search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சுவாமிமலை- நான்காவது படைவீடு
    X

    சுவாமிமலை- நான்காவது படைவீடு

    • வடமொழியில் சுவாமிநாதனை “ஞானஸ்கந்தன்” என்று போற்றுகின்றனர்.
    • கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாக திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    தந்தைக்கே குருவான கதை:

    படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு -ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான்.

    ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.

    அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.

    முருகப்பெருமான் காட்சி:

    இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.

    மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

    தலவிருட்சம் நெல்லி:

    நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

    அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

    இயற்கையான மலை அல்ல:

    சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

    தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.

    மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

    மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.

    திருவிழாக்கள் விவரம்:

    இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    Next Story
    ×