search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில் தல வரலாறு
    X

    அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில் தல வரலாறு

    • சுந்தரர் சுவாமிகள் ‘நான் உன்னைப்பிரியேன்’ என்று சங்கிலி நாச்சியாருக்குச் செய்த உறுதிமொழியை மீறியதால் கண் பார்வை இழந்தார்.
    • சிவபெருமானிடம் ஊன்றுகோல் பெற்று கோபமுடன் எறிந்த தாகையால் அக்கோல் நந்தியின் வலக்கொம்பில் பட சிறிது ஒடிந்தது.

    திருக்கோவிலின் சிறப்பு:-

    நால்வர் பெருமக்களில் ஒருவராகிய சுந்தர மூர்த்தி சுவாமிகள் கண்களை இழந்தவுடன் ஊன்றுகோல் பெற்றிட்ட அற்புதத்தலமாகும்

    திருக்கோவிலில் தல வரலாறு

    திருக்கயிலை மலையில் உமையம்மைக்குப்பணிபுரியும் தோழிமார் இருவரில் ஒருவர் கமலினி மற்றொருவர் அநிந்திரையார் என்பவர். கமலினி என்பார் திருவாரூரில் பரவையராக பிறந்து நம் சுந்தரரை மணம் முடித்ததை நாம் அறிவோம்.

    மற்றொருவராகிய அநிந்திரையார் என்பார் தொண்டை நாட்டில் ஞாயிறு என்னும் ஊரில் சிறந்த வேளாண்குலத்தில் தோன்றி ஞாயிறு கிழார் என்பவருக்கு மகளாய்ப்பிறந்து சங்கிலியார் திருவொற்றியூர் தல இறைவனை தரிசித்து வரும் வேளையில் சுந்தரருக்கு இறைவன் செயலால் சங்கிலி நாச்சியாரை மணம் முடிக்கும் அவா பிறந்தது. சங்கிலி நாச்சியாரை 2-வது மணமாக முடிக்கையில் பிரிந்து போக நேரிடுமே எனக்கருதி இறைவன் முன்னிலையில் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைப்பிரியேன் என சத்தியம் செய்து தர சங்கிலி நாச்சியார் வேண்டுகிறார்.

    சுந்தரர் திருவொற்றியூர் கோவிலில் மகிழ மரத்தடியில் சங்கிலி நாச்சியாரைப்பிரியேன் என உறுதி அளித்த பின், தென்றலின் தீண்டலால் ஆரூரார் நினைவு மீதுறப்பெற்று, வசந்த விழாவினைக்காணும் பெருவேட்கையால் திருவொற்றியூர் எல்லையை நீங்கவும் தன் கண்களின் ஒளிமறையப்பெற தன் சூலுறவால் இவ்வினை வரப்பெற்றேன் போலும், சிவனைப்பாடியே இவ்வினையைத் தீர்ப்பேன் என்ற உறுதி பட திருவொற்றியூர் பதிகத்தைப்பாடியபின் வடதிருமுல்லைவாயல் வந்தடைகிறார்.

    ஆங்கே சிவபெருமானைத் துதித்துப்பாடிய பின் திருவெண்பாக்கம் எனப்படும் திருவளம்புதூர்(பூண்டி)திருத்தலத்திற்கு வந்து சேர்கிறார். திருவொற்றியூரிலிருந்து வடதிருமுல்லைவாயிலை மிகவும் சிரமத்துடன் கண்பார்வையின்றி கடந்து வந்தபின் பூண்டி (திருவெண்பாக்கம்) அடைகிறார்.

    சுந்தரர் சுவாமிகள் 'நான் உன்னைப்பிரியேன்' என்று சங்கிலி நாச்சியாருக்குச் செய்த உறுதிமொழியை மீறியதால் கண் பார்வை இழந்தார். திருவளம்புதூரில் இறைவனிடம் கண்பார்வை அளிக்கும்படி வேண்டி, இறைவன் தலத்தில் உள்ளாரா என சந்தேகித்து, சிறிதே வருத்தம் மற்றும் கோபமுடன் 11 பாடல்கள் பாடி வேண்டும் வேளையில், இறைவன் அவர் ஊன்றுகோல் மட்டும் அளித்து 'இங்கு உளோம் போகீர்' என்று அருள் செய்கிறார். பார்வை கேட்டால் ஊன்றகோல் அளிக்கிறீரே என நண்பராகையால் ஊன்றுகோலை இறை இருக்கும் திசையில் எறிகிறார்.

    சிவபெருமானிடம் ஊன்றுகோல் பெற்று கோபமுடன் எறிந்த தாகையால் அக்கோல் நந்தியின் வலக்கொம்பில் பட சிறிது ஒடிந்தது. ஒடிந்த நிலையில் உள்ள கொம்புடன் நந்தியையும் இடக்கையில் ஊன்றுகோலுடன் உள்ள சிவபெருமானையும் இத்திருக்கோவிலில் காணலாம்.

    இறைவன் நாமம்- வெண்பாக்கநாதராக ஊன்றீஸ்வரர்

    இறைவியின் நாமம்- கனிவாய்மொழி மின்னொளி நாயகி

    தீர்த்தம்- கயிலாயத்தீர்த்தம்

    தலவிருட்சம்- இலந்தை மரம்

    திருத்தலப்பாடல்

    பிழையுளன பொறுத்திடுவர் என்றபடியேன் பிழைத்த கால்

    பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய்

    குழை விரவு வடிகாதா கோவிலுளாயே என்ன

    உழையுடையான் உள்ளிருந்து உளம் போகீர் என்றானே.

    என சுந்தரர் பதினொரு பாடல்கள் பாடி அருளிச் செய்த இத்திருக்கோவில் ஒரு அற்புதத்திருத்தலம் ஆகும்.

    இறைவன் சுந்தரருக்கு ஊன்றுகோல் வழங்கியருளியதால் இத்தலத்தில் சென்று வழிபடும் நமக்கும் பிரச்சனைகள் தீர ஊன்றுகோலாய் இருந்து மாற்றத்தையும், ஏற்றத்தையும் வழங்கி அருளுகிறார். அங்கு சென்று வந்த பல பக்தர்களின் கண்கூடான அனுபவம்.

    - திருச்சிற்றம்பலம்

    இத்திருக்கோவிலுக்குச் செல்லும் வழி:-

    * கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பூண்டிக்கு பேருந்து வசதி உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 46.கி.மீ தூரத்தில் திருக்கோவில் அமைந்துள்ளது.

    * பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையந்திலிருந்து 32 கி.மீ. தூரத்தில் திருக்கோவில் அமைந்துள்ளது.

    * திருவள்ளூரில் இருந்தும் பூண்டிக்கும் பேருந்து வசதி உள்ளது.

    திருக்கோவில் நடைதிறக்கும் நேரம் மற்றும் பூஜை காலம் விவரம்:-

    காலை:- 6 மணி முதல் 11 மணி வரை

    மாலை:- 5 மணி முதல் 8 மணி வரை

    தினந்தோறும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.

    தொடர்புக்கு:-

    திருக்கோவில் அலுவலக தொலைபேசி எண்கள்:- 044-26800430 26800487.

    Next Story
    ×