search icon
என் மலர்tooltip icon
    • பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9.45 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த பேரளியில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே பேரளி துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, கே.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் காலை உணவு திட்டத்தில் சமையலர் தேர்வு நடைபெற உள்ளது
    • விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்

    பெரம்பலூர்,

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- சமையலர்கள் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. சமையலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அதே பகுதியை வசிப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுவில் 3 வருடம் உறுப்பினராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே பள்ளியில் 1 முதல் 5 வரை படிப்பவராக இருத்தல் வேண்டும்.

    குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பழங்குடியின கிராமங்களில் 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆண்டிராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும்.மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே ஊராட்சி அளவிலான தேர்வுக்குழுவால் சமையலர் பணி நியமனம் நடைபெறும். மேற்படி, சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான குழுவிடம் வருகிற 23-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு கலெக்டர் கற்பகம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பிரம்மதேசம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • அலங்கரிக்கப்பட்ட 30 அடி உயரமுள்ள தேரில் செல்லியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மங்களமேடு அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் செல்லியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட 30 அடி உயரமுள்ள தேரில் செல்லியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி கோஷங்கள் முழங்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிகண்டபுரம், அனுக்கூர், தேவையூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பிரம்மதேசம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.



    • அரியலூரில் 24-ந்தேதி விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யபடவுள்ளனர்
    • மேலும் தகவல்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

    அரியலூர்,

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையம் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.இந்த விளையாட்டு மையங்களில் சேர்வதற்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு போட்டி, அரியலூரில் 24ம்தேதி நடைபெற உள்ளது.

    விண்ணப்ப படிவம் ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்து அனுப்பலாம். 23ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். மேலும் தகவல்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

    ஏரியில் மணல் திருடிய 2 பேர் கைது செய்யபட்டனர்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலர் மீனாம்பிகைக்கு கசனை ஏரியில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உதவியாளருடன் சென்று கசனை ஏரியில் பார்த்த போது அங்கு ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் திருட்டு நடைபெற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், மணல் திருட்டில் ஈடுபட்ட பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (25), அன்பரசன் (35) ஆகியோரை மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர். பின்னர் இது குறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து, பிடிபட்ட இருவரையும் கைது செய்தார். மேலும் பட்டுரோஜா (45), மகேஸ்வரி (50), பெரியசாமி (40) ஆகியோரை தேடி வருகிறார்.

    • ரூ.63 கோடி மதிப்பீட்டில் இரு வழி சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
    • இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் வகையில் சுமார் 2500 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை பகுதி வாரியாக இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக தரம் உயர்த்துதலில், நடப்பு நிதி ஆண்டில் (2022-2023) சுமார் 150 கி.மீ. நீளம் உள்ள சாலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.அந்த வகையில் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம்-மதனத்தூர் இருவழிச்சாலையை 21 கி.மீ. வரை அகலப்படுத்துதல், 26 கி.மீ. நீளத்தில் அமையப்பெற்ற சிறுபாலத்தை திரும்பக் கட்டுதல், வடிகால், தடுப்புச்சுவர் மற்றும் சென்டர் மீடியன் கட்டுதல், கல்வெட்டுகள் அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

    ரூ.63 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் இந்த பணியினை கூவத்தூர் கிராமத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்திராண்டி, உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர் விக்னேஷ்ராஜ், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தா.பழூர் அருகே சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
    • சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மகாபிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியபெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரகார பிரதட்சணம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர். இதைபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • தா.பழூர் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்க வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 37 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
    • சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பஞ்சநாதனை தேடி வருகிறார்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தா.பழூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அங்கராயநல்லூரை சேர்ந்த அண்ணாதுரை மகன் அபினாஷ் (வயது 23) என்பவரை தடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டார். சோதனையில் அவர் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து 22 மதுபான பாட்டில்களை எடுத்து வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வாங்கி சென்றது தெரியவந்தது.இதனையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அபினாசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

    அதேபோல், தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேவாமங்கலத்தை சேர்ந்த பஞ்சநாதன் (80) என்பவரது வீட்டில் புகுந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டார். அப்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 அரசு மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆய்வின்போது வீட்டில் யாரும் இல்லாததால் பஞ்சநாதனை கைது செய்ய முடியவில்லை. இதையடுத்து அவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பஞ்சநாதனை தேடி வருகிறார்.

    • கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபடும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள், கள் இறக்கி விற்பனை செய்பவர்கள், வெளிமாநில மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்பவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கலப்பட மதுபானங்களை தயார் செய்பவர்கள் பற்றிய தகவல்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 9498100780, 04324-296299 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கலப்பட மதுபானங்களை தயார் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    • கரூர் பகுதியில் மது விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்
    • அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாபேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்ற மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்த அன்னக்கிளி (வயது55), நதியா (35), கிருஷ்ணமூர்த்தி (51), மதிவாணன் (55), வேங்கம்பட்டி செல்வராஜ் (38), பழைய ஜெயங்கொண்டம் ராஜூ (62) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால் (54), மலர் (43), மேலும் மாயனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணவாசி கந்தசாமி (46), கீழடை முத்துசாமி (71), மாணிக்கபுரம் தங்கவேல் (59), சின்னகிணத்துப்பட்டி கோபால் (47) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கரூர் மாவட்ட விவசாயிகள் பூ சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்
    • கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் உள்பட பல்வேறு ஒன்றியங்களில் விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கோழிக்கொண்டை, செண்டு மல்லி, விரிச்சிப் பூ, ரோஜா ஆகிய பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பூக்களை பறித்து கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. தற்போது கோவில் திருவிழா நடந்து வருவதாலும், தொடர்ந்து திருமண முகூர்த்தம் இருப்பதாலும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தீவிரமாக சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கரூர்,

    கரூர் மண்மங்கலம் தாலுகாவுக்குட்பட்ட சோமூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70), விவசாயி. இவர் சோமூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரில் முத்துசாமியின் கால் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×