கார்

ஜீப் காம்பஸ் பெட்ரோல் வேரியண்ட் இந்திய விற்பனை திடீர் நிறுத்தம்

Published On 2023-05-19 12:03 GMT   |   Update On 2023-05-19 12:03 GMT
  • ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்ட்கள் மட்டுமே இந்திய சந்தையில் கிடைக்கின்றன.
  • இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் விலை ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது.

ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட் விற்பனையை அதிகாரப்பூர்வமாக நிறுத்திவிட்டது. காம்பஸ் பெட்ரோல் வேரியண்ட் நிறுத்தப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் ஜீப் இந்தியா நிறுவனம் டீசல் பவர்டிரெயின் மற்றும் மாற்று எரிபொருள் கொண்டு இயங்கும் என்ஜின் ஆப்ஷன்களில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறது.

இந்த அறிக்கை காரணமாக ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் பெட்ரோல் வேரியண்டை மீண்டும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளை குறைத்து இருக்கிறது. இது குறித்து ஜீப் இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..

"பிரீமியம் எஸ்யுவி பிரிவில் டீசல் என்ஜினுக்கு இன்றும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனம் 2.0 லிட்டர் மல்டிஜெட் டர்போ டீசல் பவர்டிரெயினை மேம்படுத்த முதலீடு செய்யும். புதிய வெர்ஷன்கள் அதிக டார்க், குறைந்த மாசு அளவுகளை வெளிப்படுத்துவதோடு, எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்."

"எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஜீப் இந்தியா திட்டமிட்டுள்ளது. அனைத்து விதமான என்ஜின் மற்றும் எரிபொருள் ஆப்ஷன்களையும் முயற்சி செய்து, பயனர்களுக்கு ஏற்ற பவர்டிரெயினை வழங்குவோம்," என்று தெரிவித்துள்ளது.

பெட்ரோல் வேரியண்ட் நிறுத்தப்பட்டதை அடுத்து ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்ட்கள் மட்டுமே இந்திய சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31 லட்சத்து 64 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்டில் 2.0 லிட்டர், இன்லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 172 பிஎஸ் பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 4x4 சிஸ்டமும் வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News