என் மலர்
நீங்கள் தேடியது "மதுக்கடை"
- ரூபாய் நோட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் சிதறி கிடந்தன.
- போதையில் இருந்த வாலிபரை எழுப்ப நீண்ட நேரம் முயற்சி செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நர்சிங்கியில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு வாலிபர் ஒருவர் மதுக்கடையில் கொள்ளையடிக்க சென்றார். கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற வாலிபர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்கை கழட்டினார். பின்னர் கடையில் வைத்திருந்த பணத்தை எடுத்து தனது பாக்கெட்டில் நிரப்பி கொண்டார்.
ஹார்ட் டிஸ்க் கழற்றியாதால் தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என நினைத்தார்.
கடையில் இருந்த விலை உயர்ந்த பல ரகமான மது பாட்டில்களை பார்த்ததும் அவருக்கு மதுகுடிக்க ஆசை ஏற்பட்டது. கடையில் தரையில் அமர்ந்து ஒவ்வொரு பாட்டிலாக எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.
வயிறு முட்ட குடித்தார். சிறிது நேரத்தில் வாலிபருக்கு போதை தலைக்கேறியது. இதனால் கடையின் உள்ளேயே குறட்டை விட்டபடி தூங்கினார்.
காலையில் கடைக்கு வந்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் மது போதையில் தூங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டனர்.
அவரது அருகே ரூபாய் நோட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் சிதறி கிடந்தன. வாலிபரை எழுப்ப நீண்ட நேரம் முயற்சி செய்தனர். அவர் எழுந்திருக்கவில்லை.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை எழுப்பப்படாத பாடுபட்டனர். அவர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலிபரை மீட்டு ராமையம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கும் அவருக்கு போதை தெளியவில்லை. மதியத்திற்கு மேல் வாலிபருக்கு லேசாக போதை இறங்க ஆரம்பித்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாலிபர்கள் மதுபோதையில் கூச்சலிட்டபடி மோதலில் ஈடுபட்டசம்பவம் அப்பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியது.
- மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 வது வார்டு, ஜெம்நகரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. குடியிருப்பு பகுதி அருகே செயல்படும் இந்த மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மதுக்கடையை இடமாற்றம் செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அதே இடத்தில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
போதை வாலிபர்கள் அடிக்கடி மதுக்கடை அருகே மோதலில் ஈடுபட்டு வருவதால் அவ்வழியே செல்லவே அப்பகுதி மக்கள், பெண்கள் அச்சம் அடைந்து உள்ளனர். காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களையும் ஆங்காங்கே வீசி சென்று விடுகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுக்கடை முன்பு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மதுபோதையில் கூச்சலிட்டபடி மோதலில் ஈடுபட்டசம்பவம் அப்பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியது.
எனவே குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் மதுக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஜெம்நகரில் குடியிருப்புகளுக்கு அருகேயே மதுக்கடை உள்ளது. இதனால் தினந்தோறும் குடிமகன்களின் அட்டகாசத்தால் இப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். பாதுகாப்பான சூழல் இல்லாததால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சமடைந்து வருகிறார்கள். பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. எனவே மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
- மது கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் தேவையில்லை.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட விஷ சாராயத்தை குடித்துவிட்டு கடந்த வருடம் மே மாதம் 5-ந் தேதி எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தை 10 பேர் மற்றும் மரக்காணம் சம்புவெளி செல்லம் தெரு மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபோல் 52 பேர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
விஷசாரயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் அழைத்து அவர்களது குடும்பத்தின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மதுவால் அவர்களது குடும்பம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மது கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு திருமாவளவன் எம்.பி. நிதி உதவியும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுக்கடைகளை மூடுவதற்குரிய செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பாக சில அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாடு முதல்-அமைச்சர் செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை தோழமையோடு முன்வைக்கிறோம். விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு நிதி வழங்குவது ஏற்புடையது அல்ல.
மரக்காணத்தில் மீன் மார்க்கெட் மற்றும் மீன்பிடி துறைமுகம், தூண்டில் முள் வளைவு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும்.
மேலும் மீன் மார்க்கெட் கட்டுவதற்கு மரக்காணம் பேரூராட்சி சார்பில் இடம் வழங்கப்பட்டால் விழுப்புரம் எம்.பி. நிதியில் இருந்து மீன் மார்க்கெட் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விடுதலை சிறுத்தைகள் சார்பாக நடத்தக்கூடிய மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் தேவையில்லை. நாங்கள் இதை அரசியலோடு அணுகவில்லை. 100 விழுக்காடு அரசியல் கடந்து ஒரு சமூக பண்பாட்டு பிரச்சினையாக இதை பார்க்கிறோம்.
இதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இது நாட்டு நலனோடு மக்கள் நலனோடு தொடர்புடைய ஒரு பிரச்சனை.
இதில் கூட்டணி கணக்குகளை போட வேண்டாம். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.
தி.மு.க.வும் மதுவிலக்கில் உடன்பாடு உள்ள கட்சி தான். அ.தி.மு.க.வும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிற கட்சிதான். இடதுசாரிகளுக்கும் இதிலே 100 விழுக்காடு உடன்பாடு உண்டு.
பா.ம.க.வும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று தான் சொல்கிறது. ஆகவே விடுதலை சிறுத்தைகள் மட்டும் அல்ல எல்லோருக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு இருக்கிற போது நாம் ஏன் அனைவரும் ஒருங்கிணைந்து அரசியல் அடையாளங்களை கடந்து கட்சி அடையாளங்களை கடந்து பேசக்கூடாது. குரல் கொடுக்கக் கூடாது என்ற கேள்வியை விடுதலை சிறுத்தைகள் முன்வைக்கிறோம் .
கள்ளச்சாராயத்தை விற்பவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடிமகன்கள் போதையில் இருக்கும்போது ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
- சுவரொட்டியை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள ஒரு மதுபான கடை அருகே ஒட்டப்பட்ட சுவரொட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
அந்த சுவரொட்டியில் மதுக்கடையை நோக்கி ஒரு அம்புகுறியுடன், கடைக்கு சென்று சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக் கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. குடிமகன்கள் போதையில் இருக்கும்போது ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
இந்நிலையில், மதுபான கடைக்கு வாடிக்கையாளர்களை கவரும் உத்தியாக இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற போஸ்டர்கள் அப்பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என சிலர் கண்டித்துள்ளனர்.
இந்த போஸ்டர் வைரலாகி விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக இந்த சுவரொட்டியை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- லாக்கரை உடைக்க முடியாததால் மதுபாட்டில்களை அள்ளி சென்றனர்.
- மின் இணைப்பை துண்டித்தும், கண்காணிப்பு காமிராவை உடைத்தும் கைவரிசை.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் அருகே பெரும் பேர்கண்டிகை டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர்.
இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்ம கும்பல் மதுக்கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றும் முடியாததால் மதுபாட்டில்களை பெரிய பையில் அள்ளினர்.
அந்த நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகனத்தில் ரோந்து வந்தனர். உடனே மதுக்கடையில் இருந்த கும்பல் அங்கிருந்து மதுபாட்டில்களுடன் தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் பிடிக்க முயன்றும் முடிய வில்லை.
போலீசார் மதுக்கடைக்குள் வந்து பார்த்தபோது அங்கிருந்த லாக்கரை கொள்ளையர்கள் உடைக்க முயன்று இருப்பது தெரிந்தது. மேலும் கடையில் மின் இணைப்பை துண்டித்தும், கண்காணிப்பு காமிராவை உடைத்தும் கைவரிசை காட்டி உள்ளனர்.
லாக்கரை உடைக்க முடியாததால் மதுபாட்டில்களை பையில் அள்ளி சென்று உள்ளனர். கொள்ளையர்கள் தப்பி ஓடியபோது ஒரு பையில் இருந்த மதுபாட்டில்களை விட்டு சென்று இருக்கிறார்கள்.
மேலும் அவர்கள் அணிந்து இருந்த 2 சட்டைகளையும் விட்டுச் சென்றுள்ளனர். இதனை கைப்பற்றி போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாக்கரில் ரூ.12 லட்சம் விற்பனை பணம் இருந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் அந்த பணம் தப்பியது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்துஇருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.
- மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரம் சாமநகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி என்ற மாணவி தெலுங்கானா ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.
இதன் அருகே மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சில கல்லூரிகளும் உள்ளன. கோவிலுக்கு பெண்கள் நடந்து செல்கிறார்கள். குடிமகன்களால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
உடனடியாக மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்த கடிதத்தை பொதுநல மனுவாக எடுத்துக்கொண்ட ஐகோர்ட்டு இதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து தெலுங்கானா தலைமைச் செயலாளர் முதன்மை செயலாளர் மற்றும் மதுவிலக்கு ஆணையர், உள்துறை செயலாளர், மாநகராட்சி கமிஷனர், கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் அந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்து திருஷ்டி பூசணிக் காயை சுற்றி உடைத்தனர்.
- மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அம்பத்தூர்:
முகப்பேர் மேற்கு, ரெட்டி பாளையம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. பள்ளி, குடியிருப்பு அருகே மதுக்கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று புதிய மதுக்கடை திறக்கபட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் கிரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்து திருஷ்டி பூசணிக் காயை சுற்றி உடைத்தனர். இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் மதுக் கடைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது. அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.
- தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 4820 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மது பிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.
இதைத்தொடர்ந்து நீதி மன்ற உத்தரவின்படி காலி மது பாட்டில்களை மதுக் கடைகளில் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்தது. இந்த திட்டம் தற்போது பரீட்சார்த்த முறையில் நீலகிரி, பெரம்பலூர், கோவை, தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
அந்த மாவட்டங்களில் மதுபானங்கள் விற்கும் போது அதிகபட்ச சில்லறை விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை மதுக்கடையில் கொடுத்தவுடன் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.
இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.
டெண்டர் எடுக்கின்றவர்கள் காலி பாட்டில்களை திரும்ப பெற்று மீண்டும் பயன்படுத்த மொத்தமாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும். டாஸ்மாக் மதுக்கடைகளில் திரும்ப கொடுக்கப்படும் ஒவ்வொரு காலி பாட்டில்களுக்கும் ரூ.10 வழங்கப்படும்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனைத்து மதுக்கடைகளிலும் ஒப்பந்த நிறுவனங்கள் வழியாக மதுபாட்டில் திரும்ப பெறப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. 28-ந்தேதி டெண்டர் இறுதி செய்யப்பட்டு காலி மதுபாட்டில் திரும்ப பெறப்படும் திட்டம் தொடங்கப்படும்" என்றார்.
- ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த முடிவு.
- உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் பிறப்பித்தார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோருக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச அரசால் ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு சில மாநிலங்களில் 22ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் நேற்று பிறப்பித்தார்.
மேலும், இந்த அறிவிப்பால் மாநிலத்தில் மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடு அல்லது உரிமைகோரல்கள் எதுவும் கிடைக்காது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- புத்தாண்டையொட்டி சிறப்பு சலுகையுடன் மது வகைகள் விற்கப்பட்டன.
- வழக்கமாக இரவு 11 மணிக்குள் விற்பனையை முடித்து மதுக்கடைகளை மூட வேண்டும்.
புதுச்சேரி:
புத்தாண்டையொட்டி புதுவையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புதுவையில் உள்ள மதுக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, ஜின், ஓட்கா என 800-க்கும் மேற்பட்ட மது வகைகள் கிடைக்கும். புத்தாண்டையொட்டி சிறப்பு சலுகையுடன் மது வகைகள் விற்கப்பட்டன. அவற்றை வாங்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மது கடைகளில் கூடினர்.
புதுவையில் புத்தாண்டையொட்டி மது விற்பனையை கடந்த காலங்களில் இரவு 12 மணி வரை மட்டுமே அனுமதி அளித்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு அளித்து கலால் துறை சிறப்பு அனுமதி அளித்தது. வழக்கமாக இரவு 11 மணிக்குள் விற்பனையை முடித்து மதுக்கடைகளை மூட வேண்டும். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் 2 மணி நேரம் கூடுதலாக மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டதால் மது கடைகளில் ஆண்கள், பெண்கள் என கூட்டம் அலைமோதியது.
- வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
- மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.
தெலுங்கானாவில் தேர்தலையொட்டி மது விருந்து களைகட்டி உள்ளது.
அரசியல்வாதிகள் வேட்பாளர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்தனர்.
வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு தினமும் மதுபானங்களை வழங்கி உற்சாகப்படுத்தினர். எப்போதும் கோடை காலங்களில் மட்டுமே பீர் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் தெலுங்கானாவில் வித்தியாசமாக குளிர்காலமான நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்களில் 22 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் பெட்டி விற்பனையாகி இருந்தது. பீர் வகைகளுடன் ஒப்பிடும்போது ஹாட் வகை மதுபான விற்பனை மந்தமாக உள்ளதாக தெரிவித்தனர்.
நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ரூ.1,470 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
வருகின்ற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
அதனால் இன்று காலை முதலே மது பிரியர்கள் ஏராளமானோர் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.
தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.
- கடையை அடைக்கும் நேரம் என்பதால் அவருக்கு மதுபானம் தர ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
- தீ வைத்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுர்வாடா பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு வந்த ஒருவர் அங்கிருந்த ஊழியரிடம் மதுபானம் கேட்டு உள்ளார். கடையை அடைக்கும் நேரம் என்பதால் அவருக்கு மதுபானம் தர ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் அவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்ற அந்த நபர் ஒரு பெட்ரோல் கேனுடன் மீண்டும் மதுபானக் கடைக்கு வந்தார். கடையின் உள்ளேயும் ஊழியர்கள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக கடையை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். ஆனால் கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கணினி உள்பட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீ வைத்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.