முற்றிலும் புதிய கேடிஎம் 390 டியூக் இந்திய வெளியீட்டு விவரம்
- 2024 கேடிஎம் 390 டியூக் மாடல் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
- இந்த பிரிவில் ஏராளமான முதல்முறை அம்சங்களுடன் புதிய டியூக் மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
2024 கேடிஎம் 390 டியூக் மாடலின் டெஸ்டிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய கேடிஎம் 390 டியூக் மாடலின் வெளியீட்டு தேதி பற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், புதிய தலைமுறை கேடிஎம் 390 டியூக் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கேடிஎம் டியூக் சீரிசின் 30 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு கேடிஎம் டியூக் 620 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கேடிஎம் வழக்கப்படி, அடுத்த தலைமுறை 390 டியூக் மாடல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 2023 EICMA விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு, 2024 முதல் காலாண்டு வாக்கில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் தான் 2024 கேடிஎம் 390 டியூக் மாடல் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதன்படி இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதனிடையே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது பஜாஜ்-டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் உருவான மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அடுத்த தலைமுறை கேடிஎம் 390 டியூக் மாடலில் மேம்பட்ட மெக்கானிக்கல் மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதில் முற்றிலும் புதிய லிக்விட் கூல்டு என்ஜின், பெரும்பாலும் இது 399சிசி-யாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த என்ஜின் அதிக திறன் மற்றும் லோ-எண்ட் டார்க் வெளிப்படுத்தும். இதன் காரணமாக இந்த பைக் நகர போக்குவரத்து நெரிசல்களில் பயன்படுத்த சிறப்பானதாக இருக்கும். இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.
புதிய தலைமுறை கேடிஎம் 390 டியூக் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் பட்சத்தில், இது இந்த பிரிவில் ஏராளமான முதல்முறை அம்சங்கள் மற்றும் எலெக்ட்ரிக் ரைடர் ஏய்டுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கேடிஎம் 390 டியூக் மாடலில் ரைடு-பை-வயர் திராட்டில், டூயல் சேனல் சூப்பர் மோட்டோஸ் ஏபிஎஸ், கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே, குயிக் ஷிஃப்டர் மற்றும் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி 2024 கேடிஎம் 390 டியூக் மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், IMU சார்ந்த லீன்-சென்சிடிவ் கார்னெரிங் ஏபிஎஸ் மற்றும் ரைடிங் மோட் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஹார்டுவேரை பொருத்தவரை யுஎஸ்பி முன்புற ஃபோர்க்குகள், ரிபவுண்ட் மற்றும் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.