டெஸ்டிங்கில் சிக்கிய டஸ்டர் 7 சீட்டர் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?
- பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியானது.
- பின்புற டிசைன் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் மிட் சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.
புதிய மாடல் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த கார் 5 சீட்டர் வடிவில் அறிமுகமாகுமா அல்லது 7 சீட்டர் வடிவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில், டஸ்டரின் 7 சீட்டர் வெர்ஷனான பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
புதிய பிக்ஸ்டர் மாடல் CMF-B ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் என்று தெரிகிறது. இந்த கார் 4.6 மீட்டர் நீளமாக இருக்கும் என்றும் இதன் வீல்பேஸ் பின்புற இருக்கைகளுக்கு ஏற்ற வகையில் அளவில் நீண்டு இருக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்த காரின் புன்புற டிசைன் வழக்கமான டஸ்டர் போன்றில்லாமல் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.
எனினும், இதன் விலை மற்றும் உற்பத்தி செலவீனங்களை குறைவாக வைத்துக் கொள்ளும் நோக்கில், புதிய பிக்ஸ்டர் மாடலின் பாடி பேனல்கள், மெக்கானிக்கல் பாகங்கள் மற்றும் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் டஸ்டர் மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய டஸ்டர் மாடல் மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார், எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மற்றும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.