ஒன்றல்ல இரண்டு.. ஸ்பெஷல் எடிஷன் கார்களை அறிமுகம் செய்த வோக்ஸ்வேகன்
- இசை சார்ந்த அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகள் உள்ளன.
- ஸ்கோடா ஸ்லேவியா மாடலிலும் இதே அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்டுஸ் மற்றும் டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சில வாரங்களுக்கு முன்பு டைகுன் டிரையல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சவுண்ட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய வோக்ஸ்வேகன் விர்டுஸ் சவுண்ட் எடிஷன் மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 52 ஆயிரம் என்று துவங்குகிறது. டைகுன் சவுண்ட் எடிஷன் விலை ரூ. 16 லட்சத்து 33 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் மெக்கானிக்கல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாமல், இசை சார்ந்த அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சவுண்ட் எடிஷன்என்ற பெயருக்கு ஏற்றார் போல் இரு மாடல்களிலும் ஸ்பீக்கர் மற்றும் ஆம்ப்லிஃபயர் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் பவர்டு முன்புற இருக்கைகள் உள்ளன. இதே போன்ற அம்சங்கள் இரு மாடல்களின் GT பிளஸ் வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வோக்ஸ்வேகன் போன்றே ஸ்கோடா நிறுவனமும் தனது ஸ்லேவியா மாடலில் இதே அப்டேட்களை வழங்கி உள்ளது.
இரு கார்களின் வெளிப்புற சி-பில்லர் மற்றும் கதவுகள் அருகே ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜிங் வழங்கப்படுகிறது. டைகுன் மாடலில் காண்டிராஸ்ட் நிற ரூஃப் மற்றும் விங் மிரர்கள் வழங்கப்படுகிறது. வோக்ஸ்வேகன் விர்டுஸ், டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்கள்- லாவா புளூ, கார்பன் ஸ்டீல் கிரே, வைல்டு செர்ரி ரெட் மற்றும் ரைசிங் புளூ என நான்கு நிறங்களில் கிடைக்கின்றன.
வோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்களில் 1.0 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்.பி. பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு கார்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஸ்கோடா ஸ்லேவியா, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் மாடல்களுக்கும், டைகுன் மாடல் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கும் போட்டியாக அமைகின்றன.