பைக்

சுசுகியின் பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இணையத்தில் லீக் ஆன வெளியீட்டு விவரம்!

Published On 2023-04-22 11:00 GMT   |   Update On 2023-04-22 11:00 GMT
  • சுசுகி நிறுவனம் தனது பர்க்மேன் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே.
  • இந்தியாவில் பர்க்மேன் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.

எலெக்ட்ரிக் வாகன துறையில் சீனர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் பெரும்பாலான எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை போன்றே, சீனாவில் இருந்து இறக்குமதி எண்ணிக்கையும் ஒரே அளவில் அதிகரித்து வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூனிட்கள் எளிதில் ரிபிராண்டு செய்யப்பட்டு வழக்கமான ஐசி என்ஜின் வாகனங்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் மாற்று வாகனமாக விற்பனை செய்யப்படுகின்றன.

ஏத்தர் மற்றும் ஒலா நிறுவனங்கள் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் துறையில் முன்னணி இடம்பிடித்துள்ளன. இதுதவிர பஜாஜ் செட்டாக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த வரிசையில், சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கலாம்.

 

சமீபத்தில் சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதுதவிர இந்த மாடலின் டிசைன் காப்புரிமை சார்ந்த விவரங்களும் வெளியாகின. இந்த வரிசையில், சுசுகி நிறுவனம் தனது பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடலை ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

எனினும், இந்த ஸ்கூட்டர் பற்றிய முழு விவரங்களை சுசுகி இதுவரை அறிவிக்கவில்லை. புதிய பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தோற்றத்தில் பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடல், தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், எலெக்ட்ரிக் வேரியண்டில் எதிர்கால தோற்றத்திற்கு ஏற்ற பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இதில் வைட் நிற பாடி மற்றும் புளூ ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப், சிறிய வைசர் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்படுகிறது.

பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலின் எடை 110 கிலோ என்ற அடிப்படையில், பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடலின் எடை 147 கிலோ ஆகும். எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டிருப்பதால் இதன் எடை அதிகரித்து இருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை புதிய மாடலில் 4.0 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 18 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடலில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் வெறும் 44 கிலோமீட்டர்கள் மட்டுமே செல்லும் என்று தெரிகிறது. மேலும் இந்த ரேன்ஜ் பெற ஸ்கூட்டரை மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்திற்குள் ஓட்ட வேண்டும். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கும் நிலையில், பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News