search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நினைத்ததை நிறைவேற்றும் விநாயகர்!
    X

    நினைத்ததை நிறைவேற்றும் விநாயகர்!

    • சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமரத்தில் இவர் இயற்கையாகவே தோன்றி அருள் பாலித்து வருகிறார்.
    • நாளடைவில் “ஆலமர இயற்கை விநாயகர்’’ என்ற பெயர் உருவானது.

    வேழ முகத்து விநாயகனைத் தொழு, வாழ்வு மிகுந்து வரும்- என்று அவ்வையார் பாடி இருக்கிறார். விநாயகர் மிகவும் வித்தியாசமான கடவுள். இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும் விநாயகருக்கு என்று பல தனிச்சிறப்புகள் உள்ளன. கடவுள்களுக்கு எல்லாம் கடவுள் என்ற தனித்துவம் இவருக்கு உரியது.

    இவருக்கு மேல் இறைவன் இல்லை என்பார்கள். அதனால்தான் எந்த வழிபாட்டை தொடங்கினாலும் முதல் வணக்கம் விநாயகருக்கு செலுத்துகிறோம். இவரை அமைப்பதற்கும் வணங்குவதற்கும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை.

    அரச மரம், ஆலமரம், ஆற்றங்கரை, முச்சந்தி என்று எங்கு வேண்டுமானாலும் இவர் இருப்பார். அதுபோல விநாயகரை போற்றி வழிபட நம் முன்னோர்கள் 32 வகை விநாயக மூர்த்தங்களை ஏற்படுத்தி இருந்தாலும், தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வித்தியாசமான பெயர்களில் விநாயகர் வீற்றிருந்து அருள் புரிந்து வருகிறார்.

    இத்தகைய சிறப்பு உலகில் எந்த கடவுளுக்குமே இல்லை. நவீன மாற்றங்களுக்கு ஏற்ப கூட விநாயகரது பெயருக்கு முன்பு புதிய அடைமொழிகள் சேர்ந்துள்ளன. கிரிக்கெட் விநாயகர், இண்டர்நெட் விநாயகர் எல்லாம் வந்து விட்டார்கள். அந்த வரிசையில் சென்னையில் தனித்துவம் கொண்ட ஒரு விநாயகர் இருக்கிறார்.

    அவர் பெயர் ஆலமர இயற்கை விநாயகர். சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமரத்தில் இவர் இயற்கையாகவே தோன்றி அருள் பாலித்து வருகிறார். அதனால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டு நிலைத்து விட்டது. சென்னையில் சமீபத்தில் எடுத்த ஒரு புள்ளி விபர கணக்கெடுப்புப்படி சென்னை மற்றும் புறநகர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் ஆலயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

    மயிலாப்பூரில் அதிகபட்சமாக 12 விநாயகர் கோவில்கள் இருக்கின்றன. இந்த விநாயகர் ஆலயங்களில் பெரும்பாலானவை பழமை சிறப்பு வாய்ந்தவை. நங்கநல்லூரில் உள்ள விநாயகர் ஆலயம் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது.

    என்றாலும் அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் அதிக அளவில் பக்தர்களையும் வி.ஐ.பி.க்களையும் தன்னகத்தே ஈர்த்து அருள்பாலித்து வருகிறார். இவர் ஆலமரத்தில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டதை ஒரு அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் இந்த ஆலயம் உள்ள பகுதியில் முன்பு ஒரு சிவாலயம் இருந்தது.

    அந்த சிவனை வழிபட சென்ற பத்மநாபன் என்ற பக்தர் சற்று இளைப்பாறுவதற்காக அருகில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் படுத்தார். சிறிது நேரம் கழித்து சிறிது திரும்பி படுத்தவர், ஆலமரத்தின் வேர் பகுதியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அந்த வேர் பகுதி அச்சு அசல் விநாயகர் போலவே காட்சியளித்தது. உடனே மற்ற பக்தர்களை அழைத்து வந்து காண்பித்தார்.

    ஆலமர வேரில் விநாயகரே வந்து அமர்ந்து இருப்பது போன்ற கோலத்தை கண்டதும் எல்லோரும் தலையில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட ஆரம்பித்து விட்டனர். மறுநாளே அந்த ஆலமர வேர் விநாயகருக்கு தடபுடலாக பூஜைகள் நடந்தது. இதுபற்றி அறிந்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆலமர வேர் விநாயகரை வணங்கிச் சென்றனர்.

