search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நரியை பரியாக்கிய லீலை
    X

    மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நரியை பரியாக்கிய லீலை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் 8-ம் நாளான நேற்று ‘நரியை பரியாக்கிய லீலை‘ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
    நரியை பரியாக்கிய லீலை புராணம் வருமாறு:-

    “அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்துடன் மாணிக்கவாசகர் அமைச்சராக பணியாற்றி வந்தார். மன்னன் தனது படைக்குத் தேவையான குதிரைகள் வாங்குவதற்காக மாணிக்கவாசகரை பெரும்பொருளுடன் அனுப்பி வைத்தான். திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன் இறைவனை குருவாகப் பெற்ற மாணிக்கவாசகர் அங்கேயே சிவாலய திருப்பணி, சிவனடியார் திருப்பணி என மன்னர் கொடுத்த முழுப்பொருளையும் செலவிட்டார்.

    இதற்கிடையில் அரசனிடமிருந்து அழைப்பு வந்தவுடன் வெறுங்கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாமல் திகைத்துப் போய் இறைவனைத் தொழுதார். இறைவனும் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று மன்னரிடம் கூறும்படி அனுப்பி வைத்தார். ஆவணி மூலத்திருநாளும் வந்தது. ஆனால் குதிரைகள் வராதது கண்ட மன்னன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான்.

    மாணிக்கவாசகர் இது குறித்து இறைவனிடம் முறையிட்டார். அப்போது காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களை குதிரை பாகர்களாக்கி, தானே தலைவனாக இறைவன் ஒரு குதிரையின் மீதேறி மதுரைக்கு வந்தடைந்தார். இதைக் கண்ட அரசனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரை பாராட்டினான். ஆனால் அன்று இரவு அந்த குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி, அங்கிருந்த குதிரைகளை கொன்று விட்டு காட்டை நோக்கி ஓடின.



    இதை கண்ட மன்னன், மாணிக்கவாசகரை தண்டிக்க நினைத்து அவரை கட்டி சுடுமணலில் கிடக்கச் செய்தான். இறைவன், மாணிக்கவாசகரை காக்கும் பொருட்டு வைகையாற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார்.“

    இவ்வாறு புராணம் கூறுகிறது.

    நரியை பரியாக்கிய நேற்றைய லீலையின் தொடர்ச்சியாக, இன்று (சனிக்கிழமை) பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.

    இதையொட்டி, காலை 6 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து சாமியும், அம்மனும் பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பு பகுதிக்கு செல்கிறார்கள்.

    அங்கு மதியம் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து முடிந்து இரவு கோவில் வரும் வரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.
    Next Story
    ×