என் மலர்
நீங்கள் தேடியது "மலைப்பாதை"
- மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
- மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, மாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதன் எதிரொலியாக பகல் நேரத்தில் மலைப்பாதை மேகமூட்டமாக காட்சி அளித்தது. இதனால் பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதற்கிடையே கனமழைக்கு பெருமாள்மலை வழியாக அடுக்கம்-கும்பக்கரை செல்லும் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் விரைந்து வந்து மலைப்பாதையில் விழுந்த பாறைகள், கற்கள், மண்குவியல்களை அகற்றினர். மேலும் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது. இதையடுத்து முதல் அடுக்கம் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மலைப்பாதையில் மழைக்காலத்தில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அடுக்கம் மலைப்பாதையை விரைவில் முழுமையாக சீரமைத்து போக்குவரத்து தொடங்க வேண்டும். தேனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அந்த சாலையை பயன்படுத்தினால், கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனர்.
- பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
- வாகனங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த ரப்பர் வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் எண்ணற்ற தேயிலை தோட்டங்களும், ஆறுகளும் நிறைந்து காணப்படுகிறது. இந்த இயற்கை காட்சிகளை கண்டுகளிப்பதற்காக வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
தற்போது கோடைகாலம் என்பதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் தேயிலை தோட்டங்களை சுற்றி பார்த்து விட்டு, ஆறுகளிலும் குளித்தும் வருகின்றனர்.
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கோடை சீசனையொட்டி வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதால், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை சீரமைப்பு, விரிவாக்கம், தகடுகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் கடந்த காலங்களை ஒப்பிடும்போது வால்பாறை மலைப்பாதையில் விபத்துக்கள் வெகுவாக குறைந்துள்ளன. இந்த நிலையில் வால்பாறை மலைப்பாதையில் உள்ள 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் அமைக்கப்பட்டுள்ள தகடுகளுக்கு இடையே தற்போது ரப்பர் வளையங்கள் அமைத்துள்ளனர்.
வாகனங்கள் தகடுகள் மீது மோதினால் வாகனங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த ரப்பர் வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் ரப்பரில் உள்ள மஞ்சள் நிறம் வெளிச்சத்தை கொடுப்பதோடு கொண்டை ஊசி வளைவுகளையும் அலங்கரித்துள்ளது.
- பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
- வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் நடந்த செல்லக்கூடிய அலிப்பிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டிபாளையத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது 3 வயது மகள் லக்ஷிதாவுடன் சென்றனர்.
இரவில் மின்விளக்கு வெளிச்சத்தில் பெற்றோரை பிரிந்து சிறுமி படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டிருந்தாள். அப்போது சிறுத்தை சிறுமியை தூக்கி சென்று கடித்துக் கொன்றது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கின. இதில் குழந்தையை கொன்ற சிறுத்தையை மீண்டும் காட்டிற்கு விடக்கூடாது அது மீண்டும் மனிதர்களை தாக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
முதற்கட்டமாக 4 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தது. அந்த 4 சிறுத்தைகள் மீண்டும் திருப்பதி வனப்பகுதியில் விடப்பட்டன.
மேலும் 2 சிறுத்தைகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு பெரிய சிறுத்தை சிறுமியைக் கொன்றது தெரியவந்தது .
இதனை தொடர்ந்து அந்த சிறுத்தை திருப்பதி பூங்காவில் உள்ள கூண்டில் நிரந்தரமாக அடைக்க முடிவு செய்தனர்.
மேலும் உள்ள ஒரு சிறுத்தையை காட்டில் விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க நேற்று திருப்பதி மலைபாதையில் கரடி ஒன்று நடமாடியது. இதனைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
- மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் நடுவில் ஒரு சிறுத்தை உலா வந்தது.
அதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். சிறிது நேரம் சாலை நடுவில் உலா வந்த சிறுத்தை பின்னர் தடுப்பு சுவரில் ஏரி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, சமீப காலமாக திம்பம் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.
இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி இரவு நேரங்களில் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம்.
சிலர் இயற்கை உபாதைகளை கழிக்க வாகனங்களில் இருந்து கீழே இறங்குவார்கள், அவ்வாறு செய்ய வேண்டாம். அதைப்போல் வன விலங்குகளின் நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் படம் பிடிக்கக் கூடாது. இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- தைப்பூசம் நெருங்கி வருவதாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- வனத்துறையினர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
வடவள்ளி:
கோவை மாவட்டம் மருதமலையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் முருக பெருமானின் 7-வது வீடு என பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது மார்கழி மாதம் என்பதாலும், தைப்பூசம் நெருங்கி வருவதாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர்.
ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில், இங்கு வந்து முருகபெருமானை தரிசித்து விட்டு ஐயப்ப பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.
இதனால் தற்போது அனைத்து நாட்களிலுமே மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அண்மைக்காலமாக மருதமலை முருகன் கோவில் பகுதி மற்றும், அடிவார பகுதிகளில் வனவிலங்குகள் நடமா ட்டம் காணப்படுகிறது.
குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர்.
நேற்று இரவு 7 மணிக்கு பக்தர் ஒருவர் மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் தனது காரில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடிவார பகுதியில் அருகே வந்த போது 3-வது வளைவில் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று நின்றிருந்தது.
இது காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை சற்று தூரத்தில் நிறுத்தினார். மேலும் தனது செல்போனை எடுத்து, அதில் சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்தார்.
இருளாக இருந்த இடத்தில் வெளிச்சம் ஏற்பட்டதை பார்த்ததும் சிறுத்தை வேகவேமாக ஓடி வனத்திற்குள் சென்று மறைந்து கொண்டது.
இதையடுத்து பக்தர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு கீழே வந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
மேலும் கோவில் பகுதிக்கு சென்று அங்கிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். கடந்த ஆண்டு கோவில் பகுதியில் தேர் நிறுத்தி வைத்திருக்கும் இடம் மற்றும் மலைப்படிக்கட்டில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இது அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.
தற்போது மீண்டும் மருதமலை முருகன் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தைப்பூசம் நெருங்கி வருவதால் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள். இந்த நேரத்தில் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. வனத்து றையினர் கோவிலு க்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, மருதமலை மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் கவன த்துடன் மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும். மலைப்பாதையில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவன த்துடன் வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும். சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
இதற்கிடையே மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் சிறுத்தை சுற்றி திரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார்.
- பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.
திருத்தணி:
மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த 4-ந் தேதி இரவு திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 12 மீட்டர் நீளத்திற்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் சென்றால் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார். இதனால் பக்தர்கள் அனைவரும் சரவண பொய்கை மலை படிக் கட்டுகள் வழியாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்து வருகி றார்கள். மலைப்பாதையில் வாகனங்கள் மேலே செல்லாதவாறு போலீசார் இரும்பு தடுப்பு கள் அமைத்து உள்ளனர். சேதம் அடைந்த மலைப் பாதை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் வேக மாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலைப்பாதை சீரமைப்பு பணிகளை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தீபா, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமி ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
- ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி தொடக்கம் வரை வெளுத்து வாங்குவது வழக்கம். அதன்படி அங்கு தற்போது கனமழை பெய்து வருகிறது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.
இதுதவிர மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மேக கூட்டங்கள் தரைக்கு மிகவும் அருகே தவழ்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.
அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் பகல் நேரங்களில் கூட மேகமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். இதனால் குன்னூர் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.
குன்னூர் பகுதியில் நேற்று முதல் மழைச்சாரலுடன் மேகமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.
இதுதொடர்பாக குன்னூர் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
குன்னூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அடர்பனிமூட்டம் ஏற்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் வரலாறு காணாத அளவில் அதிகப்படியாக பனிமூட்டத்தை பார்க்க முடிகிறது. மேலும் அங்கு காலநிலை மாற்றமும் ஏற்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அங்கு ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. எனவே நாங்கள் அச்சத்துடன் வாகனங்களில் பயணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குன்னூரில் இன்று காலை 10 மணியை கடந்த பின்னரும் அடர் பனி மூட்டம் காணப்பட்து. இதனால் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்கள் குளிரை தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். குன்னூருக்கு வந்த சுற்றுலாபயணிகள் வெளியே செல்ல முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.
- கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர்.
- மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
மிச்சாங் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத மழையால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.
கடந்த 4-ந்தேதி பலத்த மழை கொட்டியபோது திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
பின்னர் அதனை தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு சரி செய்து போக்குவரத்துக்கு அனுமதித்தனர்.
இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ள அந்த இடத்தில் மீண்டும் அதிக அளவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதை வழியாக போ க்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன. மலைப்பாதையை முற்றிலும் ஆய்வு செய்து மண்சரிவை சரிசெய்த பின்னரே போக்குவரத்துக்கு அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து மலைக் கோவிலுக்கு செல்லும் பஸ், லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நுழைவுவாயில் பகுதியிலேயே தடுப்புகள் அமைத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து பஸ், கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் வந்த பக்தர்கள் வாகனத்தில் மலை கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அவர்கள் கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர். இதன்காரணமாக முதியோர் மற்றும் குழந்தைகள் அவதி அடைந்தனர். மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.
- பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அருவங்காடு:
குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கே.என்.ஆர் பகுதியில் மரம் சரிந்து சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலைமையிலான குழு அந்த பகுதிக்கு சென்று சென்று சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பர்லியார் பகுதியில் விடிய, விடிய பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 2 வீடுகள் மீது மண்சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.
இது மட்டுமல்லாமல் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண் சரிவு ஏற்படுவதுடன் மரங்களும் முறிந்து விழுகிறது.
