என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- சின்னையா கார்டன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
- குடியிருப்பு வாசிகள் டார்ச் லைட்டை வீடுகளில் அடித்து உஷாராகினர்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சிகுட்பட்ட கொசவம்பாளையம் ரோடு பகுதியில் உள்ளது சின்னையா கார்டன் இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருடர்கள் 3 பேர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர்.
காலியாக இருந்த வீட்டுக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்து எதுவும் கிடைக்காமல், அடுத்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதி வாசி ஒருவர் அவர்களை பார்த்து விட்டார். இதையடுத்து குடியிருப்பு வாசிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனால் உஷாரான குடியிருப்பு வாசிகள் வீடுகளில் விளக்கை எரியவிட்டும், டார்ச் லைட்டை வீடுகளில் அடித்தும் உஷாராகினர். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு இருப்பதை கண்டு திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பொதுமக்களிடம் மாட்டினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்த திருடர்கள் அங்குள்ள வீட்டில் காய போட்டு இருந்த துணிகளை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு, இருட்டுப் பகுதியில் குதித்து தப்பி ஓடினர். அதன் அருகே உள்ள டி.எம்.எஸ். கார்டன் பகுதியில் திருடலாம் என்று சென்றபோது, திருடர்கள் குறித்த தகவல் பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணிக்கு வந்து விட்டனர். போலீசார் வருவதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருடர்கள் வீட்டினுள் புகுவது, துணிகளை முகத்தில் கட்டி கொள்வது போன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் பல்லடம் பகுதியில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- காளிமுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
- காளிமுத்து சீலிங்பேனில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக் கொண்டார்.
உடுமலை :
உடுமலையை அடுத்த பாலப்பம்பட்டி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்.இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் காளிமுத்து( வயது 32)தனியார் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. காளிமுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் காளிமுத்து சீலிங்பேனில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக் கொண்டார். சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காளிமுத்துவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து காளிமுத்து தந்தை சுப்பிரமணியம் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் காளிமுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
- 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது.
உடுமலை :
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்திஅணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி., பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது.
அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் தளி வாய்க்கால் மூலமாக ஏழுகுளம் பாசனமும் நடைபெற்று வருகிறது.பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியான பிரதான கால்வாய்க்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக தளி வாய்க்கால் கடந்து செல்கிறது. தளி வாய்க்கால் அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாயின் பக்கவாட்டு சுவரில் துளை ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் துளையை சீரமைக்கக் கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் பி.ஏ.பி., வாய்க்கால் மற்றும் தளி சுரங்கப்பாதை சந்திக்கும் பகுதியில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. அப்போது பி.ஏ.பி, கால்வாய் மற்றும் தளி வாய்க்கால் சுரங்கப்பாதை இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடந்த மாதம் 6ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சைக்கிள் நடைப்பயணத்தை தொடங்கினார்.
- அவினாசி அருகில் வந்த போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அவினாசி :
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். அதற்காக கடந்த மாதம் 6ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சைக்கிள் நடைப்பயணத்தை தொடங்கினார்.
ஓசூரில் இருந்து கோவை வரையிலும், பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேலூர் வரையும் சைக்கிள் நடை பயணம் செல்கிறார். இந்த நிலையில் நேற்று அவர் அவினாசி புது பஸ் நிலையம் அருகில் வந்த போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில்:- வாக்களிப்பது மக்களின் உரிமை மற்றும் ஜனநாயக கடமையாகும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் தகுதியான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அதன் மூலம் நம்முடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வகையில் இருக்க வேண்டும். பணம் வாங்கிக் கொண்டு ஏதோ ஒரு நபரை தேர்ந்தெடுக்க கூடாது.
மக்கள் நேர்மையாக தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்என்றார். இதையடுத்து அவர் தெக்கலூர் மற்றும் கருமத்தம்பட்டி வழியாக கோவை நோக்கி புறப்பட்டார்.
- தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் பெருமாள் சாமி( வயது 48), வியாபாரி. இந்த நிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது. இது குறித்து மின்வாரியத்தில் தகவல் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கடந்த 11 ந் தேதியன்று வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற போது மின் கம்பத்தின் காரை திடீரென பெயர்ந்து பெருமாள் சாமி தலை மீது விழுந்தது. இதனால் அவரது மண்டை உடைந்தது. அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெருமாள் சாமி குடும்பத்தினர் கூறியதாவது:- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்தது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து விழுந்ததில், அவருக்கு மண்டை உடைந்து 7 தையல்கள் போட்டு, ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவானது. இதனால் வீண் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
- கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடை பாரில் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி, இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக கலப்பட மது விற்பனை நடைபெறுவதாகவும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்தை போல சின்னியகவுண்டம்பாளையத்திலும் நடைபெறாமல் இருக்க, சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையை காவல்துறையினர் முழுமையாக தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலை விரிவாக்கம் செய்யப்பட்டும் சாலைகளில் போதிய இடவசதி இன்றி உள்ளது.
- டீக்கடை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.
பல்லடம் :
பல்லடம் போலீஸ் நிலையம் எதிரே தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்லடத்தில் தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலைகளில் போதிய இடவசதி இன்றி உள்ளது. இந்த நிலையில் சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக போலீஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள டீக்கடை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது .எனவே தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
- லாரிகளுக்கு ரூ.1,30,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்,பொதுமக்கள்,மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி கடந்த 2 நாட்களாக அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில் சுக்கம்பாளையம் பகுதியில் நேற்று மாலை அதிக அளவு கனிமங்களை ஏற்றி வந்த 6 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக அந்த லாரிகளுக்கு ரூ.1,30,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் வரை, லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
- முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.
- பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காங்கேயம் :
காங்கேயம் அருகே உள்ள பாப்புரெட்டிப்பாளையம் பழனி ஆண்டவர் அக்கினி நட்சத்திர பரம்பரை தீர்த்தக் காவடி குழுவினர் சார்பில் வருடாந்திர அக்கினி நட்சத்திரத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் 750 பேர் கொடுமுடி காவேரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்து பழனிக்கு சென்று முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமிக்கு தீர்த்த அபிஷேகமும், ஆராதனையும் நடத்தி வழிப்பட்டனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக பொத்திபாளையம் பஞ்சாயத்து துணைத்தலைவர் தெய்வசிகாமணி தலைமையில் பழனி ஆண்டவர் கோவிலில் கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர் வேலன் தங்கவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
- புதிதாக நவீன தொழில்நுட்ப வசதியுடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் பகல்-இரவு நேரங்களில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் போலீசார் ேராந்து செல்வதற்கு வசதியாக புதிதாக நவீன தொழில்நுட்ப வசதியுடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. தாராபுரம் காவல் நிலையத்திற்கு 2 வாகனங்கள், காங்கயத்திற்கு 2, பல்லடம்-2, உடுமலைபேட்டை-2, திருமுருகன்பூண்டி-2, வெள்ளகோவில்-2 என காவல்நிலையங்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்களை இன்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி., சசாங் சாய் அந்தந்த காவல் நிலைய போலீசாரிடம் வழங்கினார். இதன் மூலம் எளிதாக ரோந்து பணியை மேற்கொள்ள முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
- இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.
- மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவும் கவுன்சிலருமான கண்ணப்பன் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சையாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட44 வது வார்டு பகுதியில் குருநாதர்வீதி , அர்த்தனாரிவீதி , செளண்டம்மன் கோவில் வீதி , கோவிந்தர்வீதி , எம்.என்.ஆர். லைன் , சின்னத்தோட்டம் ,செல்லப்பபுரம் , குப்புசாமிபுரம் , எல்.ஐ.சி.ரோடு ,காமாட்சி அம்மன் கோவில்வீதி பகுதிகளில் இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.
ஆகவே , மேற்கண்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்துவதோடு தீவிர ரோந்து பணியும் மேற்கொள்ள வேண்டும். 44-வது வார்டு பகுதி மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.மேலும் காணாமல் போன இருசக்கர வாகனங்களை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
- பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
- தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக நிரப்பி சாலை அமைக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்காமல் கிடப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்/ இதனை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பாறை குழி மற்றும் வார்டு -32 தங்க மாரியம்மன் கோவில் 2-வது வீதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும். முடிக்கப்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக நிரப்பி சாலை அமைக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்