null
ரிலீசுக்கு ரெடியாகும் டி.வி.எஸ். XL EV - வெளியான முக்கிய தகவல்
- இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.
- அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று டி.வி.எஸ். XL100.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான XL100 மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. முதற்கட்டமாக டி.வி.எஸ். XL எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்காக E-XL மற்றும் XL EV என இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.
காப்புரிமை கோரியிருப்பதை அடுத்து, டி.வி.எஸ். நிறுவனம் தனது XL மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக டி.வி.எஸ். XL100 விளங்குகிறது.
ஐகியூப் மாடலின் வெற்றியை தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் E-XL மற்றும் XL EV மாடல்களை பயன்படுத்த டி.வி.எஸ். நிறுவனம் காப்புரிமை கோரியிருக்கிறது.
எனினும், இதுபற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போது டி.வி.எஸ். XL100 பெட்ரோல் மாடலின் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 59 ஆயிரத்து 695, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மொபெட் பிரிவில் விற்பனை செய்யப்படும் ஒற்றை மாடலாக கைனடிக் E லூனா விளங்குகிறது. இதன் விலை ரூ. 64 ஆயிரத்து 990 என துவங்கி அதிகபட்சம் ரூ. 74 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.