search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்று காஞ்சி மகா பெரியவர் அவதார தினம்
    X

    இன்று காஞ்சி மகா பெரியவர் அவதார தினம்

    ‘மகா பெரியவா’ என்று பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி அவதரித்த தினம்.
    ‘மகா பெரியவா’ என்று பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 124-வது ஜயந்தி தினம் இன்று (8.6.2017). அதாவது, அந்த மகான் அவதரித்த தினம்.

    உணவு, யாத்திரைகள், தங்குகிற முகாம்கள் என்று எல்லாவற்றிலும் ஆடம்பரத்தைத் தவிர்த்து, எளிமையை மட்டுமே கடைப்பிடித்து வாழ்ந்த காரணத்தால், சமீப காலத்தில் வாழ்ந்த சந்நியாசி என்றால், மகா பெரியவர்தான் எல்லோர் நினைவிலும் வருகிறார். நூறு ஆண்டுகள் வாழ்ந்தவர்.

    உலகெங்கும் இருக்கிற மகா பெரியவரின் பக்தர்கள் இன்றைய தினம் வேத பாராயணம், சிறப்பு ஹோமங்கள், தேவார - திருவாசகம் பாடுதல், சிறப்பு அபிஷேகம், திருவீதி உலா, அன்னதானம் என்று இந்த அவதார தினத்தை உள்ளார்ந்த பக்தியோடு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.

    அந்த மகான் பற்றிய ஒரே ஒரு நிகழ்வை இன்றைய தினம் பார்ப்போம்.

    மிகப் பெரிய தமிழறிஞர் கி.வா.ஜ-வை (கி.வா.ஜகந்நாதன்) அறியாதவர்கள் இருக்க முடியாது. அவருடைய மருமகளான திரிபுரசுந்தரி ஒரு முறை காஞ்சி மகா பெரியவாளை மயிலாப்பூர் முகாமில் தரிசித்தார்.

    மகானைத் தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்கள் வரிசையில் நின்று, மெள்ள மெள்ள ஊர்ந்து சென்று மகா பெரியவாளின் திருச்சந்நிதியை அடைந்தார் திரிபுரசுந்தரி.

    மகா பெரியவாளுக்குத் திரிபுரசுந்தரி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மகானுக்குத் தான் கொண்டு வந்த பழங்கள், புஷ்பங்கள் போன்ற காணிக்கைப் பொருட்களை ஒரு மூங்கில் தட்டில் வைத்து விட்டு நமஸ்கரித்தார்.



    தன் வலக்கையை உயர்த்தி, திரிபுரசுந்தரியை ஆசிர்வதித்து விட்டு, “மெட்ராஸ்ல எங்க தங்கி இருக்கே?” என்று கேட்டார் மகா பெரியவா.

    “மயிலாப்பூர்லதான் பெரியவா.” - திரிபுரசுந்தரி.

    “மயிலாப்பூர்ல கோவில்களுக்குப் போற வழக்கம் உண்டா?”

    “ஆமாம் பெரியவா. அதுவும் கபாலீஸ்வரர் கோவில்ல கற்பகாம்பாள்னா எனக்கு அவ்ளோ இஷ்டம்” என்றார் முகம் முழுக்க பரவசத்துடன்.

    “கற்பகாம்பாள்கிட்ட என்ன வேண்டிப்பே?”

    “எப்பவும் உலக நலனுக்காகத்தான் வேண்டிப்பேன் பெரியவா. தெய்வங்கள்கிட்ட நமக்குன்னு எதுவும் கேக்கக் கூடாதுனு என் மாமனார் (கி.வா.ஜ.) சொல்வார்.”

    “பலே... நான் ஒண்ணு சொல்றேன். நன்னா கேட்டுக்கோ” என்றவர், திரிபுரசுந்தரி மட்டுமல்லாமல், தன் அருகே கூடி இருந்த அனைவரையும் நோக்கிப் பேச ஆரம்பித்தார்.

    “உன்னோட போன பிறவிகள்ல நீ பண்ண புண்ணியத்துனாலதான் இப்ப மயிலாப்பூர்ல வசிக்கறே.

    இங்க இருக்கற கற்பகாம்பாள் யாரு தெரியுமா? கற்பக விருட்சம். தேவலோகத்துல கற்பக விருட்சம்னு ஒரு மரம் இருக்கு. அதுக்கு அடியில நின்னுண்டு யார் என்ன கேட்டாலும் அந்த விருட்சம் ஒடனே குடுத்துடும். அதுபோல இந்த கற்பகாம்பாள் சந்நிதிக்கு முன்னாடி நின்னுண்டு நீ என்ன கேட்டாலும் குடுத்துவா” என்று மகா பெரியவர் சொன்னபோது, மயிலாப்பூர்வாசிகள் அனைவரும் பரவசம் மேலிட, ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

    மகா பெரியவர் தொடர்ந்தார்: ‘எத்தனை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் மயிலாப்பூர்லயே பிறக்கணும். உன்னை தரிசிச்சுண்டே இருக்கணும்’னு அவகிட்ட கேட்டுக்கோ. அவளோட பார்வைல யாரும் பசியோட இருக்கறதைப் பாத்துண்டு இருக்க மாட்டா. மயிலாப்பூர்ல இருக்கிற பிச்சைகாரா, நாய்கள் போன்ற அனைவருக் கும் கற்பகாம்பாள்தான் சாப்பாடு போடறா” என்று மகா பெரியவர் முடித்ததும், திரிபுரசுந்தரி கண்களில் நீர் கசிய “பெரியவா...” என்று பெரும்குரலெடுத்து மீண்டும் அந்த மகானை வணங்கினார் திரிபுரசுந்தரி.

    ஆன்மிக எழுத்தாளர்
    பி.சுவாமிநாதன்.
    Next Story
    ×