவதாக இல்லை.
இதனால் படிக்கட்டு பயணத்தின் போது மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு கடிவாளம் போடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பஸ்சின் பின்பக்க வாசலில் உள்ள படிக்கட்டில் தொங்கிய படியேதான் மாணவர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அருகிலுள்ள ஜன்னல் கம்பிகளை கையால் பிடித்துக் கொண்டு உயிரை பனையம் வைத்து அவர்கள் பயணம் மேற் கொள்வது வழக்கம். இதனை தடுக்கும் வகையில் படிக்கட்டு அருகில் ஜன்னல் கம்பிகள் வெளியில் தெரியாத அளவுக்கு மூடுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி மாணவர்கள் பிடித்து தொங்கும் படிக்கட்டு அருகில் உள்ள 2 ஜன்னல் களையும் இரும்பு தகரம் கொண்டு மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்கான பணி களை காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மண்டலத்துக்குட்பட்ட ஒரிக்கை, மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடுகின்றன. இதில் 140 பஸ்கள் மாநகர பேருந்துகளாகும். உள்ளூர்களில் இயக்கப்படும் இந்த பஸ்கள் அனைத்திலும் இரும்பு தகடுகள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது வரையில் 47 பஸ்களில் முழுமையாக இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவ டிக்கை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதனை செயல்படுத்தி மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், அடி சுந்தரவாடா பஸ் நிலையத்தில் இருந்து உட்னூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் கான் என்ற கண்டக்டர் பணியில் இருந்தார்.
அப்போது அன்ஸ்னாபூரை சேர்ந்த அசிம் கான் என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசிம்கானுக்கு சீட் கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.
இதையடுத்து கண்டக்டர் பணத்தை திருப்பி கொடுத்து அசின் கானை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார்.
அப்போது அசிம் கான் கண்டக்டரை தாக்கினார். அவரை கீழே தள்ளி கன்னத்தைக் கடித்து துப்பினார்.
இதில் கண்டக்டரின் கன்னத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அசிம் கானை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2700 பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
- 450 பேருந்துகள் மட்டுமே ஒரு சில வழித்தடங்களில் இயக்கப்பட்டன.
சென்னை:
கனமழை வெளுத்து வாங்கி வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பஸ் சேவை முற்றிலும் பாதித்தன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 620 வழித் தடங்களில் பஸ்கள் இயக்கப்படும்.
ஆனால் இடைவிடாது பெய்த கனமழையால் சுரங்கப் பாதை, முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் பஸ்களை இயக்க முடியவில்லை.
450 பேருந்துகள் மட்டுமே ஒரு சில வழித்தடங்களில் இயக்கப்பட்டன. 2700 பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அனைத்து டெப்போகளிலும் பஸ்களை எடுக்க முடியவில்லை.
மேலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வர முடியவில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும்பாலான போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது.
பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்தது. மக்கள் வீடுகளில் முடங்கியதால் பஸ் போக்குவரத்தும் குறைக்கப்பட்டது.
பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டதால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. குறைவான அளவில் இயக்கப்பட்ட பஸ்களிலும் மிக குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.
- தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
- போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வக்கோட்டையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அருகில் உள்ள தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அதே போல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி கேட்டும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் செல்ல வலியுறுத்தியும் இன்று காலை சாலை மறியலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அறிந்து கந்தர்வகோட்டை காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
- வேலை காரணமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
- பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 36).
இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேலை விஷயமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவர் டவுன் பஸ் நிற்கும் மார்க்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த பஸ் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கபில்தேவ் மீது மோதியது.
இதில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி கபில்தேவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபில்தேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவியை பார்த்து அரசு பஸ் டிரைவர் அருவருக்கத்தக்க வகையில் அவதூறு வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது
- மாணவியின் தந்தை திங்கள்சந்தை டெப்போ மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கூறியுள்ளார்.
