இது புதுசு

இந்தியாவில் அறிமுகமான ஜாவா லிமிடெட் எடிஷன் பைக்

Published On 2023-01-24 11:51 GMT   |   Update On 2023-01-24 11:51 GMT
  • ஜாவா நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் மொத்தத்தில் 100 யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • லிமிடெட் எடிஷன் ஜாவா பைக் டவங்-இல் நடைபெற்ற டோர்க்யா நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஜாவாயெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய ஜாவா 42 டவங் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த லிமிடெட் எடிஷன் பிரத்யேகமாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மட்டுமே கிடைக்கும். வடகிழக்கு பகுதிகளின் கலாசாரத்தை பரைசாற்றும் வகையிலும், இயற்கை அழகை கொண்டாடும் வகையிலும் இந்த லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

டவங் பகுதியில் டோர்க்யா நிகழ்வில் ஜாவா 42 டவங் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதே நிகழ்வில் புது மாடல்கள் சில வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. லிமிடெட் எடிஷன் என்ற வகையில் இந்த மாடல் மொத்தத்தில் 100 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தோற்றத்தில் இந்த மாடல் அதன் ஸ்டாண்டர்டு எடிஷன் போன்றே காட்சியளிக்கிறது.

எனினும், சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ஃபியூவல் டேன்க மற்றும் ஃபெண்டர் பகுதியில் லங்டா மொடிஃப் உள்ளது. இத்துடன் வடகிழக்கு பகுதியை குறிக்கும் விசேஷ குறியீடுகள் மற்றும் ஒவ்வொரு யூனிட்டை தனிமைப்படுத்தும் வகையில் எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவை தவிர லிமிடெட் எடிஷன் மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் புதிய ஜாவா 42 டவங் எடிஷனிலும் 293சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.95 ஹெச்பி பவர், 26.84 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 18-17 இன்ச் அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் உள்ளது.

பிரேக்கிங்கிற்கு இருபுறமும் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளை சிங்கில் சேனல் அல்லது டூயல் சேனல் ABS செட்டப் உடன் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டவங் எடிஷன் விலை அதன் ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும். அந்த வகையில் ஜாவா 42 டவங் எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 94 ஆயிரத்து 142, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

Tags:    

Similar News