search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மணிகண்ட மாலையின் மாய சக்தி
    X

    மணிகண்ட மாலையின் மாய சக்தி

    • அய்யப்பசாமியின் திறமையையும், பெருமையையும், தெய்வத்தன்மையையும் உணர்ந்த வாபர், அய்யப்பனிடம் அடிபணிந்தார்.
    • சபரிமலைக்கு வரும் யாத்திரிகர்களுக்கு காவல் தெய்வமாகவும் காட்சி அளிக்கிறார்.

    சபரிமலையில் சாஸ்தாவின் கோவிலை அமைக்கும் பந்தள நாட்டு மன்னர் முயற்சிக்கு அய்யப்பசாமியும் பல்வேறு வகையில் உதவி செய்தார். அப்பகுதியில் வாழ்ந்த பயங்கர கொள்ளைக்கூட்டத்தோடு பலமுறை கடும் போர் புரிந்து வெற்றி கண்டார். தர்சாஸ்தாதான் அய்யப்ப சாமியாக அவதாரம் எடுத்து இருக்கிறார் என்ற உண்மை வெளியான பிறகு அவர் பந்தள நாட்டில் இருந்து புறப்பட்டு காயங்குளம் சென்றார். அங்கிருந்த மன்னனிடம் அப்பகுதியில் நிலவி வந்த சூழ்நிலைகளை பற்றி நன்கு கேட்டு அறிந்தார்.

    அப்போது பெரும் கடற்கொள்ளையனான வாபர் என்பவரால்தான் பெருந்தொல்லைகள் ஏற்படுகின்றன என்று அந்த மன்னன் விளக்கினார். வாபர் வீரதீரம் மிக்கவராய் விளக்கியதோடு மந்திர தந்திரங்களில் வல்லவராகவும் திகழ்ந்து வந்தார். எனவே அவர் பலரை அடிமையாக்கி வைத்து இருந்தார். கொள்ளை அடிப்பதையே தொழிலாக கொண்டு இருந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை ஏழை-எளிய மக்களுக்கு வாரி வழங்கி வந்தார். அவரது பேராற்றலையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த அய்யப்பசாமி, அவரை வென்று அடிமையாக்கிக்கொள்ள விரும்பவில்லை. அவனை நண்பனாக்கி கொள்ளவே விரும்பினார். இதை எல்லாம் மனதில் கொண்டு அவனை எதிர்த்து போரிட்டு வெற்றி வாகை சூடினார்.

    காவல் தெய்வம்

    அய்யப்பசாமியின் திறமையையும், பெருமையையும், தெய்வத்தன்மையையும் உணர்ந்த வாபர், அய்யப்பனிடம் அடிபணிந்தார். அந்த வேளையில் அவருக்கு நல்ல உபதேசங்கள் பல செய்து அவரை அய்யன் தனது நண்பனாக்கிக் கொண்டார். அந்த வேளையில் மக்களுக்கும் மற்றும் உள்ள உயிர்களுக்கு பணிபுரிய தடை ஏதும் இல்லை என்று அய்யன் அன்புடன் வாபரிடம் எடுத்துக் கூறினார். அய்யனின் கருத்துக்களை கேட்டறிந்ததில் இருந்து வாபரின் நிலை உயர்ந்தது. அவர் அய்யப்பசாமியின் தோழராகி தூய தொண்டு செய்தார். சபரிமலைக்கு வரும் யாத்திரிகர்களுக்கு காவல் தெய்வமாகவும் காட்சி அளிக்கிறார்.

    சபரிமலைக்கு இந்துக்கள் மட்டுமல்லாமல் இதர மதத்தினரும் இருமுடி கட்டி மலைக்கு சென்று அய்யப்பனை தரிசித்து செல்கிறார்கள். அய்யப்பசாமி ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்த தெய்வமாக காட்சி தந்து கருணை பொழிகிறார். அய்யப்பசாமியை தியானித்து மாலை அணிந்து கொண்டால் அய்யப்பமார்களுக்கு தன்னை அறியாமலேயே ஒரு சக்தி வந்து விடுகிறது. மன ஒருமைப்பாடு தோன்றுகிறது. நினைத்ததை முடிக்கும் ஆற்றல் ஏற்படுகிறது. தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுதலை அடைய வாய்ப்பு ஏற்படுகிறது. மணிகண்ட பெருமானின் மாலையை அணிந்தால் எந்த கண்டத்தையும் வென்று விடலாம்.

    Next Story
    ×