ஹோண்டாவின் புது அட்வென்ச்சர் பைக் - இந்திய முன்பதிவு துவக்கம்
- ஹோண்டா நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் அட்வென்ச்சர் மாடல்.
- சக்திவாய்ந்த அட்வென்ச்சர் டூரர் மாடலாக இருக்கும்.
ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய NX500 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கி நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் புதிய மோட்டார்சைக்கிள் மாடலை ஹோண்டா பிக் விங் விற்பனை மையங்களில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த பைக்கிற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் ஆகும்.
புதிய ஹோண்டா NX500 அந்நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் அட்வென்ச்சர் மாடல் ஆகும். இது ஹோண்டா சமீபத்தில் அறிமுகம் செய்த XL750 டிரான்சால்ப் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது. புதிய NX500 மாடல் ஹோண்டா CB500X மாடலுக்கு மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். தோற்றத்தில் ஹோண்டா NX500 சக்திவாய்ந்த அட்வென்ச்சர் டூரர் மாடலாக இருக்கும் என தெரிகிறது.
இந்த மாடலில் ரேலி பைக் மாடல்களில் இருப்பதை போன்ற ஃபேரிங், உயரமான வின்ட் ஸ்கிரீன் மற்றும் அதற்கேற்ற இருக்கை அமைப்பு உள்ளது. இந்த பைக்கின் சீட் தரையில் இருந்து 830mm அளவில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் டைமன்ட் ஃபிரேம், சஸ்பென்ஷனில் யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரண்டு டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 471சிசி பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்.பி. பவர், 43 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
அறிமுகம் செய்யப்பட்டதும் ஹோண்டா NX500 மாடல் கவாசகி வெர்சிஸ் 650 மற்றும் மோட்டோ மொரினி எக்ஸ் கேப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 7.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.