search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பில்லி சூனியம்"

    திண்டிவனம் அருகே இளம்பெண்ணை கற்பழித்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூரில் வசித்து வருபவர் மணி என்கிற செல்வமணி (வயது 40). இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேடு ஆகும். திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் கூறி வந்துள்ளார்.

    இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வலம் வந்தார். மேலும் மக்களை கவரும் வகையில் ஆன்மிகம் குறித்தும் பேசி வந்துள்ளார்.

    இதனால் அவரை நம்பிய பல பெண்கள் பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடி சென்றனர். அந்த சமயத்தில் அவர்களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்குவதாக கூறி அவர்களது வீடுகளுக்கு சென்று வந்தார்.

    இதில் பல பெண்களை கவர்ந்து, அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து சென்று தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது தனது மகனின் வாழ்வில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது, அதை நீங்கள் வந்து சரிசெய்து தரவேண்டும் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து, சாமியார் மணி அவரது வீட்டுக்கு நேரடியாக சென்றார். அங்கு அவர்களது பிரச்சினைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, அவருக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதை தெரிந்து கொண்டார்.

    இதையடுத்து, உங்கள் ஊரில் ஒரு கோவில் கட்டினால் அனைத்து பிரச்சினைகளும் பறந்து போய்விடும் என்று தெரிவித்தார். ஆனால், ‘கோவில் கட்டும் போது உங்களது மகள் வீட்டில் இருந்தால் அவளுக்கு ஆகாது, எனவே எனது பாதுகாப்பில் அவள் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    இதை நம்பிய அவர்கள், தங்களது மகளை சாமியாரோடு அனுப்பி வைத்தனர். அதன்படி அந்த இளம்பெண்ணை சாமியார் ஓங்கூருக்கு அழைத்து வந்தார். பல மாதங்களாக தன்னுடன் இருந்த, அந்த இளம்பெண்ணுக்கு 19-வது வயது பிறந்தவுடன், அவரது பெற்றோரை சந்தித்து, உங்களது மகளை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஆகையால் எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டார்.

    இதை கேட்டு இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, எதிர்ப்பு தெரிவித்தனர். சாமியாரின் ஆசைக்கு இளம்பெண்ணும் சம்மதிக்கவில்லை. எனவே அவரிடம், உனது அண்ணனின் பிரச்சினை தீர வேண்டும் என்றால், நீ என்னுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே முடியும் எனக்கூறி ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் வைத்து இளம்பெண்ணை கற்பழித்தார்.

    இது குறித்து தனது தந்தையிடம் இளம்பெண் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து, மணியை கைது செய்தார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ஹேமாவையும் கைது செய்தார்.

    பின்னர் சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி சாமியார் என்பதும், ஹேமாவை அவரது கணவரிடம் இருந்து பிரித்து வந்து தன்வசப்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் வலம் வந்துள்ளார்.

    சாமியார் என்ற போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    ×