search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல்மலையனூரில் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.
    X
    மேல்மலையனூரில் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.

    மாசி பெருவிழா: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம்

    மாசி பெருவிழாவையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி பெருவிழா மகாசிவராத்திரியான கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 25-ந்தேதி மயானக்கொள்ளை திருவிழாவும், 28-ந்தேதி தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது. மேலும் தினமும் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வெவ்வேறு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியும், 7-வது நாள் விழாவுமான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் உட்பிரகாரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பிற்பகல் 3.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புதிய தேரை கோவிலின் வடக்கு வாயில் எதிரில் கொண்டு வந்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து உட்பிரகாரத்தில் இருந்து அங்காளம்மனை மேள, தாளத்துடன் ஊஞ்சல் மண்டபத்துக்கு பூசாரிகள் கொண்டு வந்தனர்.

    இதையடுத்து அம்மன் தேரில் எழுந்தருளினார். அப்போது அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் வெள்ளத்தில் ஆடி அசைந்தபடி கோவிலை வலம் வந்தது.

    அப்போது பக்தர்கள் தங்களின் வயலில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கொழுக்கட்டை, சுண்டல், நாணயங்கள் ஆகியவற்றை தேரின் மீது வீசினர்.

    சில பக்தர்கள் முள்படுக்கையில் படுத்தும், கரகம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருநங்கைகள் அம்மன் வேடமிட்டு ஆடி வரும்போது, அவர்களது காலால் மிதித்தால் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். எனவே தேரோட்டத்தின்போது அம்மன் வேடத்தில் வந்த திருநங்கைகளின் முன்பு ஏராளமானவர்கள் வரிசையாக படுத்துக்கொண்டனர். அவர்களின் மீது அம்மன் வேடமிட்ட திருநங்கைகள் மிதித்தபடி சென்றனர்.
    Next Story
    ×