search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடியில் பிறந்தாலும் கோடீஸ்வரர் ஆகலாம்
    X

    ஆடியில் பிறந்தாலும் கோடீஸ்வரர் ஆகலாம்

    ஒரு குழந்தை ஆடி மாதம் பிறந்துவிட்டால், அது ஏதோ ஆகாத மாதம் என்பார்கள். ஆனால் ஆடி மாதத்தில் பிறந்த எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வாழ்கிறார்கள்.
    ஒரு குழந்தை ஆடி மாதம் பிறந்துவிட்டால், அது ஏதோ ஆகாத மாதம் போல அங்கலாய்க்கும் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆடி மாதத்தில் பிறந்த எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாகவும், குவலயம் போற்றுபவர்களாகவும் வாழ்கிறார்கள். எல்லாவற்றுக்கும் நவக் கிரகங்கள்தான் காரணமாக அமைகின்றது. ஆடி மாதத்தில் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் மற்ற கிரகங்களின் அமைப்பையும் பொறுத்தே வாழ்க்கை அமைகின்றது. கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்வின் வளர்ச்சி என்பதால், ஆடிமாதம் என்பதெல்லாம் ஒரு கணக்கே அல்ல.

    ‘நாள் செய்வதை நல்லவன் செய்ய மாட்டான்’, ‘கோள் செய்வதை கொடுப்பவன் செய்ய மாட்டான்’ என்பது பழமொழி. அப்படிப்பட்ட கோள்களில் ராஜகிரகம் என்று வர்ணிக்கப்படுவது சூரியன். அவர் ஆடி மாதத்தில் கடக ராசியில் பயணிப்பார். இந்த மாதத்தில் ஆண் குழந்தை பிறந்து விட்டால் பெற்றோர்களை ஆட்டிவைக்கும் என்று சொல்மொழியாக இருக்கிறது.

    அதாவது பெற்றோர் செல்வ வளத்தோடும், செல்வாக்கு விருத்தியோடும் இருக்கும் நேரத்தில், ஆடி மாதத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவர்களுக்குத் தொழிலில் இழப்புகள் ஏற்பட்டால், அதற்கு பிறந்த குழந்தை தான் காரணம் என்று அதன் மீது குற்றம் சுமத்துவார்கள். ஆனால் உண்மையில் அந்த தொழில் இழப்புக்கு, அவர்களின் சுய ஜாதகத்தின் தெசாபுத்திப் பலன்தான் காரணம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    பொதுவாக ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பலர், மேதைகளாகவும், தலை சிறந்த அறிஞர்களாகவும் விளங்குகிறார்கள். பிடிவாத குணத்தை மட்டும் இவர்கள் தளர்த்திக் கொண்டால் பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை அமையும். ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக பெற்றோர் களின் சொற்களைக் கேட்டு நடக்காமல் ஆடி ஓடிக் கொண்டு திரிபவர்களாகவும், ‘சுட்டிப்பிள்ளை’ என்று இளம் பருவத்திலேயே பட்டம் பெற்றவர்களாகவும் விளங்குவர். எதையும் ஒரு முறை பார்த்தால் அதை மனதில் பதித்து வைத்துக் கொள்வார்கள். மூளை பலமே இவர் களுக்கு மூல பலமாகும். சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகம் உண்டு. வழக்குகள் எத்தனை வந்தாலும் கடைசியில் வெற்றி இவர்களுக்குத் தான். இவர்களது சுறுசுறுப்பு மக்களைக் கவர்ந்திழுக்கும். அவசரக்காரர்களைப் போல தோற்றமளித்தாலும் எதையும் ஆலோசித்து முடிவெடுப்பர். எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலும் ஆடியில் பிறந்தவர்களுக்கு உண்டு.

    வாழ்வில் சுகத்தை மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் துக்கத்தையும், தூக்கத்தையும் ஒதுக்கி விடும் சுபாவம் பெற்றவர்கள். பக்கத்தில் இருப்பவர்களுடன் பளிச்சென்று பேசி, காரியங்களை முடித்துக் கொள்வார்கள். இவர்களிடம் வாக்குக் கொடுத்தவர்கள் அதை நிறைவேற்றாமல் தப்பிக்க முடியாது. பணம் சம்பாதிக்கும் திறமை இவர்களிடம் இருப்பதை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, பெற்றோரின் ஒப்புதலைக் கேட்டு முடிவெடுத்தால் அற்புத வாழ்க்கை அமையும்.

    கட்டிடத் தொழில், பல்பொருள் விற்பனை நிலையம், மளிகை மற்றும் பதப்படுத்தப்படாத உணவுப் பொருள் வணிகம், தண்ணீர் வஸ்துகள், பால், குளிர்பானம் வியாபாரம் நூல், துணி விற்பனை நிலையங்கள் ஆயத்த ஆடையகம், மின்சாரத்துறை மற்றும் திரைத் துறைகளைத் தேர்ந்தெடுத்து தொழில் செய்தவர்கள் வளர்ச்சியும் வருமானமும் காண்பர்.

    பொதுவாகவே இம்மாதம் பிறந்தவர்கள் உஷ்ணத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய உடல்வாகு பெற்றவர்களாக இருப்பர். அம்மை நோயின் தாக்குதலுக்கு ஆட்பட நேரிடலாம். உடல்நலத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. மனதை செம்மையாக வைத்துக்கொள்வதில் அதிகப் பிரயாசை காட்டும் நீங்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் மட்டும் அலட்சியம் காட்டுவீர்கள். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற முன்னோர் வாக்கைக் கடைப்பிடித்தால் எண்ணற்ற நற்பலன்கள் கிடைக்கும். ஆவணி, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் எதிர்காலம் இனிமையானதாக அமையும்.

    இம்மாதம் பிறந்தவர்களுக்கு வரம் கொடுக்கும் தெய்வமாக வடக்கு நோக்கிய அம்பிகை துணையாக அமையும். செவ்வாய் தோறும் அம்பிகை, மாரியம்மன், காளியம்மன், துர்க்கை மற்றும் வடக்குப் பார்த்த அம்பிகை, கொற்றவை போன்ற தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தடைக்கற்கள் கூட படிக்கற்களாக மாறும்.

    ஆகவே ஆடி மாதம் பிறந்துவிட்டோமே, அதனால் அலைச்சல் வருகின்றதே, ஆட்டிப்படைக்கின்றதே என்றெல்லாம் கற்பனை செய்து பார்க்க வேண்டாம். ஆடியில் பிறந்தவர்கள் அவர்கள் பாக்கிய ஸ்தான பலமறிந்து, அதற்குரிய ஆலயங்களைத் தேடிச்சென்று வழிபட்டால் கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். கோடீஸ்வரர் பட்டியலிலும் இடம்பெறலாம். 
    Next Story
    ×