எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல்களுக்கு தேதி குறிச்சாச்சு.. நவம்பரில் புக்கிங்.. வெளியீடு..?
- 60 சதவீத விற்பனை எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்க வேண்டும் என ஜாகுவார் லேன்ட் ரோவர் இலக்கு.
- எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல்கள் பிரிட்டனில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இரு மாடல்களும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில், இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவு நவம்பர் மாதம் துவங்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த தசாப்தத்தின் இறுதியில் ஜாகுவார் மாடல்களில் இருந்து 100 சதவீதமும், லேன்ட் ரோவரில் இருந்து 60 சதவீத விற்பனை எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்க வேண்டும் என்று ஜாகுவார் லேன்ட் ரோவர் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது. ரி-இமாஜின் யுக்தியின் கீழ் ஜாகுவார் நிறுவனம் 2025-ம் வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக முடிவு செய்து இருக்கிறது.
2030-ம் ஆண்டு லேன்ட் ரோவர் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாற திட்டமிட்டுள்ளது. லேன்ட் ரோவர் பிரான்டின் முதல் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அனைத்து எலெக்ட்ரிக் லேன்ட் ரோவர் மாடல்களும் புதிதாக உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் மாட்யுலர் ஆர்கிடெக்ச்சர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும்.
வரும் ஆண்டுகளில், இதே பிளாட்ஃபார்ம் மற்ற ஜாகுவார் எலெக்ட்ரிக் வாகனங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளன. அனைத்து எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல்களும் பிரிட்டனில் உள்ள வால்வெர்ஹாம்ப்டன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதே ஆலையில் எலெக்ட்ரிக் டிரைவ் யூனிட்கள் மற்றும் பேட்டரி பேக்குகள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
அடுத்த ஆண்டு சர்வதேச விற்பனை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இவை முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன. அதன் படி இந்திய பயனர்களும், சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார்களை வாங்கிட முடியும்.