search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள்
    X

    சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள்

    • நாட்டுப்புற தெய்வங்கள் என அழைக்கப்படுவது சிறு தெய்வங்களேயாகும்.
    • கலைகளின் வளர்ச்சிக்குத் திருவிழாக்கள் மூலகாரணம் எனின் மிகையாகாது.

    நாட்டுப்புறத் தெய்வங்கள் என அழைக்கப்படுவது சிறு தெய்வங்களேயாகும். சிறுதெய்வ வழிபாடு பெரும்பாலும் நாட்டுப்புறங்களில் தான் மிகவும் நேர்த்தியாக நடைபெறுகிறது. இச்சிறு தெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகளும் நாட்டுப்புறப்பாடல்களும் பரவியுள்ளன. சிறுதெய்வ வழிபாட்டில் திருவிழா, கலை, பண்பாடு, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் போன்ற நாட்டுப்புறக் கூறுகள் உள்ளன. இந்நாட்டுப்புறக் கூறுகளை சிறுதெய்வ வழிபாட்டின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    வழிபாடு விளக்கம்:-

    "வழிபாடு என்ற சொல்லுக்கு வணக்கம், கோட்பாடு, பூசனை, பின்பற்றுதல், வழக்கம் என பல பொருள்கள் இருப்பினும் கடவுளையோ, உயிர் இல்லாதவற்றையோ, உயிர் உள்ளவற்றையோ, வாயால், மனத்தால் வழிபடுவதே வழிபாடு" என தமிழ் லெக்சிகன் விளக்கம் தருகிறது.

    குறிப்பிட்ட ஒரு வெற்றிடத்தை வழிபடல், நிலைக்கதவை வழிபடல், பீடத்தை வழிபடல், உருவத்தை வழிபடல், நடுகல்லை வழிபடல் என வழிபாட்டில் பல நிலைகள் இருந்து வருகின்றன.

    சிறுதெய்வ வழிபாடு:-

    இயற்கை வழிபாடே உலகின் தொன்மையான வழிபாடாக கருதப்படுகின்றது. இயற்கை வழிபாட்டின் தொடக்க நிலையில் இருந்து சிறு தெய்வ வழிபாடு தோன்றியது எனலாம்.

    "வீட்டுத் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு என நான்கு வகைப்படும். முதல் மூன்றையும் சிறு தெய்வ வழிபாட்டின் கண் அடக்குவர். சிறுதெய்வ வழிபாடு குலதெய்வ வழிபாடாகவும், குலதெய்வ வழிபாடு ஊர் தெய்வ வழிபாடாகவும், ஊர் தெய்வ வழிபாடு நாடு தழுவிய வழிபாடாகவும் மாறுகின்றது. இத்தகைய சிறுதெய்வ வழிபாட்டால் ஒரு சமுதாயத்தின் தொன்மை கூறுகளை அறியலாம்.

    சிறு தெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள்:-

    மனித வாழ்வில் இன்பங்களையும் துன்பங்களையும் ஒருசேர வழங்கி மனிதனைத் தன்வயப்படுத்தி வணங்குமாறு செய்த நிலையில் சிறு தெய்வ வழிபாடு தோன்றியது எனலாம். இச்சிறு தெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள் மிகுதியும் காணக்கிடக்கின்றன. இந்நாட்டுப்புறக் கூறுகளைத் திருவிழாக்களில் காணலாம்.

    பண்பட்ட சமுதாயத்தின் விளக்கமே திருவிழா எனலாம். விழா என்னும் திறந்த வாசல் வழியேதான் நம் நாட்டு மக்களை அறிந்து கொள்ளமுடியும் எனத் தாகூரின் கருத்தினை மேற்கோள் காட்டுவர். சு. சக்திவேல். திருவிழாக்கள் மூலம் கலையாற்றலும் கலையனுபவமும் மேலோங்கி வளர்கின்றன.

    கலைகளின் வளர்ச்சிக்குத் திருவிழாக்கள் மூலகாரணம் எனின் மிகையாகாது. தொன்று தொட்டே கலைகள் அனைத்தும் கோயில்களோடும் விழாக்களோடும் இணைந்துவிட்டன. இத்திருவிழாக்களின் உட்கூறுகளான கலை, பண்பாடு, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், ஒற்றுமை, உளவியல் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் சிறுதெய்வ வழிபாடு அமைந்துள்ளது.

    நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் பண்பாட்டு வளர்ச்சியின் படிக்கற்கள் எனலாம். அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்று கூறுலாம். நம்பிக்கைகள் காலம் காலமாக ஒரு தலைமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பலவித நம்பிக்கைகளை கொண்டிருக்க காண்கிறோம்.

    சிறுதெய்வங்களுக்கு நிகழ்த்தப்படும் தீமிதி, அக்கினி சட்டி எடுத்தல், அலகு குத்திக் கொள்ளுதல் போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக மனிதனின் பண்பட்ட மன உறுதியையும் நம்பிக்கையையும் அறியமுடிகிறது. இவ்வாறு தன்னை வறுத்திக் கொள்வதன் மூலம் வாழ்வில் ஏற்படும் எல்லா இடையூறுகளையும் எதிர்கொள்ளும் மனத்திட்பம் மக்கள்பால் ஏற்படுகிறது என்பதைச் சிறுதெய்வ வழிபாட்டால் அறியலாம்.

    "பண்பாடு" என்னும் சொல் ஒத்துப்போதல், இசைந்து நடத்தல், பொருந்தி வாழ்தல் என்பன போன்ற பொருள்களைத் தரும். "பண்பு என்ற சொல்லிற்குக் குணம், தகுதி, இயல்பு, தன்மை, முறை என்ற பொருள்கள் வழக்கில் உள்ளன. சிறுதெய்வ வழிபாட்டால் மக்கள் கூடிவாழும் நற்பண்புகளைக் கற்றுக் கொண்டனர்.

    பொய்பேசுதல், களவு, கொலை, கொள்ளை போன்ற தீய பண்புகள் இல்லாமல் மக்கள் வாழ்வதற்குக் காரணம் நாட்டுப்புறங்களில் நடைபெறும் சிறுதெய்வ வழிபாடேயாகும், சிறுதெய்வ வழிபாட்டினைப் "பழந்தமிழ் மக்களின் பண்பாட்டுக் கண்ணாடி" என்கிறார் ச.கணபதிராமன். இவ்வாறு சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக்கூறுகள் கலந்துள்ளதை அறிய முடிகிறது.

    Next Story
    ×