    எல்லோரது வாயிலும் ஆலமர விநாயகர் என்று பேசப்பட்டது. நாளடைவில் "ஆலமர இயற்கை விநாயகர்'' என்ற பெயர் உருவானது. இந்த விநாயகர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாள் 1968-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி.

    எனவே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 14-ந்தேதி ஆலமர இயற்கை விநாயகர் ஜெயந்தியை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் பச்சையம்மன் ஆலய உபகோவிலாக இருக்கிறது. காலை 7 மணிக்கு இந்த ஆலயம் திறக்கப்படும்.

    7.30 மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம் நடந்து பூஜை செய்யப்படும். மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை இவரை வழிபடலாம். இந்த ஆல மர இயற்கை விநாயகர் மிகுந்த சக்தி படைத்தவர் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் பரவியுள்ளது. அதற்கு ஒரு காரணம் உள்ளது. பொதுவாக தல விருட்சங்களுக்கு தனி ஜீவன் உண்டு.

    எனவேதான் தல விருட்சங்களை கடவுள் மூர்த்தங்களுக்கு இணையாக கருதி, சுற்றி வந்து வழிபடுவதை தமிழர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். அத்தகைய தல விருட்சத்தின் வேரிலேயே விநாயகர் தன்னை வெளிப்படுத்தி இருப்பதால், இந்த ஆலமர இயற்கை விநாயகருக்கு இரட்டிப்பு சக்தி இருப்பதாக கருதப்படுகிறது.

    இதனால்தான் அரசினர் தோட்டத்து விநாயகரை சில அரசியல் பிரமுகர்கள் எந்த காரியம் தொடங்கினாலும், முதலில் வந்து வணங்கி செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். கற்பக விருட்சங்களுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது கேட்ட வரத்தை தரும் ஆற்றல் கற்பக விருட்சங்களுக்கு இருக்கிறது.

    எனவே ஆலமர இயற்கை விநாயகரும், கேட்ட வரத்தை உடனே தருபவர் என்று பெயர் பெற்றுள்ளார். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் இந்த ஆலமர விநாயகரை வழிபட மிகவும் உகந்த நாட்களாகும். மேலும் இவருக்கு என்று ஒரு தனி சிறப்பான வழிபாடு இருக்கிறது. அது நாட்டு சர்க்கரையை படைத்து வழிபடும் வழிபாடாகும்.

    உங்களால் முடிந்த அளவு நாட்டு சர்க்கரையை வாங்கி 11 வாரங்கள் ஆலமர இயற்கை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். பதினோராவது வாரம் சிதறு தேங்காய் அடித்து வழிபட்டால், நீங்கள் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

    நிறைய பேர் நாட்டு சர்க்கரை படைத்து ஆலமர இயற்கை விநாயகர் கருணையால் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி கொண்டுள்ளனர். சில பக்தர்களின் கனவில் இந்த விநாயகர் தோன்றி தன் ஆலயத்துக்கு வரவழைத்து அருள் பாலித்த அற்புதங்களும் நடந்துள்ளன.

    இந்த அற்புதங்களை அறிந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ஆலயத் திருப்பணிக்கு ரூ.20 லட்சம் வழங்கினார். அதன் மூலம் இந்த ஆலயத்தில் சிவன்-வள்ளி, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், தெட்சிணா மூர்த்தி, துர்க்கை, பெருமாள்-மகாலட்சுமி, சுதர்சனர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், அன்னபூரணி, சரஸ்வதி மற்றும் நவக் கிரக சன்னதிகள் அமைக்கப்பட்டன.

    அதன்பின்னர் இந்த ஆலயத்துக்கு மிக விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சமீப காலமாக ஆலமர விநாயகருக்கு நாட்டு சர்க்கரை படைக்கும் பிரார்த்தனை பிரபலமாகி வருகிறது. இந்த ஆலயத்தை நாடி வந்து விநாயகர் அருளைப் பெற்றுச் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

    மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதற்கு ஏற்ப இந்த ஆலயம் சிறிய ஆலயமாக இருந்தாலும் கேட்ட வரம் தரும் விநாயகர் ஆலயம் என்ற மகிமையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×