எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டிய போக்ஸ்வேகன்
- 2018-இல் போக்ஸ்வேகன் குழுமம் மாட்யுல் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிக்ஸ் பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்தது.
- இந்த பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாக்ஷிப் செடான் ஐடி.7 மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது.
போக்ஸ்வேகன் குழுமம் சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் உள்ள போக்ஸ்வேகன், ஆடி, கப்ரா, ஸ்கோடா மற்றும் போக்ஸ்வேகன் வர்த்தக பிரிவு என ஐந்து பிராண்டுகளின் எட்டு உற்பத்தி ஆலைகளில் இந்த வாகனங்கள் உற்பத்தி நடைபெற்று வந்தது.
2018-இல் போக்ஸ்வேகன் குழுமம் அறிமுகம் செய்த மாட்யுல் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிக்ஸ் பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் ஐடி பேட்ஜ் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர போக்ஸ்வேகன் குழுமத்தின் இதர எலெக்ட்ரிக் வாகனங்களிலும் இந்த பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்படுகிறது.
ஐடி.3, ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி, ஐடி.5 மற்றும் ஐடி.6 போன்ற மாடல்கள் இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதே பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாக்ஷிப் செடான் ஐடி.7 மாடலிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த செடான் மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
தற்போது இருக்கும் பிளட்ஃபார்ம் தவிர போக்ஸ்வேகன் நிறுவனம் மற்றொரு புதிய பிளாட்ஃபார்மை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த தலைமுறை MEB+ பிளாட்ஃபார்ம் மேம்பட்ட பேட்டரிகளை கொண்டிருக்கும் என்றும் இவை முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்களுக்கும் அதிக ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.