search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கொடைக்கானல் மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள் அகற்றம்
    X

    கொடைக்கானல் மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள் அகற்றம்

    • மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, மாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதன் எதிரொலியாக பகல் நேரத்தில் மலைப்பாதை மேகமூட்டமாக காட்சி அளித்தது. இதனால் பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதற்கிடையே கனமழைக்கு பெருமாள்மலை வழியாக அடுக்கம்-கும்பக்கரை செல்லும் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் விரைந்து வந்து மலைப்பாதையில் விழுந்த பாறைகள், கற்கள், மண்குவியல்களை அகற்றினர். மேலும் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது. இதையடுத்து முதல் அடுக்கம் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மலைப்பாதையில் மழைக்காலத்தில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அடுக்கம் மலைப்பாதையை விரைவில் முழுமையாக சீரமைத்து போக்குவரத்து தொடங்க வேண்டும். தேனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அந்த சாலையை பயன்படுத்தினால், கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனர்.

    Next Story
    ×