search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஒரு விரலில் கோவர்த்தன கிரியைக் குடையாக பிடித்த கண்ணன்
    X

    ஒரு விரலில் கோவர்த்தன கிரியைக் குடையாக பிடித்த கண்ணன்

    • இடையர் அனைவருக்கும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் மலை குடைக்குள் வரவழைத்து பாதுகாப்பு அளித்தார்.
    • அவ்வாறு ஏழு நாட்கள் கோவர்த்தன கிரியைத் தாங்கிப் பிடித்து ஆயர்களைக் காத்தார் பகவான்.

    ஆயர்பாடியில் மழை வேண்டி ஆண்டு தோறும் இந்திரனுக்கு விழா எடுப்பது வழக்கம். இதை அறிந்த கிருஷ்ணர் இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடுத்து விட்டார்.

    அவர்களுக்கு வாழ்வளிக்கும் பசுக்களுக்கும் மலைகளுக்கும் விழா எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

    எனவே, யாதவர்கள் கண்ணனின் ஆலோசனைப்படி கோவர்த்தனகிரி யாகத்தைத் தொடங்கினர்.

    தூப தீபம் ஏற்றி ஆராதனை செய்து கோவர்த்தனகிரியைப் பூஜித்தார்கள்.

    பசுக்களையும் பூஜித்தனர். பின்பு, நன்றாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அந்த மலையை வலம் வந்தன.

    இவ்வாறு மலைக்கு ஆராதனை செய்தபோது, கிருஷ்ணன் ஒரு தேவரூபமாக அந்த கோவர்த்தன மலையின் சிகரத்தில் வீற்றிருந்து, யாதவர்கள் அருளிய நைவேத்தி யங்களை எல்லாம் ஏற்று அருளினார். மலைச் சிகரத்தையும் அர்ச்சித்துப் பணிந்த பிறகு, யாதவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆயர்பாடிக்கு திரும்பினர்.

    இவ்வாறு கிருஷ்ணர் இந்திரனுக்கு செய்ய வேண்டிய யாகத்தைத் தடுத்து அவனை அவமானப்படுத்தியதால், இந்திரன் கோபம் கொண்டு சர்வர்த்தகம் என்ற மேகக் கூட்டங்களை அழைத்து, 'கிருஷ்ணன் வசித்து வரும் இடைச்சேரியில் பெருமழை பெய்வித்து, மாடுகளை எல்லாம் அவிழ்த்து விடுங்கள்' என்று கட்டளையிட்டான்.

    இந்திரனின் கட்டளைக்கிணங்க மேகங்கள் யாவும் ஆயர்பாடி முற்றிலும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையையும் பெய்வித்தன.

    இதனால் பசுக்களும் கன்றுகளும் துன்பப்பட்டன. காற்றினாலும் கடுங்குளிரினாலும் நடுங்கின. பயந்தகுரலில் கத்தின.

    பெருமழை காரணமாக கோகுலத்தில் உள்ள அனைவரும் துன்பப்பட்டனர். இதைக்கண்ட ஸ்ரீகிருஷ்ணர், 'இந்த நிலைக்கு இந்திரனே காரணம்.

    ஆதலால், கோகுலத்தைக் காப்பாற்றுவது அவசியம்' என்று கிரியையே பெயர்த்து எடுத்து, ஒரு குடையைப் போல் தாங்கிப் பிடித்தார்.

    இடையர் அனைவருக்கும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் மலை குடைக்குள் வரவழைத்து பாதுகாப்பு அளித்தார்.

    அவ்வாறு ஏழு நாட்கள் கோவர்த்தன கிரியைத் தாங்கிப் பிடித்து ஆயர்களைக் காத்தார் பகவான்.

    இந்திரன் தன் முயற்சி வீணானதைக் கண்டு மேகங்களின் செயல்களை நிறுத்தினான்.

    மழை நின்றது. ஆயர்கள் அனைவரும் மகிழ்வுடன் தங்களுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

    தேவேந்திரன் தன் தவறை உணர்ந்தான். மகா விஷ்ணுவே கிருஷ்ணராக அவதரித்திருக்கிறார் என்பதை அறிந்தான்.

    தன் செயலுக்காக கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கோரினான். தன்னைத் துதிப்பவர்களை கிருஷ்ணர் கை விட மாட்டார் என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் உணரலாம்.

    Next Story
    ×