search icon
என் மலர்tooltip icon
    • வீட்டில் இருந்து 10 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாராபுரம் :

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக டிஜிபி. சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள்,மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளுக்கு கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் தாராபுரம் டிஎஸ்பி. தன்ராசு உத்தரவின் பேரில் அலங்கியம் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் அலங்கியம், கொங்கு, மனக்கடவு, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தாராபுரம் அருகே அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கயம்பாளையம் பகுதியில் ஒருவரது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அலங்கியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் அலங்கியம் போலீசார் காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (42) என்பவரது வீட்டினை சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து 10 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புதைத்து வைக்கப்பட்டிருந்தஊறல் கைப்பற்றப்பட்டு அதே இடத்தில் அழிக்கப்பட்டது .

    அதன் பிறகு அவரிடம் வேறு ஏதாவது இடத்தில் ஊறல் பதுக்கி வைத்துள்ளாரா என்று விசாரணை நடத்தப்பட்டதில் அவரது வீட்டில் இரண்டு லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். பிறகு 2 லிட்டர் சாராயத்துடன் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் . அதன் பிறகு மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்ட அலங்கியம் காவலர்களை தாராபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தனராசு மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் பாராட்டினர்.

    • ரூ. 87 ஆயிரத்து 500 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
    • நீர் இழப்பை குறைக்கவும் மல்சிங் சீட் வழங்கப்பட உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - வெங்காய பட்டறை அமைக்க பொங்கலூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக ரூ. 87 ஆயிரத்து 500 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதுபோல் குழித்தட்டு காய்கறி நாற்றுகளான தக்காளி, மிளகாய், சுரை மற்றும் பழ வகைகளான கொய்யா, எலுமிச்சை, பப்பாளி ஆகியவை இலவசமாக 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    விவசாய நிலங்களில் களை வராமல் தடுக்கவும், நீர் இழப்பை குறைக்கவும் மல்சிங் சீட் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ. 2 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரத்து 402 க்கு தீர்வு காணப்பட்டது.
    • மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 4 அமர்வுகளாக நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலையில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் எண்.1 செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 4 அமர்வுகளாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார்.அதைத் தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் கே.விஜயகுமார், ஜே. எம்.2 மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    அதன்படி சிறு குற்றத்திற்குரிய வழக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்து 600 க்கும், காசோலை மோசடி வழக்குகள் ரூ.24 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், வங்கி வராக்கடன் வழக்குகள் ரூ.43 லட்சத்து 90 ஆயிரத்து 492 க்கும்,மோட்டார் வாகன விபத்து வழக்குகள் ரூ.1 கோடியே 21 லட்சத்து 26 ஆயிரத்து 950 க்கும், ஜீவனாம்ச வழக்குகள் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும், இதர சிவில் வழக்குகள் ரூ.28 லட்சத்து 42 ஆயிரத்து 360 க்கும் என மொத்தம் 416 வழக்குகள் எடுக்கப்பட்டு 236 வழக்குகளுக்கு ரூ. 2 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரத்து 402 க்கு தீர்வு காணப்பட்டது. இதில் அரசு வக்கீல் சி.பி.ரவிச்சந்திரன், வக்கீல் சங்க செயலாளர் கே.எம்.ராஜேந்திரன்,வக்கீல்கள் பசீர்அகமது,பிரபாகரன் உள்ளிட்ட வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
    • அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.இந்த அணையின் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதுடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைப்பகுதியில் உள்ள இயற்கை சூழலை ரசிக்கவும் புகைப்படம் எடுத்து மகிழவும் முதலைப் பண்ணையை பார்வையிடவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அமராவதிக்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் அணைப்பகுதியில் படகு சவாரியும் நடைபெற்று வருகிறது. இதற்காக பத்து நிமிட பயணத்திற்கு நபர் ஒன்றுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அணையிலும் போதுமான அளவு நீர்இருப்பு உள்ளதால் படகு சவாரி மனதிற்கு புத்துணர்வை அளிப்பதுடன் இனிமையான நிகழ்வாக உள்ளது.கடல் போன்று காட்சி அளிக்கும் அணையில் படகில் திகிலுடன் சென்று திரும்பும் சில வினாடிகள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் பெறுவதற்காக அணைப்பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் படகில் ஏறி சவாரி செய்து வருகின்றனர். குறிப்பாக வார,கோடை,பொது விடுமுறை நாட்களில் படகு சவாரி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அமராவதி அணைக்கு வருகை தந்த வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் அணைப்பகுதி, பூங்கா, முதலைப் பண்ணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.பின்பு படகு சவாரிக்கு சென்றனர். இதையடுத்து படகில் ஏறி குடும்பத்துடன் சென்று உற்சாகமாக சவாரி செய்து மகிழ்ந்தனர். அதற்கு முன்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு படகோட்டியின் சார்பில் விழிப்புணர்வும் உயிர் கவசமும் வழங்கப்பட்டது. மேலும் திருமூர்த்தி அணையில் நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் உள்ள படகு சவாரியை துவக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • அவினாசி போலீசார் தெக்கலூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
    • இரண்டு சேவல் மற்றும் பணம் ரூ. 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    அவினாசி :

    அவினாசி அருகே சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீசார் தெக்கலூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்டு பகுதியில் குன்னத்தூரை சேர்ந்த யோகமூர்த்தி (வயது 38), வஞ்சிபாலயத்தைச் சேர்ந்த சந்தோஸ் குமார்(26), அவினாசி ஆட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கிலி ராஜ்(27) மற்றும் இடுவம்பாளையத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் (27) ஆகியோர் சேவல் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அவர்களிடமிருந்து இரண்டு சேவல் மற்றும் பணம் ரூ. 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    ×