search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நல்லன யாவும் கிட்டும் நந்தி தரிசனம்!
    X

    நல்லன யாவும் கிட்டும் நந்தி தரிசனம்!

    • புனேயில் பாண்டேஸ்வரராக காட்சிதரும் இறைவனின் திருக்கோவிலில் புராதனச் சிறப்போடு, புனிதம் நிறைந்ததாக அமைந்திருக்கும் கருவறை நந்தி.
    • நஞ்சன்கூடு ஆலயத்தின் உள்ளே நுழையும்போது நம்மை நந்தி பார்ப்பதுபோல் திசை மாறி அமைந்திருப்பது வித்தியாசமானது.

    நந்தி என்றால் ஆனந்தத்தைத் தருபவர் என்று பொருள். நல்லன யாவும் நந்தி தரிசனத்தால் கிட்டும் என்பது நம்பிக்கை. நலமும் வளமும் பெற சிறப்பான சில நந்திகளை தரிசிப்போம்.

    தஞ்சாவூர் நந்தி: நமக்கு மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இருப்பவர்களுக்கும் கூட நந்தி என்றால் இந்த தஞ்சை நந்தியின் நினைவுதான் வரும். அளவில் மட்டுமல்ல அருளிலும் பெரியவர் இவர்.

    மதுரை நந்தி: மதுரை புதுமண்டபம் முன்பாக கீழ ஆவணி மூல வீதியில் சுதையால் அமைக்கப்பட்டுள்ள இந்த நந்தி கம்பீரம் மற்றும் அழகுமிக்கது. இது போன்ற பிரமாண்ட நந்திகளை ராமேஸ்வரம், திருநெல்வேலி, சுசீந்திரம், திருவிடைமருதூர் போன்ற ஆலயங்களில் நாம் காணலாம். இவை, மாக்காளைகள் எனப்படுகின்றன.

    திருவண்ணாமலை நந்தி: அண்ணாமலையில் அருள் மணக்க வலம் வரும் அலங்கார நந்தி... அதிகார நந்தி !

    சாமுண்டிமலை நந்தி: மைசூரையொட்டிய சாமுண்டிமலை மீது ஏறும்போது மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான நந்தி கலையழகுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.

    ஹளேபீடு நந்தி (ஹொய்சளேஸ்வரா ஆலயம்): மாக்கல்லில் வடிக்கப்பட்ட நுணுக்க வேலைப்பாடுகள் உள்ள ஆபரணங்களை உடைய இந்த நந்தியின் கழுத்து மடிப்புகளும், முகத்தில் புடைத்துக் காணப்படும் ரத்த, நாளங்களும் சிற்பியின் திறமையை பறைசாற்றுவன.

    லேபாட்சி நந்தி: ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள இந்த நந்தியே இந்தியாவில் கருங்கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி என்ற பெருமையைப் பெறுகிறது.

    காஞ்சி கைலாசநாதர் ஆலய நந்தி: பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலய நுழைவாயிலிலிருந்து சுமார் 100 அடி தள்ளி ஒரு பெரிய மேடையின் மீது முன்பக்கம் இந்த நந்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலே சாந்துக்கலவை பூசீ வர்ணம் தீட்டப்பட்டது போன்று அமைக்கப்பட்ட இந்த நந்தி காலமாற்றத்தில் மழையிலும் வெயிலிலும் காய்ந்து வண்ணங்கள் மறைந்தாலும் வனப்பு மாறாது காட்சியளிக்கிறது.

    வைக்கம் நந்தி: கேரள மாநிலம் வைக்கம் மகாதேவ் ஆலய நந்தி. வெளிப்பிரகார நான்கு மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள நந்திகளுக்கு அழகிய பித்தளைக் கவசம் சாத்தி மெருகிட்டு வைத்துள்ளனர்.

    கங்கைகொண்ட சோழபுரம் நந்தி: தஞ்சைப் பெரிய கோவிலின் தம்பிபோல் காட்சி தரும் சோழீச்வரர் கோவிலில் அமைந்திருக்கும் எழில்மிகு இடம்.

    புனே நகரத்து நந்தி: புனேயில் பாண்டேஸ்வரராக காட்சிதரும் இறைவனின் திருக்கோவிலில் புராதனச் சிறப்போடு, புனிதம் நிறைந்ததாக அமைந்திருக்கும் கருவறை நந்தி.

    காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலய நந்தி: இந்த ஆலயத்தின் முகப்பில் உள்ள நந்தியும் மண்டபமும் ஒரு சேர மிக அழகு. இந்த நந்தியைப் பார்த்தாலே பரவசம் ஏற்படும்.

    நஞ்சனகூடு நந்தி: இந்த பிரமாண்டமான நந்தி கலைநயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. நஞ்சன்கூடு ஆலயத்தின் உள்ளே நுழையும்போது நம்மை நந்தி பார்ப்பதுபோல் திசை மாறி அமைந்திருப்பது வித்தியாசமானது.

    அதிகார நந்தி: எப்போதும் அமர்ந்தவாறே கம்பீரமாகத் தரிசனமளிக்கும் நந்தி, திருவாரூர் தியாகேசர் சன்னதியில், சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல அவசரமாகப் போகும் ஈசனை ஆச்சரியமுடன் பார்த்தவாறு எழுந்து நின்று கிளம்பும் நிலையில் காட்சியளிக்கிறார். ஏறக்குறைய இதே நிலையில் வடமாநிலம் உ.பி.யில் தென்படுகிறார் என்பதும் விசேஷம்.

    பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றான உஜ்ஜயினி மகா காலேஷ்வர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது குண்டேஷ்வர் மகாதேவ் ஆலயம். கருவறைக்கு முன் காணப்படும் நந்தி தேவர், தொலைவிலிருந்து பார்க்கையில் சாதாரணமாகக் கால்களை மடித்து அமர்ந்திருப்பதாகவே தோன்றும். ஆனால், சற்று அருகில் சென்று உற்று நோக்கினால் உண்மையில் அவர் எழுந்து நிற்கும் நிலையில் தென்படுவதைக் கண்டு ரசிக்கலாம்! இவரையும் லிங்கத் திருமேனியில் விளங்கும் குண்டேஸ்வரரையும் ஒருசேரத் தரிசித்தால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை. சுங்க வம்சத்து அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும் இக்கோவில். இதற்கு அருகில்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், அவரது தமையன் பலராமனும் குருகுல வாசம் செய்த சாந்தீபனி மகரிஷியின் ஆசிரமம் உள்ளது.

    Next Story
    ×