விடா பிராண்டிங்கில் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யும் ஹீரோ மோட்டோகார்ப்
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
- விடா பிராண்டிங்கில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவாக விடா பிராண்டு உருவாக்கப்பட்டது. ஹீரோ விடா பிராண்டிங்கின் கீழ் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
விடா பிராண்டில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், ஸ்கூட்டரை தொடர்ந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளும் விடா பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது.
"ஒட்டுமொத்த சந்தையிலும் முதலில் ஸ்கூட்டர் அறிமுகம் செய்வதே வழக்கமாக உள்ளது. கிட்டத்தட்ட அனைவரும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், சிலர் மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளனர். அந்த வகையில், நாங்கள் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்வதை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். நிச்சயமாக மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்கிறோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சல் தெரிவித்து இருக்கிறார்.
ஹீரோ விடா V1 மாடல் இந்திய சந்தையில் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஓவர் தி ஏர் அப்டேட்கள், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், கீலெஸ் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், எஸ்ஒஎஸ் அலெர்ட், டு-வே திராட்டில் என ஏராள அம்சங்கள் உள்ளன. இத்துடன் இகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.