கார்

புதுவித அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட எம்ஜி ZS மாடல்

Published On 2024-08-29 09:58 GMT   |   Update On 2024-08-29 09:58 GMT
  • புதிய எம்ஜி ZS ஹைப்ரிட்+ 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டிருக்கிறது.
  • எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது.

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது புதிய ZS மாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய 2025 எம்ஜி ZS மாடல் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.

உலகளவில், புதிய ZS மாடல் ஹைப்ரிட்+ வடிவில் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில், இந்த கார் ஐசி எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் என இருவிதங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் எலெக்ட்ரிக் மாடல் ZS EV என்றும் ஐசி எஞ்சின் கொண்ட மாடல் ஆஸ்டர் என்ற பெயரிலும் விற்பனைக்கு வரும்.

வெளிப்புறத்தில், புதிய ZS மாடல் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பெரிய கிரில், அகலமான மற்றும் செங்குத்தாக வடிவமைக்கப்பட்ட ஏர் டேம்ப்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டரை இணைக்கும் அளவுக்கு அகல லைட் பார் மற்றும் மெல்லிய எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் எம்ஜி லோகோ பொனெட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பக்கவாட்டில் இந்த கார் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் சற்றே மாற்றம் செய்யப்பட்ட அலாய் வீல் டிசைன் கொண்டுள்ளது. பின்புறத்தில், முற்றிலும் புதிய ZS மாடல் அதிக மாற்றங்களை கொண்டுள்ளது. இதன் பம்ப்பர் டிசைன் மாற்றப்பட்டு, டெயில் லேம்ப்களும் புதுவித டிசைன் கொண்டிருக்கின்றன.



உட்புறத்தில், 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், மறுவடிவமைப்பு கொண்ட ஏசி வென்ட்கள், புதிய ஸ்டீரிங், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ரீடிசைன் செய்யப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் புதிய கியர் லீவர் கொண்டுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய ZS ஹைப்ரிட்+ வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ADAS சூட், டைப்-சி சார்ஜிங் போர்ட், ஆட்டோ ஹோல்டு, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, 360 டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய எம்ஜி ZS ஹைப்ரிட்+ 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டிருக்கிறது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இவை இரண்டும் இணைந்து 192 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 8.7 நொடிகளில் எட்டிவிடும்.

Tags:    

Similar News