இரணியல் :
இரணியல் அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்ற மாணவி மாலையில் தக்கலை வழியாக மண்டைக்காடு செல்லும் அரசு பஸ்ஸில் முன் பக்கத்தில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மாணவியை பார்த்து அரசு பஸ் டிரைவர் அருவருக்கத்தக்க வகையில் அவதூறு வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது.
இது குறித்து மாணவியின் தந்தை திங்கள்சந்தை டெப்போ மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கூறியுள்ளார்.
- சென்னை முழுவதும் 3000 பேரிடம் இந்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் தான் அதிகமான பெண் போலீஸ் நிலையங்களும் உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆட்சிக்கு வரும்போது இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் இந்த முறை தி.மு.க. அரசு பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்ற புரட்சிகரமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த முன்னோடி திட்டத்தை வட மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் என்ன நினைக்கிறார்கள் சென்னை பெண்கள்? என்பதற்காக சென்னை மாநகராட்சி ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறது.
சென்னை முழுவதும் 3000 பேரிடம் இந்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 2432 பேர் பெண்கள், 568 பேர் ஆண்கள். நூறு பேர் திருநங்கைகள்.
இவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 89 சதவீத பெண்கள் போக்கு வரத்திற்கு அரசு பஸ்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். இவ்வாறு போக்குவரத்துக்கு அரசு பஸ்களை நம்பி இருக்கும் 89 சதவீத பெண்களில் 82 சதவீதம் பேர் அரசு வழங்கியிருக்கும் இலவச பஸ் பயணத்தின் மூலம் பெருமளவு பணம் மிச்சப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்கள்.
அதில் 42 சதவீதம் பெண்கள் பஸ் பயணத்தின் போது பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் 35 சதவீதம் பெண்கள் கூறும் போது பஸ்சில் ஏறும் போதும், பஸ் நிறுத்தங்க ளில் பஸ்சுக்காக காத்தி ருக்கும் போதும் இந்த மாதிரி பாலியல் ரீதியி லான தொந்த ரவுகளை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
384 பெண்கள் பாலியல் தொந்தர வுகளை பஸ் பயணத்தின் போது சந்தித்திருப்பதாக கூறுகிறார்கள். அவர்களில் 62 சதவீதம் பேர் துணிச்ச லாக தட்டி கேட்டதாகவும் ஆனால் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் கூட உதவிக்கு முன் வரவில்லை என்றும் ஆதங்கப்பட்டனர்.
ஆனால் இது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகள் என்னென்ன இருக்கிறது என்பது பற்றி 62 சதவீத பெண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. 32 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே காவலன் செயலியை பற்றிய புரிதல் இருக்கிறது. 10 சதவீதம் பேர் பெண்களுக்கு உதவுவதற்கான பெண்கள் போலீஸ் ரோந்து வாகனத்தை பற்றி அறிந்திருக்கிறார்கள்.
29 சதவீத பெண்கள் மாநகர பஸ்களில் அவசர உதவிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொத்தான் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டு மேயர் பிரியா கூறும் போது, பஸ் பயணம் செய்யும் பெண்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். உங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் மூலம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரைகள் செய்யப்படும் அடிக்கடி பஸ்களை இயக்க வேண்டும் பெண்களுக்காகவே பஸ்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவசரகால பொத்தான் பற்றிய விழிப்புணர்வை பெண் பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
மேலும் 10 சதவீத பெண்கள் இதே போல் பாலியல் ரீதியான தொந்தரவுகள் பஸ்களில் மட்டுமல்ல மெட்ரோ ரெயிலில் கூட நடப்பதாக தெரிவித்து உள்ளார்கள் என்றார்.
சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் கூறும்போது, நாட்டிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் தான் அதிகமான பெண் போலீஸ் நிலையங்களும் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்கள் மூலம் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது. கவுன்சிலிங்களும் கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி என்று தெரியவரும் இடங்களில் கூடுதலான ரோந்து பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.