ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்து அசத்திய போக்ஸ்வேகன்
- போக்ஸ்வேகன் நிறுவனம் உலக சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
- இதே போன்று இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய போக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உலக சந்தையில் ஏராளமான நாடுகளில் போக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், போக்ஸ்வேகன் ஐடி. குடும்பத்தில் இருந்து இதுவரை ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
அக்டோபர் 2020 வாக்கில் போக்ஸ்வேகன் ஐடி.3 மாடல்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகன வினியோகத்தை அந்நிறுவனம் துவங்கியது. தற்போது உலகளவில் கார் வினியோகத்தில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஐந்து லட்சம் மைல்கல் எட்டிய செய்தி வெளியாகி இருக்கிறது. இதுதவிர மேலும் 1 லட்சத்து 35 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவற்றை வினியோகம் செய்யும் பணிகளில் போக்ஸ்வேகன் ஈடுபட்டு வருகிறது.
2033 முதல் ஐரோப்பாவில் போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய இருக்கிறது. ஐரோப்பாவில் 2030 முதல் விற்பனை செய்யப்படும் ஒட்டுமொத்த போக்ஸ்வேகன் வாகனங்களில் 70 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிலும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகப்படுத்த போக்ஸ்வேகன் திட்டமிட்டு வருகிறது.
"1 லட்சத்து 35 ஆயிரம் ஐடி. கார்களை வாடிக்கையாளர்களுக்கு விரைந்து வினியோகம் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். எனினும், உதிரிபாகங்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கலான சூழல் நிலவுவதால், உற்பத்தி திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டியாத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்." என போக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் பிரிவுக்கான நிர்வாக குழு உறுப்பினர் மெல்டா அபெ தெரிவித்து இருக்கிறார்.