ஆன்மிக களஞ்சியம்

இறைவனை தவிர அனைத்தும் மாயை என்பதை பட்டினத்தாருக்கு உணர்த்திய ஈசன்

Published On 2024-07-17 11:47 GMT   |   Update On 2024-07-17 11:47 GMT
  • அத்தகைய பட்டினத்தார் முக்தி பெற்ற இடம் திருவொற்றியூர்.
  • இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார். பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்

சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார், திருவொற்றியூருக்கு வந்து திருவருள் பெற்று கடற்கரை ஓரத்தில் உயிரோடு ஜீவ சாமாதியான சித்தர் ஆவார்.

காவிரிபூம்பட்டினத்தில் நகரத்துச் செட்டியார் மரபில் தோன்றியவர் திருவெண்காடர், இவர் திருமணமானபின் குழந்தை பாக்கியம் கிடைக்காததால் சிவனிடம் முறையிட்டார்.

அவர் மீது மனம் இறங்கிய திருவிடைமருதூர் ஈசனே மருதவாணர் என்ற பெயரில் வளர்ப்பு மகனாக வந்தார், வளர்ந்தார், கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வந்தார்.

வறட்டிகளோடு ஒரு கிழிந்த ஒலையையும் தந்தார் மறைந்தார். "காதற்றஊசியும் வாராது காணும் கடை வழிக்கே" என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது.

சிவனைத் தவிர எல்லாச் செல்வமும் பொய் என்ற ஞானம் பெற்றார். செல்வம், மனைவி, உறவு யாவற்றையும் துண்டித்துக் கொண்டு துறவு பூண்டார். கோவில் தோறும் இறைவனை வழிபட்டு தான் பெற்ற ஞானத்தை பாடினார்.

தாயார் மறைந்தபோது தனது பாடல்களால் அவருக்குக் கடமைகளைச் செய்தார்.

சுவையற்றபேய்க் கரும்பு இனித்த இடமாகிய திருவொற்றியூர் தனக்கு முக்தி தரும் இடம் என அறிந்து இங்கு வந்து கடற்கரை அருகே சித்துக்கள் செய்தார்.

"பட்டினத்தார் உலகையே துறந்தவர். அவரைபோல அனைத்தையும் துறந்தவர் பூவுலகில் யாரும் இல்லை" என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

அத்தகைய பட்டினத்தார் முக்தி பெற்ற இடம் திருவொற்றியூர்.

இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார். பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்.

திருவொற்றியூரில் தெருவில் நடந்து போனேன் காலடி மண்ணை நெற்றியில் திருநீறாக பூசினால் பிறவி நோய்க்கும் அருமுருந்தாகும் என்று பட்டினத்தார் பாடலில் கூறியுள்ளார்.

பட்டினத்தார் இந்த ஊரில் மீனவச் சிறுவர்களுடன் விளையாடினார். மணலைத் தோண்டி அதில் தன்னை புதைக்கச் செய்தார். வேறு இடத்தில் இருந்து வெளியில் வந்தார்.

இதுபோல 2 முறை செய்தார். 3வது முறையும் புதைத்த போது அவர் வெளியே வரவில்லை. தோண்டி பார்க்கும் போது இறைவனடி சேர்ந்து லிங்கமாக காட்சி தந்தார். திருவொற்றியூர் இறைவனை பாடி அர்ச்சனை செய்ய ஏதுவாக 28 போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.

முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார். இவரது சமாதிக் கோவில் திருவொற்றியூர் கடற்கரை சாலை அருகே இன்றும் உள்ளது. சமீபத்தில் இந்த கோவில் சீர் செய்யப்பட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது.

திருவொற்றியூர் பற்றி இவர் பாடிய ஒருபா ஒருவது 11ஆம் திருமுறையில் உள்ளது.

பட்டினத்தார் முக்தி பெற்றதால் இது முக்தித்தலம் என வழங்கப்படுகிறது. பட்டினத்தார் மரபினராகிய நாட்டுக்கோட்டை நகரத்துச் செட்டியார் இக்கோவிலை முக்தித் தலமாக இன்றும் போற்றி வணங்கி வருகின்றனர்.

Tags:    

Similar News