search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மெரீனா கடற்கரையில் அகற்றப்பட்ட சிவாஜி சிலை அடையார் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது
    X

    மெரீனா கடற்கரையில் அகற்றப்பட்ட சிவாஜி சிலை அடையார் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது

    ஐகோர்ட் தீர்ப்பை அடுத்து, சென்னை மெரீனா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலை அகற்றப்பட்டு, அடையாரில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.
    சென்னை:

    உலகம் முழுக்க வாழும் தமிழர்களின் மனதில் தம் நடிப்பால் நிலையான இடத்தைப் பிடித்தவர் “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன்.

    நடிப்புக்கு இலக்கணம் வகுத்த அந்த கலையுலக மேதை கடந்த 2001-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

    திரை உலகில் சிவாஜி கணேசன் செய்த மகத்தான சாதனைகளையும், சேவை களையும் போற்றும் வகையில் அவருக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டப்படும், சிலை நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது சிவாஜிகணேசனுக்கு சென்னை மெரீனா கடற் கரையில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.

    சிவாஜிகணேசன் இடுப்பில் கையை வைத்தபடி சுமார் 8 அடி உயரத்தில் கம்பீரமாக பார்த்தபடி நிற்கும் அந்த அழகான சிலையை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி 2006-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி திறந்து வைத்தார்.

    மெரீனா கடற்கரையில் காமராஜர் சாலையும் ராதா கிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் பகுதியில் அமைந்த அந்த சிலை அமைப்பு சிவாஜி ரசிகர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சிவாஜி ரசிகர்கள் தினமும் அந்த சிலைக்கு மாலை அணிவித்து பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த காந்தியவாதி சீனிவாசன் என்பவர் சிவாஜி சிலை நிறுவப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “மெரீனா கடற்கரையில் முக்கிய சந்திப்பில் பீடம் அமைத்து சிவாஜி சிலை அமைக்கப்பட்டுள்ளதால் அது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சிவாஜி சிலையை அகற்றி வேறு இடத்தில் நிறுவ வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    சென்னை ஐகோர்ட்டில் பல மாதங்களாக நடந்து வந்த அந்த வழக்கில் 2015-ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மெரீனா கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவை அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொண்டது.

    என்றாலும் சிவாஜி சிலையை அகற்ற காலஅவ காசம் தர வேண்டும் என்று தமிழக அரசு கூறியது. இது தொடர்பாக சட்டசபை யில் பேசிய ஜெயலலிதா, “அடையாரில் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்த பிறகு சிவாஜி சிலையை அகற்றும் நடவடிக்கை நடைபெறும்” என்றார்.

    தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிவாஜி சிலையை அகற்ற சென்னை ஐகோர்ட்டு கால அவகாசம் வழங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த கால அவகாசம் நீடித்தது.

    இந்த நிலையில் சென்னை அடையாரில் சத்யா ஸ்டுடியோ எதிரில் கட்டப்பட்டு வந்த சிவாஜி மணிமண்டபம் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றன. எனவே சிவாஜி சிலை எந்த நேரத்திலும் அகற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சிவாஜி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சமூக நல பேரவை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் சிலை அகற்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    “தமிழகம் முழுவதும் சாலை நடுவில் 13000 சிலைகள் இருக்கிறது. எனவே சிவாஜி சிலை அகற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் சிலையை மெரீனா கட லோரம் மற்ற சிலைகள் வரிசையில் நிறுவ உத்தரவிட வேண்டும்” என்று சிவாஜி பேரவை தன் மனுவில் கூறியிருந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 18-ந்தேதி தீர்ப் பளித்த ஐகோர்ட்டு, “சிவாஜி சிலையை அகற்ற தடை இல்லை” என்று அறிவித்தது.

    இதையடுத்து நேற்றிரவு சிவாஜி சிலையை அகற்றும் அதிரடி நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. நள்ளிரவு 1 மணிக்கு மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிறகு சுமார் 50 ஊழியர்கள் சிவாஜி சிலையை அகற்றத் தொடங்கினார்கள்.

    சிவாஜி சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் “வெல்டிங்” செய்யும் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றப்பட்டது. பிறகு சிலையை பீடத்தில் இருந்து பெயர்த்து எடுத்தனர். இன்று அதிகாலை 4.15 மணிக்கு அந்த பணி முடிந்தது.

    4.30 மணிக்கு ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு, சிவாஜி சிலையை லாரியில் ஏற்றினார்கள். லாரிக்குள் சிவாஜி சிலை நிற்கும் வகையில் நிறுத்தப்பட்டு நாலாபுறமும் கயிற்றால் கட்டப்பட்டது. பின்னர் சிலையை அடையாருக்கு கொண்டு சென்றனர்.

    சிலை சரிந்து விடக்கூடாது என்பதற்காக லாரி மெல்ல சென்றது. 5.15 மணிக்கு அடையாரில் உள்ள மணிமண்டபத்துக்கு சிவாஜி சிலை வந்து சேர்ந்தது. உடனடியாக சிலை மீண்டும் கிரேன் மூலம் லாரியில் இருந்து இறக்கப்பட்டது.

    கிரேனில் தொங்கிய நிலையில் சிவாஜி சிலை மணி மண்டபத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. அதை பொதுமக்கள் பார்த்தால் சர்ச்சையாகி விடக்கூடும் என்று கருதிய அதிகாரிகள் அந்த கிரேனில் தொங்கிய நிலையில் இந்த சிவாஜி சிலையை மணிமண்டபத்தின் பின்பக்கம் கொண்டு சென்று நிறுத்தினார்கள்.

    காலை 9 மணி அளவில் மணிமண்டபத்துக்கு கட்டிடத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். 10 மணி அளவில் சிவாஜி சிலையை கிரேனில் இருந்து இறக்கும் பணி தொடங்கியது. பிறகு சிலையை மணிமண்டபத்துக்குள் கொண்டு சென்றனர்.

    8 அடி உயரமுள்ள அந்த பிரமாண்ட சிலையை அப்படியே தூக்கிச் செல்ல இயலாது என்பதால், மணி மண்டபத்தின் உள்பகுதியில் இருந்து வெளியே வாயில் வரை மணல் மூடைகளை அடுக்கி, அதன்மீது சிலையை படுக்க வைத்து உருட்டியபடி உள்ளே கொண்டு சென்றனர். பிறகு சிலை நிறுவப்பட்டது.

    விரைவில் மணிமண்டபம் திறக்கப்பட்டு, இந்த சிலையையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×