null
2023 யமஹா R3, MT 03 இந்திய முன்பதிவு துவக்கம்?
- யமஹா நிறுவனத்தின் 2023 R3, MT 03 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
- இரு மாடல்களின் முன்பதிவு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் ஆகும்.
இந்தியா முழுக்க இயங்கி வரும் யமஹா நிறுவன விற்பனையாளர்கள், 2023 R3 மற்றும் MT 03 மாடல்களுக்கான முன்பதிவுளை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இரு மாடல்களும் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் 2023 யமஹா R3 மற்றும் யமஹா MT 03 மாடல்கள் விற்பனையாளர்களிடையே நடத்தப்பட்ட நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இவை தவிர YZF R7 மற்றும் MT 07 மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக இந்த மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய யமஹா R3 மோட்டார்சைக்கிள் கேடிஎம் RC390, கவாசகி நிஞ்சா 300, டிவிஎஸ் அபாச்சி RR310 மற்றும் கீவே K300 R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 2019 வரை இந்த மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின் இதன் விற்பனை நிறுத்தப்பட்டது.
யமஹா MT 03 மோட்டார்சைக்கிள் R3 மாடலின் நேக்கட் வெர்ஷன் ஆகும். இது முதல்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் கேடிஎம் 390 டியூக், பிஎம்டபிள்யூ G310 R மற்றும் கீவே K300 N மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.