சூப்பர் மீடியோர் 650-க்கு நேரடி போட்டி.. இந்தியாவில் அறிமுகமான கவாசகி எலிமினேட்டர்
- ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650-க்கு போட்டியாக அமைகிறது.
- எலிமினேட்டர் மாடலில் 451சிசி, பேரலல் டுவின் என்ஜின் உள்ளது.
கவாசகி நிறுவனம் தனது எலிமினேட்டர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கவாசகி எலிமினேட்டர் விலை ரூ. 5 லட்சத்து 62 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குரூயிசர் மோட்டார்சைக்கிள் என்ற வகையில், இந்த மாடல் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650-க்கு போட்டியாக அமைகிறது.
புதிய எலிமினேட்டர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விரைவில் வினியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் நின்ஜா 400 மாடலில் உள்ள பாகங்கள் புதிய எலிமினேட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
கவாசகி எலிமினேட்டர் மாடலில் 451சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 49 ஹெச்.பி. பவர், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் 18/16 இன்ச் அலாய் வீல், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங்கிற்கு இருபுறமும் ஒற்றை டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த எடை 176 கிலோ ஆகும். இதன் கிரவுன்ட் கிளியரன்ஸ் 150 மில்லிமீட்டர் அளவில் இருக்கிறது. இந்த மாடலில் எல்.இ.டி. லைட்டிங், வட்ட வடிவம் கொண்ட எல்.சி.டி. ஸ்கிரீன், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.