என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
கல்வெட்டுகள் நிறைந்த வரலாற்று பெட்டகம்
- அந்த கல்வெட்டுகளின் அருகிலேயே அவர்களுடைய உருவச்சிற்பங்கள் காணப்பெறுகின்றன.
- திருவாவடுதுறை சிவாலயம் ஒரு வரலாற்றுப்பெட்டகம் என்பதில் ஐயமேதும் இல்லை.
மிகத்தொன்மையான இத்தலத்து திருக்கோவிலைப் பராந்தக சோழன் காலத்தில் கற்றளிப் பிச்சன் என்பாருடன் பலர் இணைந்து கற்கோவிலாக எடுப்பித்தனர் என்பதை ஸ்ரீ விமான சுவரில் உள்ள கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.
அந்த கல்வெட்டுகளின் அருகிலேயே அவர்களுடைய உருவச்சிற்பங்கள் காணப்பெறுகின்றன. இது ஒரு அரிய காட்சியாகும்.
கற்றளிப் பிச்சன், இளைய திருநாவுக்கரையர், அம்பலவன் திருவிசலூரான், எழுவன் சந்திராதித்தன் - அவனுடைய பணிமகள், நக்கன் வண்ணாத்தடிகள், திருநறையூர் நாட்டு சிற்றாடி எனும் ஊரினன், தாமன் அம்பலவன் என்பவர்களின் திருவுருவச் சிற்பங்களோடு பராந்தக சோழனின் சிற்பத்தையும் இங்கு நாம் காண முடிகிறது.
நூறுக்கும் மேற்பட்ட கல்வெட்டுச் சாசனங்கள் இவ்வாலயத்தில் இடம் பெற்றுள்ளன.
முதற்பராந்தக சோழன் காலம் தொடங்கி சோழ நாட்டை ஆட்சிபுரிந்த பல மன்னர்களுடைய காலத்து நிகழ்வுகள் இவ்வாலயம் முழுதும் பொறிக்கப்பெற்று காட்சி நல்குகின்றன.
அதுபோன்றே முற்காலச் சோழர்காலப் பாணியில் தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் வடிக்கப்பெற்ற கற்சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் இவ்வாலயத்து பொக்கிஷங்களாகும்.
சோழ மண்டலத்து திரைமூர் நாட்டு சாத்தனூருக்கு உரியதாக திருவாவடுதுறை ஆலயம் திகழ்ந்தது என்பதை கல்வெட்டுகள் கூறி நிற்கின்றன.
திருவாடுதுறை தேவர், திருவாவடுதுறை ஆழ்வார், திருவாடுதுறை மகாதேவர் என இறைவனின் பெயரும், திருக்காட்டு கோட்டமுடைய பெரிய நாச்சியார் என அம்பிகையின் பெயரும் கல்லெழுத்துகளில் குறிக்கப்பெற்றுள்ளன.
ஆலயம் திகழும் ஊரான சாத்தனூர், அபயாஸ்ரய சதுர்வேதி மங்கலம் என்ற அழைக்கப்பெற்றிருந்திருக்கிறது.
ராஜராஜசோழனின் தமக்கையான ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் குந்தவையார் இன்னம்பர் நாட்டு பழைய வானவன் மாதவி, சதுர்வேதி மங்கலத்து சபையோரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட நிலத்தையும், வீடு ஒன்றினையும் விலை கொடுத்து வாங்கி ஸ்வர்ணன் அரையன் சந்திரசேகரன் எனும் உத்தம சோழ அசலன் என்பானுக்கும் அவன் தலைமுறையினருக்கும் அக்கிராமத்து வைத்திய பணிக்காக அளித்தது பற்றி இவ்வாலயத்து கல்வெட்டொன்று விரிவுற எடுத்துரைக்கின்றது.
ஒரு ஊரின் மருத்துவப் பணிக்காக ஒரு பேரரசி கொடுத்த கொடையையும் இங்கு நாம் காண்கிறோம்.
ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களாக மட்டும் திகழாமல் கவின் கலைகளை வளர்த்த இடங்களாகவும் திகழ்ந்தமையை திருவாவடுதுறை ஆலயத்துக் கல்வெட்டுகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.
இவ்வாலயத்தை கற்கோவிலாக எடுத்த சிற்றானைச்சூர் எனும் ஊரினனான கற்றளிப் பிச்சன் இவ்வாலயத்து இசைக் கலைஞர்களின் ஜீவிதத்திற்கு நிலம் அளித்தான் என்பதை ஒரு சாசனம் கூறுகின்றது.
வீரமாங்குடியைச் சார்ந்த தாயன்கண்டன் என்பான் சிறுபுலியூரிலும், சிற்றானைச்சூரிலும் நிலங்கள் வாங்கி இவ்வாலயத்தில் நாளும் தேவாரம் பாடும் இருவர்க்கும், தோட்டத்தில் பணிபுரியும் இரண்டு ஆட்களுக்கும், பூக்கள் பறித்து பூமாலைகள் தொடுக்கும் இரண்டு பெண்களுக்கும், கோவிலில் நிகழும் சிறப்பு வழிபாடுகளுக்கும் அளித்தான் என்பதை ஒரு சாசனம் சுட்டுகின்றது.
ஆலய ஊழியர்களை அறவுள்ளம் கொண்டோர் காப்பாற்றிய மரபு நம் திருக்கோவில்களில் திகழ்ந்தமையை இச்சாசனங்கள் மூலம் அறிகிறோம்.
திருவாவடுதுறை ஆலயத்தில் சோழப் பேரரசர்கள் காலத்தில் நானாவித நட்ட சாலை (பலவகையான ஆடல்கள் நிகழும் இடம்), நாடக சாலை, சதிர்சாலை என்ற மண்டபங்கள் திகழ்ந்து அங்கு பலவகையான நாட்டியங்களும், நாடகங்களும் நிகழ்ந்துள்ளன.
கூத்துகள் நிகழ சாக்கை காணி அளிக்கப்பெற்றமையை சாசனங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
இவ்வாலயத்தில் அறச்சாலை ஒன்று திகழ்ந்து ஆலயத்திற்கு வருவோர்க்கு அன்னமிட்டதை சோழர்கால கல்வெட்டொன்று எடுத்துக்கூறுகின்றது.
ராஜராஜ சோழன் காலத்தும் ராஜேந்திர சோழன் காலத்தும் அனைத்து ஊர்களின் நிலங்களும் துல்லியமாக அளிக்கப்பெற்று ஆவணப்படுத்தப் பெற்றன.
அதன் நினைவாக இவ்வாலயத்து மண்டபம் ஒன்றினுக்கு 'உலகளந்தான்' என்ற பெயர் இடப்பெற்றிருந்தது என்பதையும், நில அளவு கோல் ஒன்றுக்கு 'மாளிகைக்கோல்' என்ற பெயர் திகழ்ந்தது என்பதையும் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
ஒவ்வொரு நாளும் மூன்றுவேளை பூசைகளின்போது ஒவ்வொரு குடம் காவிரி நீர் கொண்டுவந்து இறைவனுக்கு அபிடேகம் செய்ய வேண்டும் என்பதற்கும், உத்தராயண சங்கராந்தி அன்று (தைப்பொங்கல் நாளன்று) திருவாவடுதுறை மகாதேவரை நூற்று எட்டு குடங்களில் எடுத்து வரப்பெற்ற காவிரி நீரால் திருமஞ்சனம் செய்ய வேண்டும் என்பதற்கும் பலர் கொடைகள் நல்கியுள்ளனர்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் திகழ்ந்த கைக்கோளப்படை சார்ந்தவர்களின் குடும்பங்களுக்கு வீரபோகமாக (போரில் வென்றமைக்கு நிரந்தர ஊதியமாக) குலோத்துங்க சோழநல்லூர் என்ற கிராமத்தையே அளித்த வரலாறு ஒரு கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.
திருவாவடுதுறை சிவாலயம் ஒரு வரலாற்றுப்பெட்டகம் என்பதில் ஐயமேதும் இல்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்