search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    குழந்தைபாக்கியம் தரும் திருப்புல்லாணி பெருமாள்
    X

    குழந்தைபாக்கியம் தரும் திருப்புல்லாணி பெருமாள்

    • இராமநாதபுரத்திற்கு தெற்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புல்லாணி.
    • நல்ல ஆரோக்கியமுள்ள வாரிசு உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும்.

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் ஆலயம் உள்ளது.

    108 திவ்ய தேசங்களில் இத்தலம் 44 வது ஆகும்.

    எத்தனையோ பிரச்சினைகள் கவலைகள் அன்றாடம் வந்தாலும் நிரந்தரமான கவலை என்பது குழந்தை இல்லாதது தான்.

    இந்த குறை எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டும்தான் உண்டு.

    ஏன் இப்படி ஏற்படுகிறது என்பதை மருத்துவக் குறிப்பு பலவாறு சொன்னாலும் தெய்வ அருள் இருப்பின் இந்த குறையை வென்று விடலாம் என்பதுதான் உண்மை.

    அப்படிப்பட்ட குறை தீர்க்கும் ஒரு தலம் உண்டு. அதுதான் திருப்புல்லாணி.

    இராமநாதபுரத்திற்கு தெற்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புல்லாணி.

    இதற்கு புல்லாரண்யம், ஆதிசேது, புல்லணை, திருவணை, தர்ப்ப சயனம், நளசேறு, ரத்தினாகர ஷேத்திரம், சரணாகதி ஷேத்திரம், புல்லாங்காடு என்று வேறு பெயர்களும் உண்டு.

    இரண்டு பிராகாரங்கள் கூடிய சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் 120 அடி உயர ராஜகோபுரம் உடையது.

    மூலவர் ஆதி ஜகந்நாதன் நின்ற கோலம். உத்ஸவர் கல்யாண ஜகந்நாதன். தாயார் ஸ்ரீபத்மாஸனி தாயார்.

    சுவாமி சன்னதிக்கு வடக்கே தனி சன்னிதியில் மூலவர் தர்ப்ப சயன இராமன் பட்டாக்கத்தியுடன் சயனத் திருக்கோலம்.

    தர்ப்பை புற்கள் மீது ஸ்ரீராமன் பள்ளி கொண்டதால் புல்லனை என்று பெயர்.

    இராமன், இத்தலத்து பெருமானை பூஜித்து, ஆதி ஜெகந்நாதப் பெருமாளால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று இராவணனை வதம் செய்ததாக வரலாறு.

    விபீஷணன் இங்குதான் சரண் அடைந்தான். இலங்கை வேந்தனாக முடி சூட்டப்பட்டதும் இங்குதான்.

    கடலரசனுக்கு பகவான் மன்னிப்பு வழங்கிய இடம். புல்லர், கண்ணுவர் போன்ற ரிஷிகளுக்கு பகவான் மோட்சம் தந்த புனித இடம்.

    புத்திரப்பேறு இல்லாதவர்கள் நாகப்பிரதிஷ்டை செய்து இங்கு தரப்படும்பால்பாயாசத்தை அருந்தினால் மலட்டுக்குறை நீங்கும்.

    சர்ப்பசாந்தி ஹோமம் செய்தால் முன்வினைப்பாவம் விலகும்.

    நல்ல ஆரோக்கியமுள்ள வாரிசு உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும்.

    இத்தலத்தின் அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நாகர் சிலைகளே இத்தலத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

    உத்தரகோசமங்கை தலத்துக்கு செல்பவர்கள் இங்கும் சென்று வந்தால் நல்லது.

    Next Story
    ×