search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ருத்ர தாண்டவம் ஆடிய ஈசன்
    X

    ருத்ர தாண்டவம் ஆடிய ஈசன்

    • தாருகாவனம் என்ற வனத்தில் மிகவும் தவ வலிமை கொண்ட முனிவர்கள் இருந்தார்கள்.
    • அவர்களுக்கு ஈசுவரத் தியானத்தை உண்டாக்கும் பொருட்டு, சிவபெருமான், திருமாலை நினைத்தார்.

    தாருகாவனம் என்ற வனத்தில் மிகவும் தவ வலிமை கொண்ட முனிவர்கள் இருந்தார்கள்.

    நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள் முதலியவற்றைக் கற்றுணர்ந்த அவர்கள் அதன்படியே தங்களுடைய காரியங்களைச் செய்து வந்த போதிலும் எல்லாவற்றிற்கும் காரணமான ஈசுவரன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைவே இல்லாது, ஈசுவரத் தியானமில்லாமல் இருந்தனர்.

    எனவே அவர்களுக்கு ஈசுவரத் தியானத்தை உண்டாக்கும் பொருட்டு, சிவபெருமான், திருமாலை நினைத்தார்.

    நினைத்த மாத்திரத்தில் தன் முன் தோன்றிய திருமாலுடன் சேர்ந்து முனிவர்களை நல் வழிப்படுத்த விரும்பினார்.

    சிவபெருமான், திருமாலை தாருகாவனத்தில் உள்ள முனிவர்களை மயக்கும் அளவிற்கு அழகிய பெண் வேடம் பூண்டு செல்லுமாறு கூறியதோடு, தானும் பிட்சாடன (பிச்சை எடுப்பவர்) வேடம் பூண்டு, நந்தி தேவரோடு தாருகா வனம் வந்தார்.

    நந்தி தேவரை ஓரிடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு, சிவபெருமான் முனிவர்களின் குடில்களுக்கு அருகில் சென்று பிச்சை கேட்பவரைப் போல, அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தார்.

    அவரின் அழகில் மயங்கிய முனிபத்தினிகள் (முனிவர்களின் மனைவிகள்) அவரின் மேல் மோகம் கொண்டு அவரை அடைய விரும்பி அவர் பின்னாலேயே சுற்றி வந்தனர்.

    மறுபுறம் பெண் வேடமிட்டு வந்த திருமால் காம விகாரத்துடன் யாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் சுற்றி திரிந்தார்.

    அங்கிருந்த இளம் முனிவர்கள் பெண்ணின் அழகில் மயங்கி, தவத்தை கைவிட்டு அவளின் காமரூபத்தை கண்டவர்களாய், அவள் பின்னாலேயே சுற்றி வந்தனர்.

    இதைக்கண்ட வயது முதிர்ந்த முனிவர்களும், தங்களின் தவ நிலையிலிருந்து விலகாத மற்ற முனிவர்களும் கோபம் கொண்டும், தங்களுடைய இளம் முனிவர்களையும், பெண்களையும் காம விகாரத்தில் ஈடுபடச் செய்த இருவரையும் அழிக்க நினைத்தனர்.

    அதற்காக அக்னியில் எதிரியை அழிப்பதற்காக அதர்வண வேதத்தில் சொல்லியிருக்கின்ற ஹோமத்தை வளர்த்தனர்.

    ஹோமத்திலிருந்து முதலில் புலி பாய்ந்து வந்தது.

    அதை சிவபெருமான், தம்முடைய நகங்களால் இரண்டாகப் பிளந்து, அதன் தோலை ஆடையாக்கிக் கொண்டார்.

    பின்னர் ஹோமத்திலிருந்து வந்த பாம்புகளை முனிவர்கள் ஏவ, அவை சிவபெருமானுக்கு அணிகலன்களாகின.

    இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் முன்னினும் தீவிரமாக யாகத்தைச் செய்து அபஸ்மாரம் என்ற பெரிய பூதத்தை ஏவினார்கள்.

    அதை தன் வலக்காலுக்கு அடியில் போட்டு அதன் மீது சிவபெருமான் ஏறி நின்றார்.

    எதுவுமே பலிக்காத நிலையில் யாகம் வளர்த்த அக்னியை ஏவ, அதை தன் இடக்கையில் ஏந்தினார்.

    தங்களுடைய அக்னியை இழந்த முனிவர்கள், கடைசி ஆயுதமாக வேத மந்திரங்களை ஏவினர்.

    அவைகளைச் சிலம்புகளாக மாற்றி தன் பாதத்தில் அணிந்து கொண்டார்.

    தங்களால் நெடுங்காலமாக செய்து வரப்பட்ட தவம், அக்னி, வேத மந்திரங்கள் முதலிய எதனாலும் சிவபெருமானை வெல்ல முடியாது போகவே தாங்கள் தோற்றுவிட்டதாக மட்டுமே முனிவர்கள் நினைத்தனர்.

    எனவே அவர்களின் அறிவு கண்களைத் திறப்பதற்காக தன் சடைகள் எட்டுத்திக்கும் விரிந்தாட, அண்டங்கள் எல்லாம் குலுங்க, தாண்டவம் ஆடினார்.

    அதைக்கண்ட முனிவர்கள், பிட்சாடன் வேடமேற்று வந்திருப்பவர் சிவபெருமான் என்று அறிந்து தங்களின் தவற்றை பொறுத்தருள வேண்டினர்.

    அவர்களின் வேண்டுகோளை ஏற்றி சிவபெருமான், தன்னுடைய ருத்ர தாண்டவத்தை ஆனந்த தாண்டவமாக மாற்றி அவர்களுக்கு அருள் புரிந்தார்.

    மார்கழி மாதம் குளிர் அதிகமாக இருக்கும். எங்கும், எதிலும் குளிர்ச்சி தான்.

    அதனால் அம்மாதத்தில் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் வரும் நாளில் ருத்ரதாண்டவம் ஆடியவரை அபிஷேகங்களால் மேலும் குளிர்விக்கின்றோம்.

    அபிஷேகத்தின்போது களி செய்து படைத்து வணங்குகிறோம்.

    சிவனுக்குப் பிடித்தமான பொருள் என்பதால் மட்டும் களி செய்து படைப்பதில்லை.

    அகம்பாவம் கொண்டு, அறிவிழந்து நடப்போரை சிவபெருமான் தன் காலடியில் போட்டு மிதித்துள்ள அசுரனை போல மிதித்து களியாக்கி விடுவார் என்பதே அதன் தத்துவமாகும்.

    ஆருத்ரா தரிசனம் அன்று சிவபெருமானை வணங்கி வழிபடுபவர்களுக்கு எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும்.

    ஆணவம் அழிந்து அன்பு உண்டாகும். இறைவனிடம் கொள்ளும் பக்தி முக்தி அளிக்கும்.

    Next Story
    ×