விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் துவக்கம்!
- இந்திய சந்தையில் விடா பிராண்டின் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- முதற்கட்டமாக விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் பெங்களூரு நகரில் துவங்கி இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிராண்டு விடா இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் யூனிட் பெங்களூரு நகரில் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெங்களூரு நகரில் உள்ள விட்டல் மல்லையா சாலையில் உள்ள விடா எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வினியோகம் செய்யப்பட்டன.
முதற்கட்டமாக பெங்களூரு நகரில் வினியோகம் துவங்கி இருக்கும் நிலையில், டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களில் விடா V1 வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை நிறம், பேட்டரி திறன் மற்றும் பிக்கப் வேகம் உள்ளிட்ட பிரிவுகளில் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.
விடா V1 பிளஸ் மாடல் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும், விடா V1 ப்ரோ வேரியண்ட் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இதன் ப்ரோ வேரியண்ட் 3.94 கிலோவாட் ஹவர் பேட்டரியும், பிளஸ் வேரியண்டில் 3.44 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இரு வேரியண்ட்களும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன.
இத்துடன் இகோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் யூசர் கஸ்டமைசபில் என நான்கு வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கின்றன. விடா V1 பிளஸ் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் கிளாஸ் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ப்ரோ வேரியண்ட் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட், கிளாஸ் பிளாக் மற்றும் மேட் அப்ரக்ஸ் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.