மேலும் அவ்வப்போது பாறைகளும் உருண்டு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென மலைச்சரிவிலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து சாலையில் விழுந்தது.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கார் வேகமாக சென்று விட்டதால், காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குன்னூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கடப்பாரையைக் கொண்டு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பாறையை நடுரோட்டில் இருந்து அகற்றினர்.
இதனிடையே குன்னூர்-கோத்தகிரி சாலையில் எடப்பள்ளி அருகே ராட்சத சாம்பிராணி மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மரத்தை வெட்டி அகற்றினர்.
- அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
- மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார்.
மேட்டுப்பாளையம்:
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது.
இதில் கடந்த 2 நாட்களில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்பி சாலைகளை மழை நீர் மூழ்கடித்து செல்கின்றன.
குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டமும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
நேற்றிரவு இரவு முதல் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 30க்கும் அதிகமான கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் பெய்த தொடர் மழையின் காரணமாக பர்லியாறு போலீஸ் சோதனை சாவடி அருகே மண்சரிவு ஏற்பட்டது.
ஆங்காங்கே சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.
இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலை காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகள் மற்றும் அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் 3 கிலோ மீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதனால் இப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நீலகிரியில் இருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு காரில் வந்தார். பர்லியார் அருகே மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதில் மத்திய மந்திரி எல்.முருகனின் காரும் மாட்டி கொண்டது. 1½ மணி நேரத்துக்கும் மேலாக அவரது காரும் சாலையிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, மண்சரிவினை ஒருபுறமாக அகற்றி, மத்திய மந்திரியின் கார் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.
அதன்பின்னர் அவரது கார் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு சென்றது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குன்னூர் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் கோத்தகிரி சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
- விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பஸ் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து பற்றிய உருக்கமான தகவல்கள் வருமாறு:-
தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 59 பேர் கேரளா, நீலகிரி, கோவை மருதமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.
அதன்படி, கடந்த 28-ந் தேதி கடையத்தில் இருந்து 59 பேரும் சுற்றுலா பஸ்சில் சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். டிரைவர்கள் 2 பேருடன் சேர்த்து மொத்தம் 61 பேர் இந்த பஸ்சில் பயணித்தனர்.
முதலில் இவர்கள் கேரள மாநிலம் சோட்டானிக்கரை, குருவாயூர் பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் நேற்று அதிகாலை, கேரளா வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் வந்தனர்.
இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்த்தனர். பின்னர் இரவில் கோவை செல்வதற்காக பஸ்சில் புறப்பட்டனர்.
பஸ் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், குன்னூர் மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பை இடித்து கொண்டு அங்கிருந்த 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த முப்புடாதி (67), முருகேசன்(63 ), இளங்கோ(64 ), தேவிகா(42), கவுசல்யா( 29), நிதின்(15), ஜெயா(50), தங்கம்(40) ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.
மற்றவர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு அபயகுரல் எழுப்பினர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கயிறு கட்டி கீழே இறங்கி பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த பகுதி மிகவும் இருளாக இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதிலும் டார்ச் ஒளி வெளிச்சத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையே தகவல் அறிந்ததும் கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை துரிதப்படுத்தினர்.
இறந்த 8 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குன்னூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். காயம் அடைந்தவர்கள் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
செல்லம்மா என்ற மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து வேறு யாராவது பஸ்சில் சிக்கி இருக்கிறார்களா என்பதை அறிய இன்று காலையும் மீட்பு பணி தொடர்ந்தது.
அப்போது பஸ்சின் அடிப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது பெயர் பத்மராணி (57) என்பது தெரியவந்தது. அவரது உடலையும் மீட்டுபிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதனால் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய பஸ்சை வெளியே கொண்டு வரும் பணியை தொடங்கி உள்ளனர். கிரேன் உதவியுடன் பஸ்சை மீட்கும் பணி நடந்தது.
சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து, 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நீலகிரிக்கு விரைந்து வந்துள்ளனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர்(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை) பிரபாகர், கலெக்டர் அருணா, டி.ஐ.ஜி.சரவணசுந்தர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.
பஸ்சில் சரியாக பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த பஸ் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- நேற்று இரவு திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடியது.
- தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி:
திருப்பதி மலைப்பாதை அருகே சிறுத்தைகள் நடமாடி வருகின்றன. கடந்த மாதம் 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி தூக்கி சென்றது.
அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டிச் சென்றதால் சிறுவனை விட்டு சென்றது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மலை பாதையில் இரவு நேரங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேலும் விலங்குகள் நடமாடக்கூடிய பகுதிகளில் ஆயுதம் எழுதிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் நேற்று இரவு திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடியது.
இதை கண்ட பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுத்தை நடமாடிய பகுதியில் வலைகளைக் கொண்டு வேலி அமைத்தனர். இதன் மூலம் இந்த பகுதியில் சிறுத்தை நடைபாதைக்கு வராமல் தடுக்க முடியும் என தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.